

இந்த கட்டுரையில் பச்சை மாங்காயின் புளிப்பும், வெல்லத்தின் இனிப்பும், மசாலாப் பொருட்களின் நறுமணமும் கலந்த ‘கட்டா மிட்டா’ என்ற அந்தமான் ஸ்டைல் இனிப்பு செய்வது விளக்கப்படுகிறது. மாங்காயை வேக வைத்து வெல்லப் பாகு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக சமைத்து, சிற்றுண்டி, விருந்து, கோடைக்கால உணவாக பரிமாறலாம்.
ஆறு வருடங்களுக்கு முன்பு நான் அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள என் அக்கா வீட்டிற்கு சென்றேன். வீட்டின் அருகே ஒரு பெரிய மாமரம் நிறைய மாங்காய் கொத்துக் கொத்தாய் தொங்கியது. அப்பொழுது நான் என் அக்காவிடம், “இவ்வளவு மாங்காய் இருக்கிறது, இதை பறித்து விற்பனை செய்வீங்களா?”
“இல்லடா தம்பி, இத நாங்க விற்பனை செய்ய மாட்டோம். இங்க நாங்கள் அதில் ஒரு ஸ்வீட் செய்வோம்.”
"அப்படியா! அது என்ன ஸ்வீட்?”
“கட்டா மிட்டா.”
“இரு உனக்கும் செஞ்சு தாரேன்.”
என்று அக்கா கூறிய பிறகு, இருவரும் மாங்காய்களை பறித்தோம்.
இப்பொழுது அந்த மாங்காய் ஸ்வீட் பற்றி இங்கே காண்போம்.
மாங்காய் என்பது இந்தியாவின் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றாகும்.
பச்சை மாங்காயின் புளிப்புச் சுவையும், வெல்லத்தின் இனிப்பும், மசாலாப் பொருட்களின் நறுமணமும் இணையும் போது உருவாகும் சுவையான உணவே "கட்டா மிட்டா". ஹிந்தி மொழியில் "கட்டா (Khatta)" என்பது புளிப்பையும், "மிட்டா அல்லது மீதா (Meetha)" என்பது இனிப்பையும் குறிக்கும். இந்த உணவு சிற்றுண்டியாகவும், உணவுக்குத் துணையாகவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் ஏற்றது.
தேவையான பொருட்கள்:
1. பச்சை மாங்காய் – 3
2. வெல்லம் – 250 கிராம்
3. சர்க்கரை – 2 மேசைக்கரண்டி (இனிப்பு சுவை அதிகம் வேண்டுமென்றால் சேர்க்கலாம்)
4. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
5. வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
6. மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி
7. கருப்பு உப்பு – ½ தேக்கரண்டி (இருந்தால் சேர்த்துக் கொள்ளவும்)
8. சாதாரண உப்பு – தேவையான அளவு
9. இஞ்சி துருவல் – 1 தேக்கரண்டி
10. தண்ணீர் – 2 கப்
மாங்காயை தேர்வு செய்தல்:
நல்ல புளிப்புச் சுவை கொண்ட, முற்றாத பச்சை மாங்காயைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காயில் பூச்சி சேதம் அல்லது கருப்பு புள்ளிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
தயாரிக்கும் முறை:
முதலில் மாங்காயைக் கழுவி தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து மாங்காய் துண்டுகளை 8–10 நிமிடங்கள் வேகவிடவும். மாங்காய் மென்மையாக ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டி, வேகவைத்த மாங்காயுடன் சேர்க்கவும். பின்னர் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கருப்பு உப்பு, இஞ்சி துருவல் ஆகியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும்.
கலவை நன்றாகக் கெட்டியாகி பாகு பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி முழுமையாக ஆறவிடவும்.
பரிமாறும் முறை:
இந்த கட்டா மிட்டாவை சிறிய கிண்ணங்களில் பரிமாறலாம். சப்பாத்தி, பூரி, ரொட்டி போன்றவற்றுடன் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மிதமான காரத்துடன் கொடுக்கலாம்.
சுவையாக வர சில குறிப்புகள்:
1. வெல்லம் மட்டுமே பயன்படுத்தினால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
2. காரம் மற்றும் இனிப்பை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. சுத்தமான கண்ணாடி ஜாடியில் சேமித்தால் பல நாட்கள் பயன்படுத்தலாம்.
4. எப்போதும் உலர்ந்த கரண்டியால் மட்டும் எடுக்க வேண்டும்.
ஊட்டச்சத்து:
மாங்காயில் வைட்டமின் C, வைட்டமின் A, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் சில தாதுக்கள் காணப்படுகின்றன. அளவோடு சாப்பிடுவது நல்லது.
பயன்பாடுகள்:
இந்த இனிப்பை வீட்டுச் சிற்றுண்டி, விழாக்கள், விருந்துகள் மற்றும் குடும்பச் சந்திப்புகளில் பரிமாறலாம். கோடைக்காலத்தில் மிகவும் சுவையாக இருக்கும்.
மாங்காய் கட்டா மிட்டா என்பது புளிப்பு, இனிப்பு மற்றும் லேசான காரம் ஆகிய மூன்று சுவைகளையும் ஒருங்கே தரும் சிறந்த உணவு. எளிய பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இந்த உணவு அனைவரையும் கவரக்கூடிய சுவையைக் கொண்டுள்ளது. சரியான அளவில் மசாலாப் பொருட்களையும் வெல்லத்தையும் பயன்படுத்தினால் மிகவும் சுவையான கட்டா மிட்டாவை எளிதாகத் தயாரிக்கலாம். இவ்வாறு கட்டா மிட்டா வை செய்து கொடுத்து அனைவரையும் மகிழ்வியுங்கள்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், உங்கள் வீட்டின் சமையலறையில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு, பாரம்பரிய அந்தமான் சுவையில் புளிப்பு-இனிப்பு நிறைந்த கட்டா மிட்டாவை எளிதாகத் தயாரித்து உங்கள் குடும்பத்தினரை அசத்தலாம்.