ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்த ஒரு பெண், இன்றைக்கு இந்தியாவின் ஆடை வடிவமைப்பு துறையில் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார். வாருங்கள் அவரை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
எட்டா கனியான பள்ளி படிப்பு
பெண்கள் படித்து என்ன செய்யப்போகிறார்கள் என்ற ஆணாதிக்க சிந்தனைபோக்கு அதிகளவு காணப்படும் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில் உள்ள ராவத்சர் எனும் சிறு கிராமத்தை சேர்ந்தவர்தான் ரூமா தேவி. ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தில் பிறந்த இவர் மிகவும் கட்டுகோப்பான குடும்ப சூழ்நிலையில்தான் வளர்ந்துள்ளார்.
ரூமா தேவி எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவரின் தாயார் துரதிர்ஷ்டவசமாக காலமாகிவிட்டார். தாயின் மறைவுக்கு பிறகு குடும்பத்தை காக்கும் பொறுப்பு வீட்டின் மூத்த மகளான 13 வயது சிறுமி ரூமாதேவியின் வசம் வந்தது. இதனால் தன்னுடன் பிறந்த ஆறு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் ஆகியோரை பாதுகாப்புடன் வளர்க்கும் சுமையை ஏற்க நேரிட்டது.பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட ரூமாதேவிக்கு அந்த சிறுவயதில் வீட்டில் பெரியவர்கள் சொல்படி கேட்டு நடப்பதை தவிர வேறு வழியில்லை. படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதனை வெளிப்படுத்தும் சூழ்நிலையும் அவரின் குடும்பத்தில் இல்லை. அப்போது ரூமாதேவிக்கு ஆறுதலாக இருந்தது அவரின் பாட்டிதான்.
பாட்டி கற்றுத்தந்த பாரம்பரிய கலை
வீட்டு வேலை நேரம் போக, பாட்டியுடன் பொழுதை கழிக்கும் நேரமெல்லாம் அவரிடமிருந்து ஆடைகளுக்கு எம்பிராய்டரி போடும் கைவினை கலையை கற்றுக்கொண்டார் ரூமாதேவி. ஆனால், அப்போது அவர் நினைத்திருக்க மாட்டார் எதிர்காலத்தில் தான் ஆடை வடிவமைப்பு துறையில் சாதனைபுரிவோம் என்று. எம்பிராய்டரி போடும் அடிப்படை அம்சங்களை பாட்டியிடம் கற்றுக்கொண்ட ரூமாதேவி, அதன்பிறகு குடும்ப வறுமானத்திற்காக எம்பிராய்டரி கலையை முறைப்படிக் கற்றுக்கொண்டார்.
இதனிடையே ரூமாதேவிக்கு திருமணமாக அவர் புகுந்த வீடு, பிறந்த வீட்டைப்போல் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றதாக இல்லை. இதனால், தான் கற்றுக்கொண்ட எம்பிராய்டரி கலை மூலம் சிறிதளவு வறுமானம் ஈட்டிவந்தார் ரூமாதேவி. ஆனால், அந்த வருமானம் குடும்ப தேவையை நிவர்த்தி செய்வதாக இல்லை. இதற்கிடையில்தான் அந்த சோகமாக நிகழ்வு ரூமாதேவியின் வாழ்க்கையில் நடந்தது. கடும் காய்ச்சல் காரணமாக அவரின் முதல் மகன் நோய்வாய்பட்ட நேரத்தில், மருத்துவத்திற்கு போதுமான பணம் இல்லாததால் ரூமாதேவியின் மகனை காப்பாற்ற முடியவில்லை.
தலைமகனை இழந்த ரூமாதேவி, இனி பணத்திற்காக மற்றவர்களை நம்பி இருப்பதைவிட சுயமாக தொழில் தொடங்க முடிவெடுத்தார். அப்போது அவருக்கு உதவியாக இருந்தது பாட்டியிடம் அவர் கற்றுக்கொண்ட எம்பிராய்டரி கலைதான். ஆனால், எம்பிராய்டரி போன்ற வேலைபாடுகளை தனி ஆளாக செய்யமுடியாது என்பதை உணர்ந்த ரூமாதேவி, உதவிக்கு தன் கிராமத்தில் எம்பிராய்டரி வேலைபாடு தெரிந்த பத்து பெண்களை ஒன்றிணைத்து ’தீப் தேவால்’ எனும் பெண்கள் சுயதொழில் குழுவினை உருவாக்கினார்.
இதன்பின்னர், ஆடைகளை வடிவமைக்க மற்றும் எம்பிராய்டரி வேலைகளை மேற்கொள்ள சுய உதவி குழுவில் இருந்த ஒவ்வொரு பெண்களிடமும் ரூபாய் 100 சேகரித்து செகண்ட் ஹேண்ட் தையல் இயந்திரங்களை வாங்கிபோட்டார் ரூமா. பள்ளி படிப்பை கூட முடிக்காத ரூமா, ராஜஸ்தான் நகர் வீதிகளில் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி ஆர்டர்களை பிடித்தார். ரூமாதேவியின் எண்ணமும் மற்ற குழு உறுப்பினர்களின் கடின உழைப்பும் ’தீப் தேவால்’ சுயஉதவிக் குழுவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. இதனுடைய அடுத்தகட்டமாக 2008ம் ஆண்டு Gramin Vikas Evam Chetna Sansthan எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கினார் ரூமாதேவி. இதன்மூலம் பார்மர் மாவட்டத்தில் மட்டும் அறியப்பட்டுவந்த அவரின் எம்பிராய்டரி வேலைபாடுடன் கூடிய ஆடை வடிவமைப்பு ராஜஸ்தான் முழுவதும் தெரியவந்தது.
ஆடை வடிவமைப்பில் ஆண்டுக்கு 5 கோடி!
தன்னுடைய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு கிராமங்களில் உள்ள பெண்களை சுயஉதவி குழுக்களாக திரட்ட களமிறங்கினார் ரூமாதேவி. அவரின் கூட்டங்களுக்கு வரும் பெண்களுக்கு எம்பிராய்டரி கலை மற்றும் தையல் ஆகியவற்றை கற்றுக்கொடுத்தார். இதன்பிறகு, சுயதொழில்புரிய ஆர்வமுள்ள பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆடைகளுக்கான எம்பிராய்டரி ஆர்டர்களை வழங்கி தன்னுடைய தொழிலை சிறிது சிறிதாக விரிவுப்படுத்தினார் . இவ்வாறு 75க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று ரூமாதேவி பயிற்சி அளித்த பெண்களின் எண்ணிக்கை மட்டும் 22 ஆயிரத்தை எட்டியுள்ளது. அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் 15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க வழிவகை செய்துள்ளது ரூமாதேவியின், Gramin Vikas Evam Chetna Sansthan தொண்டு நிறுவனம்.
பொதுவாக கைவினை ஆடை வடிவமைப்புகளுக்கு பெயர்போன ராஜஸ்தானில் பெண்களின் கூட்டுமுயற்சியால் தனக்கான தனி இடத்தை பிடிக்கத் தொடங்கினார் ரூமாதேவி. கடந்த இருபது ஆண்டுகளாக ராஜஸ்தானில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் எம்பிராய்டரி ஆடைகளில் ரூமாதேவி குழுவினரின் உழைப்பு அடங்கியுள்ளது. ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் லாபம் அடையும் அவரின் தொண்டு நிறுவனம், ராஜஸ்தானில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்களுக்கு எம்பிராய்டரி ஆடை வடிவமைப்பு மூலம் தனி அடையாளத்தை வழங்கியுள்ளது.
தன்னுடைய எம்பிராய்டரி ஆடைகள் குறித்த செய்திகளை அளித்த ஊடகங்களில் வாயிலாக பிரபலமான ரூமாதேவி, தேசியளவில் நடைபெற்ற ஆடைவடிவமைப்பு நிகழ்ச்சிகளிலும், லண்டன், சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நடைபெற்ற கைத்தறி ஆடை வடிவமைப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார். அதேபோல்,ரூமாதேவியின் திறமையை கௌரவிக்கும் விதமாக இலங்கை அரசு அவருக்கு ஷில்பா அபிமானி விருது வழங்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து iWoman Global Awards பட்டியலில் உலகளவில் ஆளுமைமிக்க 51 பெண்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார் ரூமாதேவி. கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் அவருக்கு நரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டின் முக்கிய ஆடை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து தன்னுடைய தனித்துவமான மற்றும் பாரம்பரிய எம்பிராய்டரி வடிவமைப்புகளில் கவனம் செலுத்திவருகிறார் ரூமாதேவி.
இந்நிலையில், உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்ட்டில் விரைவில் கௌரவ விரைவுரையாளராக பேசவுள்ளார் ரூமாதேவி.
எட்டாம் வகுப்பு மட்டும் படித்து, 13 வயதில் குடும்ப பாரத்தை சுமக்கத் தொடங்கிய ரூமாதேவி இன்று தன்னுடைய தனித்துவமான திறமையாலும், கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியாலும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நம்பிக்கை ஒளியாக உள்ளார் என்றால் அது மிகையல்ல.