

செய்தி: பிரதமர் மோடி அசாம் மாநிலத்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்த பொழுது, கவுகாத்தி நகரில் சாருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பாரம்பரியமிக்க போடோ கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 23 மாவட்டங்களைச் சேர்ந்த அந்த சமூகத்தின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று கூடி பாகுரும்பா நடனம் ஆடினர்.
**********
பாகுரும்பா நடனம் (Bagurumba Dance):
வடகிழக்கு இந்தியாவில் அசாம் மாநிலத்தில் வசிக்கும் பழங்குடி மக்களான போடோ மக்களின் பாரம்பரிய நடனமான இது பாரம்பரியமாக ஒரு தலைமுறையிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்கு இயல்பாக கடத்தப்படுகிறது.
அசாமின் நாட்டுப்புற நடனங்களான பிஹு மற்றும் பாகுரும்பா இரண்டு நடனங்களும் வசந்த காலத்தில் நடைபெறும் பண்டிகைகளின் பொழுது ஆடப்படும் நடனங்களாகும். அசாமில் உள்ள முக்கிய நடனங்களில் போர்டால், ஸட்ரியா மற்றும் ஓஜபாலி ஆகிய நடனங்களும் அடங்கும். அநேகமாக எல்லா பழங்குடி திருவிழாக்களும் வசந்த காலத்தில் தான் நடைபெறும். இத்திருவிழா மதம், இனம், மொழி ஆகிய அனைத்தையும் கடந்து அசாம் மாநில மக்களை ஒன்றிணைக்கிறது.
பாகுரும்பா நடனத்துடன் பாகுரும்பா பாடலும் இடம்பெறுகிறது. காம் (kham- ஒருவகை டிரம்) சிஃபுங் (sifung-மூங்கில் புல்லாங்குழல்), பெபா (Pepa -கொம்பு) மற்றும் டோல் (dhol) போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பொதுவாக ஏப்ரல் மாத நடுப்பகுதியில் கொண்டாடப்படும் போடோக்களின் புத்தாண்டு பண்டிகையான பிவிசாகு (Bwisagu) விழாவின்போது ஆடப்படுகிறது. பெரும்பாலும் போடோ சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் இந்த நடனத்தை ஆடுகின்றனர். ஆண்கள் இசைக்கருவிகளை இசைக்கின்றனர்.
பாகுரும்பா நாட்டுப்புற நடனம் இயற்கையால் ஆழமாக ஈர்க்கப்படுகிறது. இந்த நடனம் பூக்கும் பூக்களை அடையாளப்படுத்துகிறது. மனித வாழ்க்கைக்கும் இயற்கை உலகிற்கும் இடையிலான நல்லிணக்கத்தை பிரதிபலிக்கிறது. பாரம்பரியமாக இளம் போடோ கலைஞர்களால் இணைந்து நிகழ்த்தப்படும் இந்த நடனம், பட்டாம்பூச்சிகள், பறவைகள், இலைகள், பூக்களைப் போன்ற மென்மையான அசைவுகளைக் கொண்டுள்ளது. நிகழ்ச்சிகள் பொதுவாக குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டு, நேர்த்தியாக காட்சியளிக்கும். இந்த நடனம் போடோ மக்களுக்கு ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது அமைதி, மகிழ்ச்சி, கூட்டு நல்லிணக்கத்தைக் குறிக்கிறது. மேலும் பிவிசாகு, போடோ புத்தாண்டு, டோமாசி போன்ற பண்டிகைகளுடன் தொடர்புடையது.
சமீபத்தில் அசாம் மாநிலத்தில் 10,000 போடோ கலைஞர்கள் இணைந்து நடத்திய மிகப்பெரிய பாகுரும்பா நடனம், ஒரு புதிய கின்னஸ் உலக சாதனையை இலக்காகக் கொண்டது.