

நவீன காலத்து ஹெலன் கெல்லர் என்று அழைக்கப்படும் லக்னோவைச் சேர்ந்த சாரா முயின் (Sarah Moin), பற்றி தெரிவதற்கு முன்பு நம் கல்கி வாசகர்கள் சில பேருக்கு யார் இந்த ஹெலன் கெல்லர்? என்ற கேள்வியும், ஏன் அவரோடு சாரா முயின் (Sarah Moin) என்பவரை ஒப்பீடு செய்கிறார்கள் என்கிற கேள்வி மனதில் எழும்.
இதோ அவர்களுக்காக 1880 -ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஹெலன் கெல்லர், தனது 19-வது மாதத்தில் ஏற்பட்ட ஒரு கடுமையான காய்ச்சலால் கண் பார்வை மற்றும் கேட்கும் திறனை முற்றிலுமாக இழந்தார்.
இருட்டும் நிசப்தமும் மட்டுமே கொண்ட ஒரு சிறைக்குள் தள்ளப்பட்ட அவருக்கு, ஆன் சல்லிவன் (Anne Sullivan) என்ற ஆசிரியை ஒரு தேவதையாக வந்தார்.
ஹெலனின் உள்ளங்கையில் நீரை ஊற்றி, இன்னொரு உள்ளங்கையில் 'W-A-T-E-R' என்று எழுதி, பொருட்களுக்கும் பெயர்களுக்கும் உள்ள தொடர்பை அவருக்குப் புரிய வைத்தார். அந்த ஒரு புள்ளிதான் ஹெலனின் வாழ்க்கையை மாற்றியது.
உலகின் முதல் 'பார்வை மற்றும் செவித்திறன் அற்ற' பட்டதாரியானார். எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர் எனப் பன்முகத் திறமையுடன் விளங்கிய அவர், "உலகில் மிகச்சிறந்த மற்றும் அழகான விஷயங்களை பார்க்கவோ தொடவோ முடியாது, அவற்றை இதயத்தால் மட்டுமே உணர முடியும்" என்று உலகிற்குப் போதித்தார்.
அவரது நவீன வடிவமாகவே இன்று லக்னோவின் சாரா முயின் பார்க்கப்படுகிறார்.
சாரா முயின் - நவீன காலத்து ஹெலன் கெல்லர்
லக்னோவைச் சேர்ந்த சாரா முயின் (Sarah Moin) அண்மையில் வெளியான ஐஎஸ்சி (ISC) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.7% மதிப்பெண்கள் பெற்று இந்தியாவையே வியக்க வைத்துள்ளார். இவரை "இந்தியாவின் ஹெலன் கெல்லர்" என்று அழைப்பது மிகப்பொருத்தமானது.
உள்ளங்கையில் செதுக்கப்பட்ட கல்வி:
ஹெலன் கெல்லருக்கு ஆன் சல்லிவன் எப்படியோ, சாரா முயினுக்கு அவரது தாயார் அப்படி. சாராவுக்குக் கண் பார்வையும் இல்லை, காது கேட்கும் திறனும் இல்லை. இந்தச் சூழலில் ஒரு மாணவி எப்படி 98.7% மதிப்பெண் பெற முடியும்?
இங்கேதான் ஒரு தாயின் தவம் தொடங்குகிறது. சாராவின் தாய், தன் மகளின் உள்ளங்கையில் ஒவ்வொரு ஆங்கில எழுத்தையும் விரலால் எழுதி (Manual Alphabet), பாடங்களைப் புரிய வைத்தார்.
தாய் தன் விரல் நுனிகளால் மகளின் உள்ளங்கையில் வரைந்த அந்த எழுத்துக்கள், சாராவின் மூளையில் அறிவாகப் பதிந்தன. ஒரு நாளைக்குச் சராசரியாக 10 முதல் 12 மணி நேரம், ஒரு தாய் தன் மகளின் கைகளில் இப்படி 'எழுதி'யே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்தத் தாயின் விரல் நுனி ரேகைகள் தேய்ந்து போனதன் விளைவுதான், இன்று சாராவின் மதிப்பெண் சான்றிதழில் ஜொலிக்கும் எண்கள்.
சாரா தனது தேர்வின்போது ஒரு 'Scribe' (தேர்வு எழுத உதவுபவர்) உதவியைப் பயன்படுத்தினார். அம்மா சொல்லிக் கொடுத்த பாடங்களை மனதில் நிறுத்தி, அவர் சொல்லச் சொல்ல உதவியாளர் எழுதினார்.
உளவியல் (Psychology) மற்றும் ஆங்கிலத்தில் அவர் எடுத்த மதிப்பெண்கள், சாதாரண மாணவர்களுக்கே சவாலானவை.
சாராவின் லட்சியம் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்பதுதான். தன்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகளுக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பும், கண்ணியமான வாழ்வும் கிடைக்கப் போராடப் போவதாக அவர் கூறுகிறார்.
இது அரசியலமைப்புச் சட்டம் 21-ன் படி ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள 'கண்ணியமான வாழ்வுரிமையை' நிலைநாட்டும் முயற்சியாகும்.
ஹெலன் கெல்லர் காலமானபோது உலகம் ஒரு மாபெரும் ஒளியை இழந்ததாகக் கருதியது. இன்று சாரா முயின் ரூபத்தில் அந்த ஒளி மீண்டும் பிறந்துள்ளது.
"என்னால் முடியாது" என்று சொல்பவர்களுக்கு மத்தியில், "என்னால் முடியும், அதற்கு என் தாயின் விரல் நுனிகளே சாட்சி" என்று நிரூபித்திருக்கிறார் சாரா.
வரும் அன்னையர் தினத்தில், சாராவை விட அவரது தாயாருக்கே நாம் முதல் மரியாதையைச் செலுத்த வேண்டும்.