நான் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். ஐந்து மாதங்களுக்கு முன்பு எனக்கு குதிகால்களில் கடுமையான வலி ஏற்பட்டது. காலையில் கண்விழித்ததும் உடனடியாக கட்டிலில் இருந்து காலை தரையில் வைத்து விட முடியாது. பத்து நிமிடங்கள் அமர்ந்திருந்த பின்பு தான் மெல்ல எழுந்து நடக்கவே முடியும் என்ற நிலை. கல்லூரியில் தினமும் குறைந்தது மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் நின்று கொண்டே வகுப்பெடுக்க வேண்டும். மேலும் கல்லூரிக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரமாவது நடக்க வேண்டிய நிலையில் இருந்த நான் ஒரு கட்டத்தில் மிகவும் திண்டாடித்தான் போனேன்.
ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்டை அணுகி சிகிச்சை எடுத்ததில் வலி மாத்திரைகள், ஸ்ப்ரே, வெந்நீர்ப் பை ஒத்தடம், (ஹாட் வாட்டர் பேக்) என பரிந்துரை செய்தார். ஆனாலும் ஒன்றும் பலன் அளிக்கவில்லை. மேலும் மருத்துவர் எனக்கு வந்திருப்பது பிளான்டர் ஃபெசைட்டிஸ் என்ற நோய் என்றும், வலி மிகுதியானால் அறுவை சிகிச்சைதான் வழி என்றும் கூறினார். அறுபதுகளில் வரவேண்டிய நோய் நாற்பதுகளிலேயே வந்துவிட்டதே என மனம் கலங்கியது.
தெரிந்தவர்கள் பரிந்துரைத்த பாட்டி வைத்தியத்தையும் நான் விட்டு வைக்கவில்லை. அடுப்புத்தீயில் செங்கலைக் காட்டி சுட வைத்து, அதன் மேல் எருக்கம் இலைகளை பரப்பி, அதன் மீது குதிகால்களை வைத்து ஒத்தடம் கொடுத்ததில் தற்காலிகமாக வலி குறையும். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் வேகம் எடுக்கும்.
கடைசியாக என் கணவர் அனுபவம் மிக்க வயதான ஒரு எலும்பு சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் சென்றார். நான் இதுவரை எடுத்து வந்த சிகிச்சைகள் பற்றிய ரிப்போர்ட்டுகளை பார்த்த அவர், "ஒன்றும் கவலைப் படாதீங்க. பொதுவாக பற்குழிகளில் பாதிப்பு இருந்தால் அது உடலின் பிற பாகங்களில் அதனுடைய விளைவைக் காட்டும். தோல் நோய்கள் அல்லது குதிகால் வலி, மூட்டு வலியில் கொண்டு விடும்" என்றவர் ‘’எனவே ஒரு பல் டாக்டரிடம் போய் பற்களை சுத்தம் செய்து சொத்தைப்பற்கள் இருந்தால் அடைத்து விடுங்கள். நல்ல மிருதுவான செருப்புகளை மட்டும் பயன்படுத்துங்கள். தாங்க முடியாமல் வலி வந்தால் மட்டும் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். நானும் அடுத்த நாளே பல் டாக்டரிடம் போய் என் இரண்டு சொத்தைப் பற்களை அடைத்து, பற்களையும் சுத்தம் செய்து கொண்டேன். ஒரே வாரத்தில் அத்தனை நாட்களாக பாடாய்ப்படுத்திய குதிகால் வலி என்னை விட்டுப் போய்விட்டது. என்னைப்போல குதிகால் வலியால் அவதிப்படும் எவருக்கேனும் இந்த கட்டுரை பயன் அளிக்கும் என்றே இதை எழுதுகிறேன்.