சவாலான சாக்ஸஃபோன்: இசைக்கலைமணி பாண்டிச் செல்வியின் இசைப் பயணம்!
சாக்ஸஃபோன் இசைக்கருவி ஒரு சவாலான வாத்தியமாகும். கனம் வாய்ந்த கருவியை, கனமாக ஊதவேண்டும். கைவிரல்களின் அசைவுகள் மிக முக்கியம். மேற்கத்திய வாத்தியக் கருவியாகிய சாக்ஸஃபோனை கர்நாடக இசைக்கேற்றவாறு மாற்றியமைத்த பெருமை சாக்ஸஃபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத்திற்கு உரியதாகும்.
சாக்ஸஃபோன் வாத்தியம் வாசிப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கனமான வாத்தியமாகிய சாக்ஸஃபோனை, மும்பை வாழ் பாண்டிச் செல்வி தட்சிணாமூர்த்தி அருமையாக வாசித்து வருவது பாராட்டுக்குரிய விஷயமாகும். இசைக்கலைமணி பட்டம் பெற்ற இவருடன் ஒரு மினி பேட்டி:
சாக்ஸஃபோன் பயிலும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
பாரம்பரிய இசைக் குடும்பத்தில் பிறந்தவள் நான். எங்களுடைய தாத்தா அ. முத்துப்பிள்ளை சிறந்த நாதஸ்வரக் கலைஞராவார். தந்தையார், பெரியப்பா, சித்தப்பாவென அனைவருமே தவில் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்களாக இருந்தனர். தவில் வித்வானாகிய எனது தகப்பனார், தான் செல்கின்ற நிகழ்வுகளுக்கெல்லாம் என்னையும் அழைத்துச்சென்று கேட்கச் செய்வார். தாளம் போடக் கூறுவார். அநேக விஷயங்களை தந்தையிடமிருந்து தெரிந்துகொண்டேன்.
பயின்ற விபரங்கள், இசைக்கலைமணி பட்டம், முதல் நிகழ்வு குறித்து?
மதுரையருகேயுள்ள திருப்பாச்சேத்தி சொந்த ஊர். கோயம்புத்தூர் இசைக்கல்லூரியில் கர்நாடக சங்கீதத்தில் டிப்ளமோ பாஸ் செய்தேன். இசைக் கலைமணி பட்டம் பெற்றேன். ஆசிரியைப் பயிற்சியிலும் டிப்ளமோ வாங்கினேன். 18 ஆவது வயதில் எனது முதல் மேடை நிகழ்ச்சி கோவிலில் வைத்து நடக்கையில், தந்தை தவில் வாசித்தார். மிகவும் மகிழ்வாக இருந்தது. தந்தையின் தொடர் ஆதரவும், ஊக்கமும் என்னுடைய நம்பிக்கையை வளர்த்தது.
தங்களது மேடைக் கச்சேரிகள் குறித்து?
தகப்பனாரின் மறைவிற்குப் பிறகு, குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது. தந்தை விரும்பியவாறே, கடுமையான பயிற்சியை மேற்கொண்டு, அநேக கிருதிகளை, பல்வேறு ராகங்களில், தாளங்களில் மேடையில் வாசிக்கையில், பெரும் வரவேற்பு கிடைத்தது. கச்சேரியின் இறுதியில், பார்வையாளர்கள் விருப்பப்படி, பழைய சினிமாப் பாடல்களை வாசிப்பது வழக்கம். ரசித்துக்கேட்டு பாராட்டுவார்கள். எப்படி இந்த கனமான வாத்தியத்தை அனாயசமாக வாசிக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பார்கள். விளக்கி கூறுவேன்.
சாக்ஸஃபோன் வாத்தியம் வாசிக்க மற்றும் சங்கீதம் பாட கற்றுக்கொடுத்த குருக்கள் பற்றி?
எனது மாமா மற்றும் குரு தஞ்சாவூர் ஆர்.ரவிச்சந்திரன் பிள்ளை, கோயம்புத்தூர் வித்வான் குரு சி. வேணுகோபால், ஆகியோரிடம் சாக்ஸஃபோன் கற்றேன். தற்சமயம், வித்வான் குரு டாக்டர் சி. ஜெய்சங்கர் சாரிடம் பயிற்சி எடுத்து வருகிறேன். இவர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாரம்பரிய இசையாகிய நாதஸ்வரம், தவில் வாசிப்பதோடு, சாக்ஸஃபோனும் வாசித்து வருகிறார். மேலும் மேற்கத்திய இசை, கர்நாடக சங்கீதம், தமிழிசை, திரையிசை ஆகியவைகளைப் பயின்றவர். சிறந்த கர்நாடக சங்கீதக் கலைஞராகிய ரூபா கார்த்திக் அவர்களிடம், சங்கீதம் கற்று வருகிறேன்.
சுவாரசியமான நிகழ்வுகள் ஏதாவது?
எனது முதல் மேடை நிகழ்வு, என்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமயம், குடும்பத்தினரின் முன்பு, அன்புக் கணவர் தட்சிணாமூர்த்தியுடன் இணைந்து வாசித்தது. வளர்ந்து வரும் டெக்னாலஜிக்கு ஏற்ப நிறைய கற்றுக்கொள்வதின் மூலம், வெளிநாடுகளில் வசிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பயிற்சியளிக்க முடிவது;
மும்பை தானேயில் 75 ஆவது சுதந்திர தினவிழாக் கொண்டாட்ட சமயம், பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியது என பல நிகழ்வுகள். என்று கூறியவர், மங்கையர் மலர் குழுவினர் மற்றும் வாசகர்களுக்கு நன்றி தெரிவித்து பேட்டியை நிறைவு செய்தார் சாக்ஸஃபோன் கலைஞர் பாண்டி செல்வி தட்சிணாமூர்த்தி.

