சிறுகதை: கிரிஜா பாட்டி திரும்பி வருவாளா?

Tamil short story - Girija patti thirumbi varuvala
Man with his Grand mother
Published on

ரகு ரயிலில் ஏறி தன் சீட்டில் உட்கார்ந்துகொண்டான். மணி இரவு 8.40, ரயில் மும்பையிலிருந்து சென்னை செல்கிறது. மறுநாள் இரவு 8 மணிக்குத்தான் போய்ச் சேரும். ரகு ஸ்டேஷனிற்கு வரும்போதே பேக் செய்துகொண்டு வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு laptopல் சிறிது நேரம் எதையோ பார்த்துவிட்டு உறங்கிவிட்டான்.

மறுநாள் முழுவதும் பாட்டியை நினைத்துக்கொண்டே காலத்தைக் கழித்தான். எதிரில் இருந்த ஒரு ஆன்ட்டி தன் மூன்று வயது பேரனைக் கொஞ்சிக்கொண்டிருந்தாள். கிரிஜா பாட்டியும் ரகுவை அப்படித்தான் கொஞ்சினாள். ரகு சிறு வயது முதல் அதிகமாக பாட்டியிடம்தான் இருப்பான். கிரிஜா பாட்டி ரகுவின் தந்தையின் அம்மா. ரகுவின் தந்தை கிரிஜா பாட்டியின் ஒரே மகன். ரகுவிற்கு பத்து வயது இருக்கும்போதே அவனின் பெற்றோர்கள் பிரிந்துவிட்டனர். அதற்கு பிறகு ரகு தாத்தா பாட்டியிடமே இருந்தான்.

விவாகரத்திற்குப் பிறகு அவன் பெற்றோர்கள் இருவரும் இரண்டாம் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் ரகுவைப் பார்க்க எப்போதாவதுதான் வருவார்கள். எனவே ரகுவிற்கும் அவர்கள் இருவரையும் பிடிக்காமல் போய்விட்டது. தாத்தாவும் ஏழு வருடத்திற்கு முன்னால் இறந்துவிட்டார். ரகுவிற்கு இப்போது வயது 28 ஆகிறது. அவனுக்கு எல்லாமே கிரிஜா பாட்டிதான். கிரிஜா பாட்டி சொல்லாமல் எங்கேயோ போய்விட்டாள். அவளைத் தேடித்தான் ரகு மும்பைக்கு வந்தான். கிரிஜாவின் உறவுக்காரர்கள் நிறைய பேர் மும்பையில் இருக்கிறார்கள். எல்லோரிடமும் போய் கேட்டான், எங்கும் இல்லை கிரிஜா பாட்டி, எந்த விதத் தகவலுமில்லை, இருபது நாள் ஆகிவிட்டது. இரவு 9 மணிக்கு ரயில் சென்னை வந்து சேர்ந்தது. ஒரு ஓலாவைப் பிடித்து வீட்டிற்குச் சென்றான். குளித்து விட்டு அப்படியே தூங்கி விட்டான்.

“ரகு ரகு கதவைத் திறடா...”

“பாட்டி வந்திருக்கேன்டா...”

ரகு ஓடிப்போய் கதவைத் திறந்தான். “என்ன‌ பாட்டி இப்படி பண்ணிட்ட...? எனக்கு யார் இருக்கா...?”

“சரிடா, விடு, இனிமேல் போகமாட்டேன், சாப்பிட்டாயா இல்லையா?”

“இல்லை பாட்டி...”

“சரி, இரு வரேன்...”

“என்னடா இது? ஒண்ணுமே இல்லை...”

“பாட்டி இரு. நான் ஆன்லைன்ல ஆர்டர் பண்றேன்.”

அழைப்பு மணி அடித்தது.

“பாட்டி சாமான் வந்திருக்கு, வாங்கிக்கோ...”

“ரொம்ப நாள் ஆயிடுத்து. பூரி உருளைக்கிழங்கு பண்ணு இப்ப...”

“சரிடா... வெயிட் பண்ணுடா...”

அரை மணி நேரத்திற்குப் பிறகு...

“ரகு வாடா வா வா... பூரி மசாலா ரெடிடா.”

“வரேன் பாட்டி.”

“ஆஹா... பாட்டி... போடு போடு இன்னொரு பூரி... பாட்டி மசாலா கொஞ்சம் போடு...” என்று ஜோராக கத்திய ரகு திடீரென தூக்கம் கலைந்து எழுந்தான்.

உடம்பு முழுவதும் வியர்த்துக் கொட்டியது. எழுந்து ‘பாட்டி, பாட்டி’ என கூக்குரலிட்டுக்கொண்டே தேடினான். பாட்டி இல்லை. அப்போதுதான் புரிந்தது கனவு என்று. கடிகாரத்தைப் பார்த்தான், விடியற்காலை மூன்று மணி.

மனதிற்குள் ஒரு ஆறுதல், விடியற்காலை கனவு பலிக்கும் என்று. மறுபடியும் சென்று படுத்துவிட்டான்.

காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு துணிகளை எல்லாம் துவைத்துவிட்டு குளிக்க போகப் போனான்.

அப்போது எதிர்த்த வீட்டு ஜானு பாட்டி கத்திக்கொண்டே கதவைத் தட்டினாள்.

கதவை திறந்தான் ரகு.

“ஏன்டா... அம்பி கிரிஜா கிடைச்சாளா?”

“இல்லை பாட்டி...”

“கவலைப்படாதேடா... குழந்தை அவ வந்துடுவா. வராம எங்க போகப் போறா, வந்தா அவளை நான் நன்னா கேள்வி கேப்பேன்டா அம்பி...”

“சரி போய் குளிச்சுட்டு வா. பத்து நிமிஷத்தில் சூடா பொங்கல் கொர்ஸ் கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு போய்விட்டாள் ஜானு பாட்டி.

பிறகு பொங்கலை கொண்டு வந்து கொடுத்தாள். பொங்கலை சாப்பிட்டுவிட்டு ரகு லாக்இன் (log in) பண்ணி ஆபீஸ் வேலையைத் தொடங்கினான். பாட்டி என்னிக்கு காணாமல் போனாளோ அன்னியிலிருந்து ரகு வீட்டிலிருந்தபடியே (work from home) வேலை செய்கிறான். எப்படியும் பாட்டி திரும்பி வந்திடுவாள் என்ற எண்ணத்தில் வீட்டிலியே இருக்கிறான்.

மதியம் இரண்டு மணி. செல்ஃபோன் அடித்தது. யாரென பார்த்தான், ஸ்ருதி லைனில் இருந்தாள்.

ரகு கோபத்தோடு செல்ஃபோனை எடுத்து, “என்ன‌ சொல்லு?”

“நான் formality எல்லாம் முடித்து பண்ணிட்டேன், நாளைக்கு சரியா காத்தால 11 மணிக்கு கோர்ட்டுக்கு வந்திடு, சைன் பண்ண...”

“சரி வரேன். ஃபோனை வை...”

“ஏன்டா இப்படி எப்ப பாரு கத்தற. கடுகு வெடிக்கிற மாதிரி வெடிச்சுண்டே இருக்க. சரி பாட்டிகிட்ட ஃபோனை குடு, பாட்டிதான் என் பெஸ்ட் பிரண்ட்...”

“பாட்டி இல்லை வீட்ல... சொல்லாம எங்கேயோ போய்ட்டா...”

“ஓஹோ பாட்டியும் போய்ட்டாளா... அவளையும் துரத்திட்டியா...?”

“ஏய், ஃபோனை வைடி. எல்லாம் உன்னால ஆச்சு... அன்னிக்கு உன்னாலதான் நான் பாட்டியைத் தாறுமாறா பேசிட்டேன். எல்லாத்தையும் பண்ணிட்டு என்னை சொல்றியா... வைடி பேசாம...”

“ஹலோ மிஸ்டர் ரகு, எனக்கு தேவையே இல்லை உங்க புராணம். நாளைக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டுட்டு போயிடு... குட்பை...” என்று சொல்லிவிட்டு ஸ்ருதி கட் செய்து விட்டாள்.

ஸ்ருதிக்கும் ரகுவிற்கும் திருமணமாகி மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை. ஸ்ருதி பணக்கார வீட்டுப் பெண். அவளும் IT company-ல் வேலை பார்க்கிறாள், மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வரும்.

ஆனால், அவள் தன் சம்பளத்தை தானே செலவு செய்துவிட்டு பற்றாகுறைக்கு ரகுவிடமும் பணம் கேட்டுக்கொண்டே இருப்பாள். ரகு இது விஷயமாக பல முறை அவளுக்கு எடுத்துக்கூறினான், வீட்டு செலவுக்கு நீ ஒரு 15 போடு. நான் மீதியைப் போடறேன், அப்புறம் இரண்டு பேரும் சேர்ந்து பணத்தை சேர்த்து வைக்கலாம். அப்பதான் வரும்காலத்துல கஷ்டம் இருக்காது என்று. ஆனால் ஸ்ருதி அவன் கூறுவதை எடுத்துக்கொள்ளாமல் சண்டை போட்டுக்கொண்டே இருந்தாள். ரகு பாட்டியிடம் அவளுக்குப் புரிய வைக்கச் சொன்னான்.

ஆனால், பாட்டியோ எப்போதும் ஸ்ருதிக்கு சப்போர்ட்டாகத்தான் பேசுவாள், குழந்தைடா அவ, தானே புரிஞ்சுப்பா, எப்பப் பாரு ஏண்டா குழந்தைய கறிச்சி கொட்டற என்று. பாட்டிக்கு அவள் செய்வதெல்லாம் சரியில்லை என்று தெரிந்தும் அவளுக்குப் பரிந்து பேசுவாள். பாட்டிக்கு பயம், ஏற்கனவே மகனும் மருமகளும் சேர்ந்து வாழல, நாமும் சேர்ந்து ஏதாவது சொல்ல போய் ஸ்ருதி விட்டுட்டு போய் விடுவாளோ என்று. ஆனால் இது தெரியாமல் ரகு பாட்டியையும் அடிக்கடி திட்டிக்கொண்டே இருந்தான்.

ஸ்ருதிக்கும் பாட்டியை மிகவும் பிடிக்கும்.

அன்று ஒரு நாள் இரவு, ஸ்ருதி ரகுவிடம், “ரகு, நாளைக்கு டீம் மெம்பர்ஸ் கூட coorg போறேன். நாலு நாள் ட்ரிப்பு...”

“சரி போய்க்கோ...”

“பணம் வேணும்?”

“ஏன், உங்கிட்ட இல்லையா?”

“இருக்கு. ஆனா அது போதுமானதாக இருக்காது...”

“சரி நீ நாளைக்கு கிளம்பு. அப்புறமா போடறேன்” என்று கூறி விட்டு வெளியே கிளம்பி விட்டான்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கே ஸ்ருதி கிளம்பிவிட்டாள். மதியம் வரை பொறுத்திருந்து, பணம் வராத காரணத்தினால் ரகுவிற்கு போன் செய்து, “என்னடா, இன்னும் நீ அனுப்பல...”

“வேளைப்பளு... இரு இப்ப பண்றேன்” ஏன்று சொல்லி காலை கட் பண்ணிவிட்டு அவள் அக்கௌண்ட்டிற்கு 50k அனுப்பினான். அதற்கு பிறகு ஸ்ருதியிடமிருந்து ஒரு பதிலும் இல்லை, ஃபோனும் செய்யவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; ஆட்டோகிராஃப்
Tamil short story - Girija patti thirumbi varuvala

நான்கு நாள் கழித்து ஸ்ருதி வீட்டிற்கு வந்தாள். அவனிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை, பாட்டியிடம் மட்டும் எல்லா கதைகளையும் பேசினாள். அவன் கேட்டான், “நானும் நாய் மாதிரி கத்தி கத்தி கேக்கறேன், ஒரு பதில் கூட இல்லை, என்ன ஆச்சு?”

“எனக்கு ஒண்ணுமாகலையே, உன்கிட்ட எல்லாம் யார் பேசுவா? எல்லார் husband-ம் லட்சமா லட்சமா கொடுக்கிறார்கள், நீ after all ஒரு 50k அனுப்பறதுக்கு நூறு தரவை யோசிக்கற... எல்லாம் என் தலையெழுத்து உன்னை மாதிரி ஒரு பிசினாறியை கல்யாணம் பண்ணின்டு, என்வாழ்க்கையே சரியில்லாம ஆயிடுத்து...”

“ஓ... உனக்கு 50k பிச்சைக் காசா...?”

“ஆமாம், நீயே ஒரு பிச்சைக்காரன்...”

இப்படியே வாக்குவாதம் முற்றிப்போய் கடைசியில் அவள் துணிமணிகளை பேக் செய்து கிளம்பி விட்டாள்.

அவன், “போடி... போ... இனிமேல் காலை எடுத்து வெக்காதே. இந்த வீட்ல...”

“ஐயோ... கோடி கோடியா பணம் இருக்கற மாதிரி பேசற... நான் எதுக்கு வருவேன்” என்று சொல்லிவிட்டு போய் விட்டாள். பாட்டி தடுத்தாள், ஆனாலும் அவள் கேட்கவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கற்பூர தீபம்!
Tamil short story - Girija patti thirumbi varuvala

அவள் கிளம்பிய பிறகு பாட்டி, “ஏன்டா, கொஞ்சம் அமைதியா இருக்க மாட்டியா... நான்தான் சொன்னேனே நாளாக நாளாக புரிஞ்சுப்பான்னு... அவசரபட்டுட்டியே...”

“பாட்டி எல்லாம் உன்னாலதான்... பெரிய மனுஷியா இருந்து கூட அவ பண்ற தப்புக்கு சேர்ந்து ஜால்றா போட்ட. இப்பகூட உனக்கு அவ பண்ண தப்பு கண்ணுக்குப் படல... என்னை குற்றம் சொல்ற... நான் ரொம்ப கடுப்புல இருக்கேன்... போ, நீயும் போய் இங்கிருந்து எங்கேயாவது போ... என் கண் முன்னால நிக்காதே...” என்று வாய்க்கு வந்தபடி கண்டபடி பேசிவிட்டு வெளியே போய்விட்டான்.

ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்தான், வீடு பூட்டி இருந்தது. பக்கத்திலிருந்த பெட்டிகடைக்காரன் ஓடி வந்து, “தம்பி, பாட்டி எங்கேயோ கோயிலுக்குப் போயிருக்காங்க. சோறு பண்ணி வெச்சி இருக்காங்க. உங்களைச் சாப்பிடச் சொன்னங்க...” என்று கூறி சாவியைக் கொடுத்தான்.

ரகு கதவைத் திறந்து சாப்பிட்டான், ஆனால் அவன் மனசு நிலைகொள்ளாமல் இருந்தது, இது வரை அவன் பாட்டியை அவ்வாறு கத்தியதில்லை. மணி பத்தாகிவிட்டது, பாட்டி வரவில்லை, பதறி அடித்துக்கொண்டு ஸ்கூட்டரில் தெரு தெருவாக அலசினான். பாட்டி கிடைக்கவில்லை, அன்றிலிருந்து இன்று வரை தேடிக்கொண்டே இருக்கிறான் ரகு.

பாட்டி எங்கிருக்கிறாள், எப்படி இருக்கிறாள்? திரும்பி வருவாளா? இல்லையா? அது நமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். சில நேரங்களில் நாம் சொல்கின்ற சில கடினமான வார்த்தைகள் அடுத்தவர்களின் மனதை மிகவும் காயப்பட செய்கிறது.

இதைத்தான், திருவள்ளுவர்,

‘தீயினாற் சுட்டப் புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு’ என்று கூறி இருக்கிறார்.

முடிந்த வரை யார் மனதையும் புண்படாமல் பேச முயற்சிப்போம்!!!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: 'இரவினில் ஆட்டம்..! பகலினில் தூக்கம்!’ (கிரைம் கதை)
Tamil short story - Girija patti thirumbi varuvala

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com