
விவசாயம் உன்னதமான தொழில் மட்டுமல்ல இலாபகரமான தொழிலும் கூட. முன்பெல்லாம் விவசாய வேலைகளுக்கு அதிகளவில் கூலி ஆட்கள் கிடைத்தனர். ஆனால் இன்று அப்படி இல்லை. அரசின் 100 நாட்கள் வேலை திட்டம் வந்த பிறகு விவசாய வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. அப்படியே வேலைக்கு ஆட்கள் கிடைத்தாலும், அதிக அதிக கூலி கேட்கின்றனர். இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு பேருதவியாக அமைந்தவை விவசாய இயந்திரங்களும், உபகரணங்களும் தான்.
அனைத்து விவசாயிகளும் இயந்திரங்களை சொந்தமாக வாங்குவது என்பது இயலாத காரியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் விவசாய இயந்திரங்களை வாடகைக்கு விடும் திட்டத்தைக் கொண்டு வந்தது. சிறு, குறு விவசாயிகள் இதனால் அதிக பலன் பெற்றனர். இந்நிலையில் விவசாய வாடகை இயந்திரங்கள் மகளிர் விவசாயிகளுக்கு எப்படி உதவுகிறது என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.
விவசாயத்தில் ஈடுபடும் ஆண்களை விடவும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. மகளிரை தொழில்முனைவோராக்க உதவும் மிகச்சிறந்த தொழில் ஒன்று உண்டென்றால் அது விவசாயம் தான். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது, பெண்கள் விவசாயத்தில் முன்னேற்றம் அடைய வாடகை முறையில் விவசாய இயந்திரங்களை வழங்கி வருகிறது. இந்த இயக்கத்தின் வழிகாட்டுதல் படி, தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களிலும் 251 இயந்திர வாடகை மையங்கள் மற்றும் 2,605 கருவி வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிராமப்புற பெண்களை தொழில்முனைவோராக மாற்றி, விவசாயத்தில் முன்னேற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராக இருக்கும் பெண்கள் பலரும், விவசாயத் துறையில் கால்தடம் பதிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மகளிர் விவசாயிகள் சாகுபடிப் பணிகளை எவ்வித காலதாமதமின்றி செய்து முடித்திடவும், அவர்களின் பணிச்சுமையைக் குறைத்திடவும் வாடகை இயந்திரங்கள் துணைபுரிகின்றன. விவசாய இயந்திரங்கள் அரசு சார்பில் வாடகைக்கு விடப்படுவதால், வெளிச்சந்தையை விடவும் குறைந்த வாடகையே வசூலிக்கப்படுகிறது.
இதுவரையில் வாடகை இயந்திரங்களின் மூலம் 1,14,26,000 ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளன ஊராட்சி கூட்டமைப்புகள். இந்த வசதியின் மூலம் விவசாயத் தொழிலாளராக இருந்த பெண்கள் பலரும் பயிர் சாகுபடி செய்யும் தொழில்முனைவோராக முன்னேறியுள்ளனர்.
இதுமட்டுமின்றி விவசாயத்தில் பெண்களின் வருகையை ஊக்குவிக்க விவசாயப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதன்மூலம் சாகுபடியை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தை பெண்கள் அறிந்து கொண்டு, வருவாயை அதிகப்படுத்தலாம். அதோடு விளைச்சலுக்கு நியாயமான விலையைப் பெற்றுத் தரவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் துணை நிற்கிறது. குறைவான வாடைகை என்பதால், செலவுகள் கணிசமாக குறையும். அதோடு, பயிர் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் இத்திட்டம் உதவுகிறது.
குறிப்பிட்ட காலத்திற்கு இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து மகளிர் விவசாயிகள் பயன்படுத்தலாம். இதில் கதிர் அடிக்கும் இயந்திரங்கள், டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் கட்டு இயந்திரங்கள் மற்றும் பிற வேளாண் உபகரணங்கள் மகளிர் விவசாயிகள் மற்றும் சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
மகளிர் விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் மையங்கள் அல்லது ஊராட்சி கூட்டமைப்புகளை அணுகி வாடகை இயந்திரங்கள் தொடர்பான தகவல்களை பெறலாம். தமிழக அரசின் இந்த அரிய வாய்ப்பை மகளிர் விவசாயிகள் மட்டுமின்றி சிறு, குறு விவசாயிகளும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.