சிறுகதை: இப்படியும்!

ரமேஷ் முருகம்மா சந்திப்பு சொல்லும் மனிதநேயம் நிறைந்த சிறுகதை!
ramesh-helps-old-woman-story
ramesh-helps-old-woman-storycredit AI image
விஜயலட்சுமி கண்ணன்

I am a senior citizen living in Chennai. An Advocate by profession, a writer and orator in both English and Tamil. I do translations from English, Hindi, Bengali and Malayalam to Tamil. My short stories and poems are published in many magazines and e magazines. I have a small and happy family with my husband, son, daughter in law and grandson.

Updated on: 
mm
mm

ramesh-helps-old-woman-story:

வேகாத வெயில். தை மாதம் முடிந்து மாசி பிறந்துவிட்டது.

காலை எட்டு மணி வரையிலும் எதிரில் உருவம் தெரியாத அளவிற்குப் பனி மூடிக்கிடக்கும்; பிறகு, நாள் முழுதும் வெயில்தான்...

ரமேஷ் அவசரஅவசரமாகத் தன் பைக்கை எடுத்தான். "போகும்போதே சில வேலைகளை முடித்துவிட வேண்டும். அப்பவே கிளம்பி இருக்கணும், லேட் ஆகும்போல் தெரிகிறது," என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு பைக்கை உதைத்தான். செல்லும் வழியில் உள்ள வேலைகளை மளமளவென்று செய்துவிட்டு, மீண்டும் தெருவில் இறங்கி வண்டியைக் கிளப்பினான்.

"அரை மணி நேரத்தில் போய் சேர்ந்துவிடலாம். என்னைப் பார்த்ததும் அக்கா ரொம்ப சந்தோஷம் அடைவாள்," என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.

கொஞ்ச தூரத்தில் ஒரு வயதான மூதாட்டி எதிரே நடந்து வந்துகொண்டிருந்தாள். மஞ்சள் நிற நூல் சேலை உடுத்தி, வெள்ளை நிற ரவிக்கை அணிந்திருந்தாள். சேலையும் வெளுத்து கிட்டத்தட்ட ரவிக்கையின் நிறத்திற்கு வந்துவிட்டது. தலை கோடாலி முடிச்சு.

முகம் வெயிலில் நடந்து, வியர்த்துச் சோர்ந்துபோய் இருந்தது. இரு கைகளிலும் பெரிய சுமைப்பையோடு தளர்ந்து, ஆங்காங்கே நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தள்ளாடி நடந்து வந்துகொண்டிருந்தாள்.

ரமேஷ் அருகில் சென்று வண்டியை நிறுத்தி, "அம்மா, எங்கே போறீங்க? என் வண்டியில் பின்னாடி உட்காருவீங்களா? எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்க... கூட்டிப் போய் இறக்கி விடுகிறேன்," என்று சொன்னபடியே, தன் பையிலிருந்து தண்ணீர் புட்டியை எடுத்துக் கொடுத்து, "தண்ணி குடிங்க அம்மா... வேகாத வெயில்," என்று இதமாகப் பேசினான்.

முருகம்மா, "தம்பி, நல்லா இரு," என்று கூறிவிட்டுப் பாதி புட்டி தண்ணீர் குடித்ததும், அவள் முகம் மலர்ந்தது.

"கையில் என்னம்மா?" - ரமேஷ் கேட்டான்.

"பக்கத்து வீட்டுத் தோட்டத்து வெண்டைக்காய் தம்பி. இந்தப்பையில் வாழைப்பழம்," என்றாள்.

"விற்கவா?"

"ஆமா தம்பி."

"ஒரு நிமிடம். இங்கே அந்தப் படியில் உட்காருங்க, நான் உடனே வருகிறேன்."

கைகூப்பி உட்கார்ந்தாள் முருகம்மா.

"இந்தாங்க அம்மா..."

குரல் கேட்டுத் திரும்பினாள்.

"வெண்டைக்காயும் அந்த வாழைப்பழங்களையும் எனக்குக் கொடுங்க, நான் வாங்கிக்கொள்கிறேன். எவ்வளவு அம்மா?" என்றபடியே, ரமேஷ் தன் பையிலிருந்து ஒரு பலகாரப் பையையும், இரண்டு நூறு ரூபாய் தாள்களையும் எடுத்து முருகம்மா கையில் கொடுத்து, அவளது காலைத் தொட்டு வணங்கினான். "இந்தாங்க... இதைப் பாருங்க... பிடித்திருக்கா அம்மா?"

முருகம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. 'இன்னிக்கு ஆண்டவன் என் மேல் தயவுக் கூர்ந்து இருக்கிறான்,' என்று மனதில் நினைத்துக்கொண்டாள். கையில் வாங்கிப் பார்த்தவுடன் அவளுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. அது ஓர் அழகான, பச்சை நிற ஜரிகைக் கரை போட்ட உயர் ரக நூல் சேலை; கூடவே அரக்கு நிற ரவிக்கைத் துண்டு!

ரமேஷை மனமார ஆசீர்வதித்து, கண்ணீர் மல்கச் சொன்னாள்: "தம்பி, நீ யார் பெற்ற மகனோ... உன் நல்ல மனதிற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்? நீ என்றும் நல்லா இருக்கணும், நல்லா இருக்கணும்!" என்று பல தடவை சொல்லிக்கொண்டே இருந்தாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தெய்வீகக் கலை!
ramesh-helps-old-woman-story

"அம்மா, என்னை உங்கள் மகன் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அழாதீங்க அம்மா. கவனமாகப் போய் வாங்க. இந்தத் தண்ணீர் புட்டியை உங்களிடமே வச்சுக்குங்க," என்று அவள் கையில் திணித்தான் ரமேஷ்.

அவள் தன் கூரை வீட்டை நோக்கிச் சந்தோஷத்துடன் செல்வதைப் பார்த்து ஆனந்தப்பட்டான். அந்த வயதான மூதாட்டியின் சந்தோஷத்துடனேயே தன் அக்காவின் சந்தோஷத்தையும் காண, ரமேஷ் மிக விரைவாக வண்டியை ஓட்டினான்.

logo
Kalki Online
kalkionline.com