

அந்தக்காலத்தில் தாத்தா ஒருத்தர் இங்க் பேனா வச்சுக்கிட்டு எழுதுவார். அதில் இங்க் போட மூடியைக் கழற்றி இங்க் நிரப்ப ஃபில்லர்ன்னு ஒண்ணு வச்சிருப்பார்.
அதன் மூலம் பாட்டிலில் இருந்து இங்க்கை உறிஞ்சி உள்ளே விடுவார். நிரம்பி வழியும் சமயத்தில் அதற்கென்று ஒரு கறை படிஞ்ச துணி இருக்கும். அதை வச்சு பேனாவை துடைப்பார். நிப் உடைஞ்சிடுச்சின்னா தேடிக்கிட்டு போய் நிப்பு மட்டும் வாங்கி மாற்றுவார்.
எத்தனையோ புதுவிதமான பேனாக்கள் வந்தாலும் அந்தப் பழசையே வச்சிருப்பார். அதற்குப் பல காரணங்கள். அது மூலமா நிறைய பேருக்கு கல்யாணப் பத்திரிக்கைகள் அட்ரஸ் எழுதி இருப்பார். முக்கியமான சந்தர்ப்பங்களில் அதை வச்சு கையெழுத்து போட்டிருப்பார்.. ராசி..
ஒரு பேனா தான்... அப்படின்னு நினைக்காதீங்க.
பல விஷயங்களில் நாம் அப்படித்தான் இருக்கோம். சிலருக்கு சில சட்டைகளை விட மனசு வராது. அதை அணிந்து சென்ற போது பல காரியங்கள் பலிச்சிருக்கும். பழசா போய்விட்டாலும் சில முக்கியமான நேரங்களில் அதை அணிந்து கொள்வார்கள்.
பிரபல வக்கீல்கள் தங்கள் கவுனை அப்படி கவசமாக அணிவதுண்டு. அதில் பல பூச்சி அரித்த ஓட்டைகள் இருக்கும்.
சில தாய்மார்கள் பழைய புடவைகளை பாத்திரக்காரனிடம் போட்டு பாத்திரங்களை வாங்கி நிறைய அடுக்கி இருந்தாலும் சிலதை அப்படியே வச்சிருப்பாங்க. அதில் ஒன்று தன்னைப் பெண் பார்க்க வந்த போது கட்டியதாகக் கூட இருக்கலாம். அது சந்தோஷ நினைவுக்காகக் கூட இருக்கலாம். அல்லது "இதனால் தானே இப்படி நமக்கு இந்த நிலை" என்ற விதி வலிமையைச் சொல்லும் கதாபாத்திரமாகக் கூட அதை நினைக்கலாம்.
எத்தனை புது வித குக்கர்கள், நான் ஸ்டிக் கருப்பு, மரூன் கலரில் சமையல் பாத்திரங்கள் கிச்சனில் இருந்தாலும், பழைய, ஒரு காது ஒடிந்த அலுமினிய வாணலியில் தான் பல சமையல்கள் நடக்கும். அதன் பின்ணணி மற்றும் என்ன செண்டிமெண்ட் என்று அவர்களைக் கேட்டால் தான் தெரியும்.
இதன் சைக்காலஜி தான் என்ன..? ஏன் ஒரு மேஜையை, நாற்காலியை, ஸ்டூலை நேசிக்கிறோம். அந்த உயிரற்ற பொருட்கள் எப்படி நம்முடன் பிரியமாகி மனதில் இடம் பிடித்தன..?
பல கோடீஸ்வரக் குடும்ப இல்லங்களில் தட்டுமுட்டு சாமான் அறை என ஒன்று இருக்கும். வருஷத்தில் எப்போதாவது எஜமான் அல்லது எஜமானி அம்மாள் உள்ளே போய் பார்த்து பழசை நினைச்சு ஆதங்கப் படுவார்கள்.
அதில் அமெரிக்காவில் வசிக்கும் தன் மகன் அல்லது மகள் ஓட்டிய மூணு சக்கர சைக்கிள் ஒண்ணு இருக்கும். பல காட்சிகளை சினிமா போல அது சொல்லும். இதை சில திரைப்படங்களிலும் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள்.
அண்ணாமலையில் ரஜினி ஒரு நாள் தட்டு முட்டு சாமான் அறைக்குப் போய் தன் பழைய பால் கேன் சைக்கிளைப் பார்த்து ஆசையாகத் தடவிப் பார்ப்பார். அது அவர் தொழில் நண்பன். தன் காதலி, மனைவியை வைத்து ஓட்டிய காதல் வாகனம். "அன்று இருந்த நிம்மதி இன்று இல்லையே" எனத் தவிப்பார்.
பல பிரபலங்கள் தங்கள் கார்களை மாற்றுவதில்லை. இந்த ஜடப் பொருட்கள் மீதான அபிமானம் ஒரு செண்டிமெண்ட்டாக பலர் வாழ்க்கையில் மாறி உள்ளதை அறியலாம்.
ராசி.. இவற்றைப் பகுத்தறிவாளர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் பலரது வீடுகளில் பயன்படாத பொருட்கள் பல அகற்றப்படாத காரணம் அவை அவர்களது வாழ்க்கையோடு பின்னி வந்தவை என்பதே..!
உயிரற்ற பொருட்களையும் நம்மை அறியாமல் நாம் நேசிக்கிறோம் என்பதால் பிரபஞ்சத்தில் உயிரற்றது எதுவுமில்லை.. அணுவுக்கும் அறிவு, நேசம், பாசம் உண்டு என்ற வேதத்தின் கூற்று உண்மை ஆகிறது.