

ஜார்க்கண்டில் கடந்த 20 ஆண்டுகளாக ரக்ஷா பந்தன் நாளில் மரங்களுக்கு ராக்கி கட்டும் தனித்துவமான இயக்கம் நடைபெறுகிறது. 700 கிராமங்களில் ஒரு லட்சம் மரங்களுக்கு ராக்கி கட்டி, அவற்றை பாதுகாப்பதாக கிராமவாசிகள் உறுதி மொழி எடுக்கிறார்கள். முதன்மை வனப் பாதுகாவலர் சஞ்சீவ் குமார் தொடங்கிய இந்த முயற்சி, வனப்பரப்பை 1,128 சதுர கிலோமீட்டர் அதிகரிக்கச் செய்துள்ளது.
மரங்களுக்கு ராக்கி கட்டுகிறார்கள். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தில் நடக்கும் விநோதமான ரக்ஷா பந்தன் திருவிஷா...
பொதுவாக ரக்ஷா பந்தன் என்றால் சகோதர சகோதரிகளுக்கு இடையே பாசம் மற்றும் உறுதியான பிணைப்பை உண்டாக்கும் விதத்தில் சகோதரனுக்கு சகோதரி, கையில் ராக்கி கயிற்றை கட்டி இனிப்புகளையும் பரிசுகளையும் பகிர்ந்து கொள்ளும் திருநாளாகும்.
ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள மக்கள் சிறிது வித்தியாசமான முறையில் ராக்கி கயிற்றை மரங்களுக்கு கட்டுகிறார்கள்.
நம்முடைய வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் முக்கியமான பங்கை இந்த மரங்கள் வகிப்பதால் மரத்திற்கு அவர்கள் ராக்கி கயிற்றை கட்டுவதாக கூறுகிறார்கள்.
ஒரு மாத கால 'மரம் காப்போம்' என்கிற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இன்று வெள்ளிக்கிழமை, ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு சுமார் 700 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மரங்களுக்கு ராக்கி கட்டுவார்கள். முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சஞ்சீவ் குமார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, 24 மாவட்டங்களிலும் உள்ள மூன்று லட்சம் மரங்களை உள்ளடக்கிய நோக்கத்தை கொண்டுள்ளது.
சஞ்சீவ் குமார் அவர்களின் சிந்தனையில் உதித்த இந்த இயக்கம், ஒரு காலத்தில் மாவோயிச நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த தன்பாத் மாவட்டத்தின் லுகையா என்ற கிராமத்தில் 2004-ல் தொடங்கியது.
குமார் அவர்களின் கூற்றுப்படி, இந்த முயற்சியானது பிற்காலத்தில் ஜார்க்கண்ட் முழுவதும் விரிவடைந்துள்ளது, மேலும் 12,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மரத்தில் ராக்கியை எதற்காக கட்டுகிறார்கள்??
ரக்ஷா பந்தன் அன்று, சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் பாதுகாப்பதாக தங்களுக்குள் உறுதியளிப்பார்கள். ஆனால், இங்கே, மக்கள் இதே கருத்தை மரங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். அதாவது கிராம மக்கள் ஒரு மரத்தில் ராக்கியை கட்டி, அதைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுக்கிறார்கள்.
காடுகள் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதை தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. மரங்கள் நமக்குத் தேவையான வளங்களை வழங்குவதோடு மட்டுமில்லாமல் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதரவளிக்கின்றன. மேலும் நீர் மற்றும் விவசாயத்திலும் பங்கு வகிக்கின்றன. எனவே, தற்போதுள்ள மரங்களை காப்பது நம்முடைய முக்கியமான மற்றும் அத்தியாவசியமான கடமையாகும் என்பதே இந்த மரங்களுக்கு ராக்கி கட்டும் பிரச்சாரத்தின் மிக முக்கியமான நோக்கமாகும்.
இந்த பிரச்சாரத்தினால் இது வரை கிடைத்த பலன்:
கடந்த இருபது ஆண்டுகளில் ஜார்க்கண்டின் வனப்பரப்பு அதிகரித்துள்ளதை குமார் அவர்கள் இந்திய வன ஆய்வுத் துறையின் புள்ளி விவரங்கள் மூலமாக சுட்டிக் காட்டினார்.
புள்ளி விவரங்களின்படி, மாநிலத்தின் வனப்பரப்பு 2001-ல் 22,637 சதுர கிலோமீட்டராக இருந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு மதிப்பீட்டில் 23,765.78 சதுர கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. அதாவது 1,128 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, ஜார்க்கண்டின் புவியியல் பரப்பளவில் 29.76 சதவீதம் வனப்பரப்பாக இருந்தது.
இதில் 2,635.35 சதுர கிலோமீட்டர் மிக அடர்ந்த காடுகள், 9,640.99 சதுர கிலோமீட்டர் மிதமான அடர்ந்த காடுகள் மற்றும் 11,489.44 சதுர கிலோமீட்டர் திறந்தவெளி காடுகளும் அடங்கும்.
மரங்கள் நடப்பட்ட பிறகு அவற்றைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதற்கான மாநில அரசின் ஒரு பகுதியாகவே இந்த ரக்ஷா பந்தன் இயக்கமும் அமைந்துள்ளது.
இந்த இயக்கம் எளிமையானதாக நமக்குத் தோன்றலாம். ஆனால், உண்மையில் ஒரு மரத்தில் ராக்கி கட்டுவதன் மூலம், மக்கள் அதைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்து கொள்கிறார்கள் மேலும் இந்த இயக்கம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடிக்கப் பட்டுள்ளது. இந்த இயக்கமானது, வனப் பாதுகாப்பு, நீர் சேமிப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களோடும் தொடர்புடையதாகவும் கருதப் படுகிறது.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், இயற்கையுடன் பிணைப்பை ஏற்படுத்தி, எதிர்கால சந்ததிக்கான பசுமையான பூமியையும் நிலையான வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் எளிய வழிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.