
-லக்ஷ்மி மோகன்
"ம்... என்னடா நிகில் இன்னுமா கெளம்பல? மணியாச்சு, சீக்கிரம்.''
"இதோ'' சாண்ட்விச்சைக் கடித்துக்கொண்டே ஸ்கூல் பேகை எடுத்து முதுகில் போட்டுக்கொண்டான்.
''சீக்கிரம் வாடா. நான் கொஞ்சம் நோட்ஸெல்லாம் காப்பி பண்ணணும்" ஆர்த்தி வாசலிலிருந்து கத்தினாள்.
படீரென்று கார் கதவை இழுத்துச் சாத்திக்கொண்டு, ''போலாம் டிரைவர் அங்கிள்” என்றான்.
அருணாவுக்கு மூச்சு முட்டியது. வேக வேகமாக குளித்து, உடை மாற்றிக்கொண்டாள். டைனிங் டேபிளில் தயாராயிருந்த சாண்ட்விச் இரண்டை விழுங்கி தண்ணீரைக் குடித்தாள்.
''பிள்ளைங்களுக்கு சாயங்காலம் என்னம்மா பண்ணி வெக்க?" சுமதி கேட்டாள்.
"சேமியா பண்ணிடு சுமதி." கிச்சடி
"நைட்டுக்கு?"
'சப்பாத்தியும் சென்னாவும் பண்ணிடு. நான் ஈவ்னிங் கால் பண்றேன். ஜாக்கிரதையா இரு. எங்க பார்த்தாலும் கொலையும் கொள்ளையுமா இருக்கு. சொல்லிட்டேன்."
''சரிம்மா."
சரியாக அவள் வாசலுக்கு வரும்போது டிரைவர் குழந்தைகளை ஸ்கூலில் இறக்கிவிட்டு தெரு முனையில் திரும்பிக்கொண்டிருந்தார்.
"சார ஈவ்னிங் ஏர்போர்ட்டுல இருந்து பிக்கப் பண்ணணும். ஆஃபீஸ் வர வேண்டாம். நான் வேற வண்டி ஏதாவது பாத்துக்கறேன் மூர்த்தி.''
"சரிங்கம்மா.''
"கரெக்ட் டயத்துக்குப் போயிடு. டிலே பண்ணாத."
"போயிடறேம்மா."
பெருமூச்சுடன் தன் கேபினுக்குள் நுழைந்தாள். அருணா, அந்த சாப்ட்வேர் நிறுவனத்தின் ப்ராஜக்ட் மேனேஜர். தன் கீழ் இருக்கும் நாற்பது பேரையும் விரட்டி வேலை வாங்க வேண்டும். வெளி நாட்டு ஆர்டர்களை காலம் தாழ்த்தாமல் முடித்துக் கொடுக்க வேண்டும்.
"என்ன அருணா? ஹரி, எப்போ ரிடர்ன்?" சுந்தர் கேட்டான்.
''இன்னைக்குச் சாயங்காலம்." வாய் பதில் தந்தாலும் கண் கம்ப்யூட்டரில் ஓடியது. மாலை, ஃபோனில் அருணா விசாரித்தாள்.
"சுமதி, பசங்க வந்தாச்சா?"
"வந்தாச்சும்மா."
"சாப்ட்டாங்களா?"
"சாப்ட்டாங்க."
"என்ன பண்றாங்க?"
"பாப்பா, ஹால்ல டீ.வி பாத்துட்டு இருக்கு. தம்பி, பெட் ரூம்ல டீ.வி பாத்துட்டு இருக்கு."
அன்று அருணா அலுவலில் பரபரப்பாய் இருந்தபோது செல் சிணுங்கியது.
'ஸ்கூல் நம்பராச்சே... இது' பரபரப்புடன் எடுத்தாள்.
"ஹலோ... குட்ஈவ்னிங்."
"நான் நிகிலோட க்ளாஸ் டீச்சர் பேசறேன்."
"டெல் மீ மேடம்..."
''நாளைக்கு வந்து என்ன மீட் பண்ணுங்க. ஐ வாண்ட் டு டாக் டு யூ."
"எனி ப்ராப்ளம் மேடம்?"
"நேர்ல வாங்களேன் ...ப்ளீஸ்"
சிறிது நேரத்துக்கு ஒன்றும் ஓடவில்லை.
"என்ன சொல்ற அருணா? ஐ கெநாட் பிலீவ் இட்..."
''எனக்கும் அப்பிடித்தான் இருந்துச்சு. மொதல்ல நம்பவேயில்ல. ஆனா அவங்களும் கொஞ்ச நாளா அவனை க்ளோஸா வாட்ச் பண்ணிட்டுதான் சொல்றாங்களாம். நல்ல சைல்டு சைக்யாட்ரிஸ்ட்டப் பாக்கச் சொன்னாங்க."
''என்ன குறை வெச்சோம் நாம? இத ஜாக்கிரதையா அப்ரோச் பண்ணணும்."
"கரெக்ட். என் க்ளையண்டோட பிரதர் சைல்ட் சைக்யாட்ரிஸ்ட். நாளைக்கே அப்பாயிண்மெண்ட் வாங்கிடறேன்."
"அதைப் பண்ணு மொதல்ல."
மறுநாள்
"அப்பாயிண்ட்மெண்ட் கிடைச்சுதா?"
"அவர் யு.எஸ். போயிருக்காராம். வர ஒரு வாரமாகுமாம். வேற டாக்டர் யாராவது பாக்கலாமா?"
"வேணாங்க. அவரே வரட்டும். பொறுத்திருப்போம்."
"என்னம்மா வேலைக்குப் போகலயா?" சுமதி கேட்டாள்.
''ரிஸஷன்."
"அப்டீன்னா?"
நாக்கைக் கடித்துக்கொண்டு, "இடைவேளை. இப்ப நெலம ரொம்ப மோசமா இருக்கு. நீங்கல்லாம் வீட்டுக்குப் போங்க. சரியானப்புறம் கூப்புடறோம்'னு சொல்லி அனுப்பிச்சுட்டாங்க" என்று முடித்தாள்.
ஸ்கூல் விட்டு வந்து டிபன் சாப்ட்டு விட்டு வழக்கம்போல பெட்ரூம் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே சென்றான் நிகில்.
ஆறு வயசுப் பையன் கதவைச் சாத்திப்பானேன்.
"என்ன பண்றடா நிகில்?" கதவைத் தட்டினாள் அருணா.
''கார்ட்டூன் பாக்கறேம்மா."
"அதுக்கு எதுக்குக் கதவைச் சாத்தணும்?"
"அக்கா ஹால்ல டீவிய சத்தமா வெப்பா. அவளும் சேர்ந்து வேற பாடுவா. அதான்."
"இன்னைக்கு நானும் ஒங்கூட பாக்கப் போறேன். பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டாள்.
"என்ன சொல்ற ரியல்லி?" அருணா?
"ஆமா டாக்டர் நெஜம்தான். நேத்து ராத்திரிகூட தூக்கத்துல அந்தக் கார்ட்டூன் கேரக்டர் பேரச் சொல்லிட்டுத் திரும்பிப் படுத்தான்."
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட டாக்டர், "அப்சல்யூட்லி இது மிரர் நியூரானோட வேலைதான்" என்றார்.
''புரியல டாக்டர்" என்றார்கள் இருவரும் ஒரே குரலில்.
''நம்ம மூளைல உள்ள மிரர் நியூரான் அப்படிங்கற நியூரானாலதான் நாம எல்லாமே கத்துக்கறோம். குரங்கு குல்லா கதை தெரியும் இல்லையா. கண் பாக்கறத நாம அறியாம அப்படியே திருப்பி செய்றதுக்கு, இந்த மிரர் நியூரான்கள்தான் காரணம். நல்லது கெட்டதை பகுத்து அறிய முடியாத வயசுல, எதா இருந்தாலும் அப்பிடியே மூளை ஏத்துக்கும். அதான் அந்தத் திருடன் கேரக்டரையே தினமும் ஆழ்ந்து தனியா உக்காந்து பார்க்கும் நிகில், அவன மாதிரியே சின்னச் சின்னத் திருட்டுகள ஆரம்பிச்சுருக்கான்.
"இன்னைக்கு பென்சில், ஸ்கெட்ச் பேனானு ஆரம்பிக்கற பழக்கம்தான் நாளைக்கு பெருசா மாற வாய்ப்பிருக்கு. முளையிலயே கிள்ளி எறிஞ்சிட்டா ப்ராப்ளம் சால்வ்டு.
"இப்பிடித்தான் ரெண்டு மாசம் முன்னாடி ஒரு கேஸ் வந்தது. க்ளாஸ் பசங்கள எல்லாம் அடிச்சு விளாசறான் டாக்டர்னு ஒன்பது வயசு சித்தார்த்தைக் கூட்டிட்டு வந்தாங்க அவன் பேரண்ட்ஸ். விசாரிச்சுப் பார்த்ததுல இதே மாதிரிதான் அப்பா அம்மா ஆபீஸுலருந்து வர லேட்டாகும். அது வரைக்கும் அவன் டீவில குத்துச் சண்டை போன்ற ஃபைட்டிங்கைதான் விரும்பிப் பார்ப்பான். அதுதான் அவனோட செயல்லயும் தெரிய வந்தது." மூச்சு விடாமல் டாக்டர் முடித்தார்.
"தேங்க்யூ டாக்டர்." வெளியேறினர் இருவரும்.
அன்று ஸ்கூல் விட்டு வந்த நிகிலை, "கம் ஆன். வி வில் ப்ளே சம் கேம்" என்று டீ.வியிலிருந்து திசை திருப்பினாள் அருணா. முதலில் மறுத்தாலும் அம்மாவின் ஆஜர், அவனை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
"நீங்க இனிமே ஆபீஸுக்கே போக மாட்டீங்களாம்மா?" கழுத்தைக் கட்டிக்கொண்டான்.
"இல்லடா கண்ணா. இனிமே அம்மா ஒன்கூட இருப்பேன்." ஸ்கூல் விட்டு வந்தவுடன் ஒருநாள் ஸ்டோரி டெல்லிங், ஒரு நாள் செஸ், ஒருநாள் ஸ்விம்மிங் என்று டைம்டேபிள் போட்டு டீ.வியிலிருந்து குழந்தையைத் திசை திருப்பினாள். அவளும் குழந்தையோடு குழந்தையாய்க் குதூகலித்தாள்.
வாழ்க்கையே முற்றிலுமாய் மாறினாற் போலிருந்தது. தலைவலி, ஸ்ட்ரெஸ், எரிச்சல் ஒன்றுமே இல்லை.
"டீவியுடன் ஒன்றிணைந்து ஆர்த்தி என்ன அழகாய் பாடறா. அவள் பாட்டியின் குரல்வளம் அப்படியே. நல்ல பாட்டு டீச்சராய்த் தேடி வகுப்பில் சேர்த்தாள்.
ஆறு மாதம் கழித்து...
"என்ன நியூஸ் அருணா?" ஷூவைக் கழட்டிக்கொண்டே ஹரி கேட்டான்.
"ரீ ஜாயின் பண்ணச் சொல்லி மெயில் வந்துருக்கு. அஃபிஷியல் லெட்டரும் வந்துருக்கு.”
"அப்படியா? வெரிகுட்!"
"லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு அவனருகில் உட்கார்ந்தாள். அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மெயிலை டெலிட் செய்து ட்ராஷ் பாக்ஸில் சேர்த்தாள்.
''என்னாச்சு அருணா?"
"குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் -ஆகும்வரை... கொஞ்ச காலத்துக்கு ரிஸஷன்தான்."
சிரித்துக்கொண்டே அப்பாயிண்மெண்ட் லெட்டரையும் கிழித்துப் போட்டாள் அருணா.
புன்னகையுடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ஹரி.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் ஜூன் 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்