

நாம் அன்றாட வாழ்க்கையில் எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும் தெய்வத்தை நினைத்து தொடங்குவது ஒரு மரபாகும். இப்படி தெய்வத்தை வணங்கித் தொடங்குவதற்கு ஒரு முக்கியமான காரணம் அந்த தெய்வத்தின் சக்தியாகும். விநாயகர், சிவன், முருகன், திருமால் மற்றும் பல தெய்வங்கள் இருந்தாலும் அவர்களுக்கு நிகரான சக்தியைப் பெற்றுள்ளவை சிறுதெய்வங்களாகும். இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த தெய்வங்களில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டைக்கு அருகாமையில் உள்ள ஆத்திப்பட்டிக்கு செல்லும் சாலை வழியில் அமைந்துள்ள ஸ்ரீ பெத்தம்மாள் கோவில் (pethammal temple) ஆகும். அந்தக் கோவிலினுடைய வரலாற்றை இக்கட்டுரையில் இனி விரிவாய் காண்போம்.
பிறந்தாள் பெத்தம்மாள்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகாமையில் உள்ள செம்பட்டி என்னும் சிற்றூரில் ஒரு குடும்பம் மிகவும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தது. அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள் பெத்தம்மாள் ஆவாள். பெத்தம்மாள் என்பவள் தாய், தகப்பன் சொல்வழி கேட்டு ஒழுக்கமான முறையில் வளர்க்கப்பட்ட ஒரு பெண்மணி ஆவாள். இவள் சிறுவயது முதல் செம்பட்டி என்னும் ஊரிலேயே வளர்ந்து வந்தாள்.
திட்டமிட்டார்கள் திருமணத்திற்கு!
அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளை இளம் வயதிலேயே மணம் முடித்துக் கொடுப்பார்கள். பெத்தம்மாளுக்கு செம்பட்டிக்கு அருகாமையில் உள்ள ஆத்திப்பட்டியில் பெத்தமாளின் உறவினர்களில் ஒரு நல்ல மாப்பிள்ளையுடன் திருமணம் செய்ய திட்டமிட்டார்கள்.
ஊர் போற்ற திருமணம்
திட்டமிட்டபடியே ஆத்திப்பட்டியில் உள்ள உறவுக்கார மாப்பிள்ளைக்கும் செம்பட்டியைச் சேர்ந்த பெத்தமாளுக்கும் ஊரே போற்றும் படி கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
தனிக்குடித்தனம்!
இனிதே திருமணம் நடைபெற்ற பிறகு பெத்தமாளும் அவளுடைய கணவரும் தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு என்னும் ஊரில் தனிக்குடித்தனம் இருந்து வந்தனர். இருவரும் “நகமும் சதையும் போல” அழகாக குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தனர்.
வீட்டில் பிரச்சனைகள்
தன்னுடைய கணவர் வீட்டார்கள் ஏதோ சொல்லிய வார்த்தையானது பெத்தமாள் மனதில் கோபத்தை ஏற்படுத்தியது. ஆகையால் வீட்டில் பிரச்சனையுடன் பெத்தம்மாள் இருந்து கொண்டிருந்தாள். “கல்லடி பட்டாலும் சொல்லடி படக்கூடாது” என்பது பழமொழி. பெத்தம்மாள் என்னதான் கணவர் வீட்டார்கள் அவளை கையால் அடித்திருந்தாலும் கூட அதை ஏற்றுக் கொண்டிருப்பாள். ஆனால் அவர்கள் பேசிய வார்த்தையானது அவள் மனதை புண்படும்படியாக இருந்ததாக கூறப்படுகிறது.
புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குச் சென்றாள்!
கோபம் அடைந்த பெத்தம்மாள் வருசநாடு விட்டு கிளம்பி தன்னுடைய தாய் வீடான செம்பட்டிக்கு வந்தாள். என்னதான் குடும்பத்தில் பிரச்னையாக இருந்தாலும் பெத்தம்மாள் கணவருடன் வராமல் இப்படி தனியாக வந்ததால், “கணவருடன் வந்தால் மட்டுமே நீ வீட்டிற்குள் வா! தனியாக வந்தால் வர வேண்டாம்” என்று தன்னுடைய தாய் வீட்டார்கள் கூறியவுடன் தன்னுடைய புகுந்த வீட்டிற்கும் செல்ல முடியாமலும் பிறந்த வீட்டிற்கு செல்ல முடியாமலும் நிற்கதியாய் நின்றாள் பெத்தம்மாள்.
மன்னர் கொடுத்த கட்டளை!
பிறகு பெத்தம்மாள் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள மன்னரிடம் தனக்கு நடந்த பிரச்னைகளைக் கூறி, தான் அக்னியில் இறங்கப் போவதாக கூறி அழுது நின்றாள். அதற்கு அப்போது இருந்த ராமநாதபுரம் மன்னர் “நான் கொடுக்கும் அக்கினியை உன் மடியில் வாங்கிக் கொள்! அந்த அக்கினி கீழே விழுந்தால் நீ அக்கினியில் இறங்க கூடாது! அப்படி கீழே விழவில்லை என்றால் நீ அக்கினியில் இறங்கிக் கொள்ளலாம்” என்று கட்டளையிட்டார்.
மடியில் அக்கினியை கொடுத்தால் அக்கினி எரிந்து கீழே விழுந்து விடும் என்று மன்னர் எண்ணினார். ஆனால் அது விதிவிலக்காய் போனது.
தீயில் இறங்கி தெய்வமாய் நின்றாள்!
ராமநாதபுரம் மன்னர் கொடுத்த அந்த அக்கினியை தன்னுடைய மடியில் வாங்கிய பெத்தம்மாள் அக்கினி கீழே விழாமல் அதனை வாங்கிக் கொண்டு ராமநாதபுரத்தில் இருந்து செம்பட்டிக்கும் ஆத்திப்பட்டிக்கும் இடையே உள்ள சாலை வழியில் இருந்த கருவேல மரத்தில் தான் வாங்கி வந்த அக்கினியை போட்டு வளர்த்து, உள்ளே இறங்கி மாண்டு மடிந்து தெய்வமாக நின்றாள் பெத்தம்மாள். புகுந்த வீட்டு மக்களும், பிறந்த வீட்டு மக்களும் இதனை அறிந்து வந்து பெத்தமாளைக் கண்டு கண்கலங்கி கையெடுத்து வணங்கி நின்றார்கள்.
சிறப்பு செய்யும் செம்பட்டி மக்கள்!
பெத்தம்மாள் ஆத்திப்பட்டியில் திருமணம் செய்து கொடுத்ததால் ஆத்திப்பட்டி மக்கள் பெத்தமாள் கோவில் அவர்களுக்கு சொந்தமானது என்றும் அவர்கள் மட்டுமே பூசாரிகளாக இருப்பார்கள் என்றும் கூறினார்கள். ஆனால் பெத்தம்மாள் பிறந்த ஊர் செம்பட்டி. ஆகையால் பெத்தம்மாள் கோவில் செம்பட்டி மக்களுக்கு சொந்தமானது என்றும் செம்பட்டி மக்களே பூசாரியாக இருப்பார்கள் என்றும் விவாதம் வந்தது. இதனை பெத்தம்மாளே முடிவு செய்ய வேண்டும் என்பதால் பெத்தம்மாள் முன்னிலையில் சீட்டு எழுதிப் போட்டு பார்த்ததில் மூன்று முறையும் “செம்பட்டி மக்கள்” என்று வந்ததால் இன்றுவரை செம்பட்டி மக்களே அந்த கோவிலுக்கு பூசாரியாக இருந்து கொண்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. பிறகு பெத்தம்மாளுக்கு அந்த இடத்திலேயே ஒரு சிறு கோவில் எழுப்பி இன்று வரை செம்பட்டி மக்கள் வாழையடி வாழையாக சிறப்பு செய்து வணங்கி வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெட்டவெளியில் காட்சியளிக்கும் பெத்தம்மாள்!
செம்பட்டி மக்கள் பெத்தம்மாளுக்கு கோபுரம் கட்ட முயற்சி செய்தபோது அது தோல்வியில் முடிந்தது. பிறகு பெத்தமாளிடம் உத்தரவு கேட்டபோது பெத்தம்மாள், 'எனக்கு எந்த ஒரு கோபுரமும் வேண்டாம்' என்றும் 'நான் மழையிலும் வெயிலிலும் தான் இருப்பேன்' என்றும் 'எனக்கு கோபுரம் கட்டினால் நான் நான்கு திசைகளில் உள்ள மக்களை பார்க்க முடியாது என்பதால் நான் இப்படியே இருந்து கொள்கிறேன்' என்றும் சொல்ல, இன்று வரை வெட்டவெளியில் மக்களுக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள் பெத்தம்மாள்.
பெத்தம்மாள் கோவில் பொங்கல்!
வருடம் தோறும் பங்குனி மாதம் பெத்தம்மாள் கோவிலில் பொங்கல் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முளைப்பாரி எடுத்தல், அக்கினிச் சட்டி எடுத்தல், பறவைக் காவடி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், ஆட்டுக்கிடாய் வெட்டுதல், முடிக்காணிக்கை செலுத்துதல், ஆயிரங்கண்பானை எடுத்தல், சேவல் வெட்டுதல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை மக்கள் பெத்தம்மாளுக்குச் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளை வரம் தரும் பெத்தம்மாள்!
திருமணம் முடிந்து நீண்ட காலமாக பிள்ளை இல்லாத பெண்கள் பெத்தம்மாள் கோவிலில் தொட்டில் கட்டி வணங்கிச் சென்றால் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் தொட்டில் கட்டி சென்றால் மறு வருடம் வரும்போது கையில் குழந்தையுடனே வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இப்படி பிள்ளை இல்லாத பெண்களுக்கு பிள்ளை வரத்தை தருகிறாள் பெத்தம்மாள்.
நல்ல முடிவை தரும் நாயகி!
நாம் எந்த ஒரு காரியத்தையும் செய்ய தொடங்கும் போது பெத்தம்மாள் கோவிலில் பூ கட்டி போட்டு பார்த்து அதில் எந்த பூ வருகிறதோ அதற்கு ஏற்றார் போல செயலை தொடங்குவார்கள் அல்லது செயலை தொடங்காமல் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நமது மக்களுக்கு நல்ல முடிவைத் தரும் நாயகியாக விளங்கிக் கொண்டிருக்கிறாள் நமது பெத்தம்மாள்.
துடியான பெத்தம்மாள்!
தன்னை வணங்கி வரும் பக்தர்களுக்கு ஏதேனும் ஒரு அநியாயம் ஏற்பட்டால் அந்த மக்கள் பெத்தமாளிடம் வந்து முறையிட, அது நியாயமாக இருந்தால், அநியாயம் செய்த மக்களை உடனடியாக தண்டித்து பக்தர்களுக்கு நல்ல நீதியை வழங்கும் தெய்வமாக இருக்கிறாள்.
“ அரசன் அன்று கொல்வான்!
தெய்வம் நின்று கொல்லும்!”
என்பது பழமொழி. ஆனால் அந்த பழமொழி பெத்தமாளுக்கு பொருந்துமா? என்றால் அது பொருந்தாது! ஏனென்றால் அநியாயம் செய்தவரை உடனடியாக தண்டிக்கும் தெய்வமாக இருக்கிறாள் துடியான பெத்தம்மாள்.
வேண்டிய வரங்களை தருபவள்!
திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம், குழந்தை இல்லாத மக்களுக்கு குழந்தை வரம், தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சுகங்களையும், குழந்தைகளுக்கு நல்ல கல்வி போன்றவற்றை நாம் பெத்தம்மாளிடம் வரங்களாகக் கேட்டால் அதனை அளிக்கும் தெய்வமாக இருக்கிறாள் பெத்தம்மாள்.
வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை போக்குவதற்கு தெய்வ சக்தியே என்றும் துணை நிற்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும். இப்படிப்பட்ட தெய்வ சக்தி என்பது சிறு தெய்வமாக விளங்கக்கூடிய ஒவ்வொரு தெய்வத்திடமும் இருக்கிறது. அப்படிப்பட்ட தெய்வம் தான் நமது பெத்தம்மாள்.