ராசி

குறுங்கதை
ராசி
Updated on

ஓவியம்:  சுதர்ஸன்

ன்று காலையில் எழுந்துகொள்ளும்போதே டென்ஷனாக இருந்தான் அசோக். ஏனோ கடுப்பாக இருந்தது எரிச்சலுடன் காலண்டரைப் பார்த்தான் அவனது ராசிக்கு இன்றைய பலனாக ‘நஷ்டம்’  எனப் போட்டிருந்தது.


அடக் கடவுளே! இது வேறயா… போச்சுடா! என அலுத்துக்கொண்டே எழுந்து வந்து சோம்பலுடன் பல்லைத் துலக்கி, காக்காய் குளியலைக் குளித்து வெளியே வந்தான்.


தாகமாக இருந்தது. டைனிங்டேபிளில் இருந்த கண்ணாடி ஜக்கை எடுத்து தம்ளரில் கவிழ்த்தான்.  நிறைய வேலைப்பாடுகளுடன் வெகு ஜோராக இருந்தது அந்த ஜக். நேற்று கடைத்தெருவில் இதைப் பார்த்த கவிதா வெகு ஆசையாக வாங்கி வந்திருந்தாள். யோசித்தபடியே ஜக்கை வேகமாக எடுத்தான்.


கைதவறி… படீரென கீழே விழுந்து நொறுங்கியது..
“என்னங்க! அழகாக இருக்கேன்னு நேத்துதான் ஐநூறு ரூபா கொடுத்து வாங்கினேன். இப்படி போட்டு ஓடச்சிட்டீங்களே! பாத்து எடுக்கக்கூடாதா?” என அலுத்துக்கொண்டாள் மனைவி கவிதா.


“சாரிம்மா… ஜாக்கிரையாத்தான் எடுத்தேன். கைதவறிடுச்சு...” எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

ஆபிஸில்... "சார்! உங்க ப்ரண்ட் சுந்தர் லைனில் இருக்கார்…” என்றாள் செகரட்டரி.


"இவன் வேற… என அலுத்துக்கொண்டவன், நான் இல்லைன்னு சொல்லிடு" என்றான்.
அவனுக்கு வேற வேலையில்லை. ஏதாவது செலவை இழுத்துவிடுவான்… என மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டான்.


"சார்! இன்னைக்கு அந்த கிளன்மார்க் டிரேடிங் மீட்டிங் இருக்கு" என்றார் மேனேஜர்.
யோசிக்காமலே "கேன்சல் பண்ணிடு" என போனை உயிர்ப்பித்தவனுக்குக் கண்ணில்பட்டது...

சுந்தர் சேப்பாக்கம் க்ரௌண்டில் சதிஷூடன்
கூத்தடித்துக்கொண்டிருந்தவன் விதவிதமானப் புகைப்படத்துடன் ஸ்டேட்ஸ் வேறு போட்டிருந்தான்.

போனை எடுத்து  "எங்கடா இருக்கீங்க?" என்றான் கோபத்துடன் அசோக்.

"மச்சி! ஓசியில இரண்டு டிக்கெட் கெடச்சுதுடா. முதலில் உனக்குத்தான்டா போன் பண்ணேன். நீ இல்லைன்னு சொன்னாங்க உன் செகரெட்டரி. எங்கடா போயிருந்த? சரி வேறவழியில்லாம நம்ம  சதிஷோட வந்துட்டேன். செம மேட்ச் மச்சி நீ மிஸ் பண்ணிட்டடா..." என வெறுப்பேற்றினான் எரிச்சலுடன் போனை வைத்தான்.


வீட்டுக்குக் கிளம்பும்போது மேனேஜர் தயங்கியபடி…  "சார்!... மீட்டிங்குக்கு நாம போகாததால அந்த ஆர்டர் சேகர் டிரேடர்ஸ்க்குப் போயிடுச்சு" என்றான்.
எதுவும் பேசாமல்... ஆத்திரத்துடன் காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.


எதோ வேலையாக இருந்த கவிதா இவன் முகவாட்டத்தைக் கண்டு வருந்தியவள், “ஏங்க! காலையிலிருந்து உம்முனு இருக்கீங்க... மதியம் கேலண்டரில் கூட பார்த்தேன் உங்க ராசிக்கு இன்னைக்கு ‘இன்பம்’ன்னு வேற போட்டிருந்தே... ஆனா இப்படி இருக்கீங்களே...” என்றாள் கவிதா ஏமாற்றத்துடன்.


“இல்லியே... ‘நஷ்டம்’ன்னுதானே போட்டிருந்தது…” என்று திரும்பி காலண்டரைப் பார்த்தான். ‘இன்பம்’ என இளித்தது காலண்டர்.


“சாரிங்க! நான் காலையில் தேதி கிழிக்க மறந்துட்டேன். மதியம்தான் கிழிச்சேன்” என்றாள் கவிதா.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com