நம்முடைய வாழ்க்கையில் சுகங்களையும் சோகங்களையும் தூக்கி சுமக்கும் பெட்டகமாக இருப்பவை நினைவுகள். எந்த ஒரு சோகத்தையும் அதிகமாக ரணமாக்குவதும் நினைவுகள்தான். எந்த ஒரு சுகத்தையும் பன்மடங்கு பெருக்குவதும் நினைவுகள் தான். அந்த நினைவுகளிலும் நம்மை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது நம்முடைய பள்ளி, கல்லூரி கால நினைவுகள்தான்.
எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பழகும் நண்பர்கள், அணு அணுவாய் நம்மை வடிவமைக்கும் ஆசிரியர்கள். சிறகுகள் முளைத்த பறவை முதன்முதல் தன் கூட்டைவிட்டு பறக்கும்போது கிடைக்கும் புது உறவுகளைப் போல பள்ளி, கல்லூரி காலங்களில் நமக்கு கிடைத்த எந்த ஒரு உறவையும் நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. காலத்தின் கண்ணாடி முன் நம்மை நிறுத்தி எது சரி? எது தவறு? என நமக்கு உணர்த்திய பருவம் நிச்சயம் பள்ளிப் பருவமாகத்தான் இருக்கும். அதனை கண்முன் கொண்டு வரும் விதமாகத்தான் என் வாழ்விலும் அன்று ஒரு அற்புதம் நடந்தது.
காலத்தின் சூழல்களில் சிக்கி நான் படித்த பட்டப்படிப்பின் சான்றிதழ்களை பத்து ஆண்டுகள் கழித்து வாங்குவதற்காக கல்லூரிக்குள் நுழைந்தேன். முதன் முதலாக கல்லூரி படிப்பை அறிமுகப்படுத்திய பட்டயக் கல்வி நிறுவனத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. மாணவியாக இருந்த எனக்கு முதன்முதலாக பயிற்சி ஆசிரியராக உருவம் கொடுத்த கல்லூரி அது. கல்லூரி இருக்கும் சாலையை கடக்கும்போது பாலைவனத்தில் ரோஜாக்கள் பூப்பதைப் போல அவ்வளவு ஒரு ஆனந்தம்! 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.
எனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் இன்று இருப்பார்களா? என்று கேட்டால் தெரியாது. நான் இங்கு தான் படித்தேன் என்று என்னை அறிமுகம் செய்து கொள்ளலாம் என்றால், நான் யார் என்பது நிச்சயமாக அவர்களுக்கு தெரியாது! பல்வேறு குழப்பங்களுடனே சென்று கல்லூரி வாசலின் முன் நிற்கையில் விழா ஏதோ நடக்கப் போகிறது என்பதை அறிவுறுத்தும் விதமாக வண்ண வண்ண கோலங்களும் தேனீர் உபசரிப்புகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன.
நாங்கள் வாசலில் நிற்பதை பார்த்த அவர்கள் உள்ளே வாருங்கள் என்று அழைத்தனர் . எதற்காக அழைக்கிறார்கள் என்று குழப்பத்துடனே உள்ள செல்ல, அன்று தான் அந்தக் கல்லூரியின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறார்களாம். கடந்த 25 வருடங்களாக அங்கு படித்த அனைத்து மாணவர்களும் அன்று ஒட்டுமொத்தமாக கூடுவதாக திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை சந்தோஷங்களை கடந்து வந்திருப்போம். ஆனால் முதன் முதலாக என்னை மூச்சடைக்க வைத்த சந்தோசம் என்றால் நிச்சயம் அது அன்றுதான். எனக்கு அழுவதா! சிரிப்பதா! என்றே தெரியவில்லை.
நான் என்ன அவ்வளவு அதிர்ஷ்டசாலியா? என்று நினைக்கும் போது, முதன் முதலாக இந்த பிரபஞ்சத்தின் மேல் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. காலம் எவ்வளவு வலியது என்பதை நான் அன்று தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன். கிராமப்புற வாழ்க்கையை விட்டு நகர்ப்புற வாழ்க்கைக்கு வந்தபோதுதான் என்னுடைய நண்பர்களை நான் எவ்வளவு தூரம் தொலைத்திருக்கிறேன் என்பதே புரிந்தது. எவ்வளவு தான் அறிவியல் வளர்ந்தும் கூட என்னால் ஒருவரை கூட அன்றைய நாளுக்கு முந்தைய நாள் வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பத்து வருடங்களுக்கு மேலான தவிப்புகளுக்கு அன்றுதான் முழுமையாக விமோசனம் கிடைத்தது போல் இருந்தது.
என்னை முதன்முதலாக மேடை ஏற்றிய ஆசிரியர்கள், என்னை ஒரு ஆசிரியராக உணர வைத்த முதல்வர்கள், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகிய தோழமைகள் இப்படி எவ்வளவோ உறவுகள் மீண்டும் என் கண் முன் விரிந்து கிடந்த அந்த தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓராயிரம் கவிதைகளுக்கு சமம். எவ்வளவோ சிரிப்புகள்! எத்தனையோ உபசரிப்புகள்! பல காலம் கடந்து சூரியன் மறைவதை ஏக்கத்தோடு பார்த்த தருணம் அது! மூன்று மாத காலமாக என்னை தொடர்புக்கொள்ள, எவ்வளவோ முயற்சி செய்த என்னுடைய நண்பர்களுக்கோ அவர்களுக்கு முன்னால் நான் அங்கு இருப்பதை பார்த்து அவ்வளவு ஆச்சரியம்!
மனித வாழ்க்கைக்கு நினைவுகள் எவ்வளவு பொக்கிஷமானவை என்பது அன்றுதான் முழுமையாக புரிந்தது. காலத்தின் சூழல்களில் எவ்வளவோ ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கூட மனதை இன்னும் குழந்தையாகவே வைத்திருக்க கூடிய மிகப்பெரும் ஆக்க சக்தி நினைவுகளுக்கு மட்டுமே உண்டு. அதிலும் ஒவ்வொருவருக்கும் பள்ளி,கல்லூரி கால நினைவுகள் பசுமரத்தாணியாய் மனதில் என்றென்றும் இருப்பவை. மனதுக்கு மகிழ்ச்சி ஊ ட்டும் இத்தகைய நினைவுகளை எத்தனை மணி நேரம் அசை போட்டாலும் சலிப்பு என்பதே இல்லை தானே!
இந்த உலகத்திலே நான் தான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என்று உணர்ந்த நாள் அன்றுதான்!.. அந்த நினைவின் மகிழ்ச்சியான தருணங்கள் இன்று வரை தொடர்கின்றன. நிச்சயம் உங்கள் வாழ்விலும் இப்படி ஒரு நாள் இருந்திருக்கும்.... அது என்ன? என்பதை மறக்காமல் கமெண்ட்டில் பதிவிடுங்கள்..... நன்றி உறவுகளே!