சிறுகதை - அன்னையர் தினம்!

ஓவியம்; வேதா
ஓவியம்; வேதா
Published on

-அனு

 அத்தியாயம் -1

கஸ்ட் 2000.

நான்கு நாட்கள் முன்பு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை எதிர்த்து போராடி உயிரிழந்த இந்திய ராணுவத்தினருக்குக் கேம்பில் இறுதி மரியாதை நடந்துகொண்டிருந்தது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் வருகை தந்து, வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்கள் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொண்டிருந்தார்.

சில சிப்பாய்கள், மேஜர் என ராணுவ வீரர்கள் பாதுகாப்பு வளையமாக அவரை சூழ்ந்து நின்றனர்.

வீரர்களின் உறவினர்கள் வந்த ராணுவ வாகனத்தில் ஒரு முகமுடி உருவம் மத்திய மந்திரிக்கு குறிவைப்பதைத் தற்செயலாக கவனித்தான் மாணிக்கம்.

"மந்திரி ஜி...." உரத்த குரலில் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே பாதுகாப்பு கவசமாய் அவரை மறைத்துக்கொள்ள, தோட்டா அவன் கழுத்தில் பாய்ந்தது.

 விழுப்புரம் அருகே ஒரு கிராமம்....

மாணிக்கத்தின் இறப்பு செய்தி அவனது வீட்டை எட்டியது. செய்தி கேட்ட வினாடி கிணற்றடியில் மயங்கி விழுந்தாள் அவன் மனைவி முத்துலட்சுமி. கண்விழித்ததும் வீட்டில் துக்கம் விசாரிக்க குழுமியிருந்தவர்களோடு வாதிட்டாள்.

"இல்ல அது அவங்க இல்ல... பாப்பாவை இன்னும் அவங்க பாக்கலை... அது வேற யாரோ... என் மாமா இல்லை... மாமா நல்லா இருக்கு..."

"நா தான தாயி போன் பேசுனேன்... என் காதால கேட்டேனே..." மாமனார் தங்கவேலு தழுதழுத்தார்.

"அது வேற யாரோ மாணிக்கம்" கண்கள் கலங்க, தொண்டைக் குழியிலும் வயிற்றிலும் ஆயிரம் ஈட்டிக்கள் இறங்க,  நிதர்சனத்தை ஏற்க மறுத்தது அவளது காதல் நெஞ்சம்.

"தப்பான நெம்பருக்குப் பண்ணிட்டாங்க...ம்ம்ம்..." மூக்கைச் சிந்தினாள்.

முற்றத்தில் நிலைகுலைந்து அமர்ந்தார் தங்கவேலு. "ஐயனாரப்பா என் புள்ளையைப் பறிச்சுக்கிட்டியேன்னு அழுவறதா இல்ல... இந்த ரெண்டு உசிருக்காக அழுவறதா? மாணிக்கம் ராசா ஐயோ!"

 நான்கு நாட்களுக்குப் பிறகு மூவர்ணக்கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியில் அவன் உடல் வந்து சேர சித்தபிரம்மை பிடித்ததுபோல சரிந்து அமர்ந்தாள்.

இறுதிச்சடங்கில் அவளை ஆட்டி வைத்து வதைத்தது உறவுகள். "என்னாடி மூணு நாளா களிமண்ணாட்டம் உக்காந்திருக்கா" மூதாட்டி ஒருவர்.

"கல் நெஞ்சக்காரி... அழுவுறாளா பாரு..."

"பித்து பிடிச்சிருச்சோ..."

தனது பேத்தியைக் கண்டு கரித்தாள் மங்களா.

"மூதேவி எப்ப எட்டு வச்சி நடந்துச்சோ அன்னைக்கே எங்க மூத்தாரை காவு வாங்குச்சு..."

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவரின் மரணத்திற்குப் பழி சுமந்தாள் குழந்தை அஞ்சுகம்.

"பத்தாதுன்னு அந்த நார வாயை வச்சிக்கிட்டு ப்பா ப்பான்னுச்சு. அப்பனை ஆசையா கூப்பிடுதுன்னு பாத்தா என் மகனை பரலோகத்துக்கு அனுப்பிருச்சே பீடை..."

மீண்டும் ஒரு பாட்டம் ஒலமிட்டனர்.

துடிதுடித்துப் போனாள் முத்துலட்சுமி. தாயாகவும் பெண்ணாகவும் இருந்துக்கொண்டு மற்றொருவரை, அதுவும் பச்சிளங்குழந்தையைக் காயப்படுத்த எப்படி முடிகிறது?

மாமியாருக்கு விருப்பமில்லாமல்தான் அவர்கள் திருமணம் நடந்தது. அவளை தேள்போல கொட்டிக்கொண்டிருந்தாலும் பேத்தியிடம் ஆசையாக தானிருந்தார், இந்த செய்தி வரும்வரை.

"நான் அன்னைக்கே சொன்னேனே, முறை பொண்ணை சீரும்சிறப்புமா கட்டியிருக்கக் கூடாதா? இந்தப் பஞ்சத்துல அடிப்பட்டவ அப்படி என்னத்த மயக்குனாளோ? பாதகத்தி! கண்ணாலம் கட்டிகிட்டு யென் புள்ளைக்கு வாழக்கூட குடுத்து வைக்கலையே. இருவத்தாறு வயசு புள்ளைய வாரி குடுத்துட்டு நிக்கிறேனே..."

"இந்தா மங்கா... சும்மாயிருக்க மாட்ட" அவளது அண்ணன் லிங்கேஸ்வரன் கடிந்துக்கொண்டார்.

"ஏண்டி உனக்கு புள்ளைன்னா அவளுக்கு புருஷன் இல்ல? அதுவும் அறியாத புள்ளை பாவம். அதை போட்டு ஏண்டி வார்த்தையால வதைக்கற? ஒரு அப்பனா அந்த புள்ளைய பாக்க பாக்க மனசு பதறுது. பொண்ணோட மனசு பொண்ணுக்குத்தான் தெரியும்பாங்க ஆனா, இங்க எல்லாம் ராட்சச பொம்பளையா இருக்குங்க." அங்கிருந்த பெண்களை விரட்டினார்.

அறையின் மூலையில் சுருண்டு கிடந்த முத்துவை பார்த்தார். குழந்தையைத் தூக்கி வைத்திருந்த மனைவியிடம் கவனித்துக்கொள்ளும்படி கூறினார்.

மூன்று வருட திருமண வாழ்க்கையில், முத்துலட்சுமி மாணிக்கம் சேர்ந்து வாழ்ந்தது ஏறக்குறைய ஒரு வருடம் மட்டுமே. இருபது வயதில் அந்த ஊர் எல்லையைக்கூட தாண்டியதில்லை அவள். வீடு, குடும்பம் இவை மட்டுமே உலகம் என வாழ்ந்தாகிவிட்டது.

'இதெல்லாம் கனாதான மாமா? நீ சீக்கிரம் வந்துருவதான? பாப்பா பாவம்ல அதுக்காகவாச்சும் வந்துரு...' துக்கம் தாளாமல் பிதற்றினாள்.

அவளுக்கு அன்பு என்பதை முதலும் கடைசியுமாக உணர்த்தியவன் அவன்.

"அண்ணி... பெரிய மாமாவை சார்ந்து இருக்கறவங்களுக்கு அரசாங்கத்துலேந்து பென்சன் பணம், அரசாங்க வேலை எல்லாம் கருணை அடிப்படையில் தருவாங்க. அவரு மந்திரி ஐயாவை காப்பாத்தினதுக்கும் விருதும் பணமும் தருவாங்க. இது சட்டப்படி உங்களுக்கும் பாப்பாவுக்கும்தான் சேரணும். இவங்க எதோ திட்டம் போடுறாங்க, உசாரா இருங்க" ஈஸ்வரி எச்சரித்தாள்.

"அதெல்லாம்.... அப்படி எதுவும் செய்ய மாட்டாங்க ஈஸு. நீ தப்பா புரிஞ்சிருக்க. அத்தை பிள்ளையைப் பரிகொடுத்த வேதனைல திட்டுது. கொஞ்சநாள் போனா சரியாகிடும் ஈஸு..."

துயரமும் சோர்வும் ஆட்கொண்டாலும் குடும்பத்தினர் மீதிருந்த அதீத நம்பிக்கை காரணமாக உறங்கிப்போனாள் முத்து.

ஒரு நாள் மாணிக்கத்தின் தம்பி வைரவன் அவளிடம் காகிதங்களை நீட்டி "இதுல ஒரு கையெழுத்து வேணும்" என்றான்.

"என்ன இது?"

"காரணம் சொன்னா? உனக்குப் புரிஞ்சிருமா? சொன்னா சொன்னதைச் செய்யி..." கூந்தலைக் கொத்தாக பற்றி மாமியார் மிரட்ட, திடுக்கிட்டாள் முத்து.

வைரவன் அன்னையைச் சாந்தப்படுத்தினான்.

"இல்ல அண்ணி… அண்ணனுக்கு வாரிசு பாப்பாதான்னு ஒரு சர்டிபிகேட் குடுக்கணும். குடுத்தாதான் அவங்க குடுக்கற இழப்பீடு பணம் பாப்பாவுக்கு வரும். இவ பேர்ல கணக்கு தொடங்கணும். இதுக்கெல்லாம்தான் இந்த கையெழுத்து..."

"சரிங்க தம்பி" நீட்டிய காகிதங்களில் அவளது கோணல் கையெழுத்து பதிவானது.

ஒரு நாள் திடீரென ஆவேசம் பொங்க உள்ளே வந்தாள் மாமியார் மங்கா.

"அடியே எந்திரி... வா... வா... அந்த சனியனைத் தூக்கு... ம்ம்..."

முத்துலட்சுமியின் கூந்தலைப் பற்றி இழுத்துவந்து வீட்டுக்கு வெளியே தள்ளினாள். நிலைத்தடுமாறினாலும் சமாளித்துக்கொண்டாள் முத்து.

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்; ஏற்றம் நிச்சயம்!
ஓவியம்; வேதா

"எல்லாரையும் காவு வாங்குற எமன் நீங்க ரெண்டுபேரும். நீங்க இருக்கற இடம் விளங்காது. ஓடிரு." இடி விழுந்தது போலிருந்தது.

எத்தனை மன்றாடியும் அவளை ஏற்கவில்லை, மங்கா. "சரியான மானங்கெட்ட குடும்பம்! கல்யாண சீதனமே இன்னும் பாக்கிவச்சிருக்கான் உன் அப்பன். இதுல உனக்கு என் வீட்டுல சொகுசு கேக்குதோ?"

காலை பிடித்துக்கொண்டு மன்றாடினாள் முத்துலட்சுமி.

"மாமா ஆஸ்பத்திரிலேருந்து வந்ததும் போறேன் அத்தை."

பத்து நாள் முன்பு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது தங்கவேலுவுக்கு.

"அரசாங்கத்துல காசு குடுப்பாங்க வந்தா முழுங்கலாமுன்னு யோசனையா? என் புள்ளையை முழுங்கியாச்சு. இந்தக் காசையும் முழுங்கணுமா?"

அத்தையின் விகார முகத்தைக் கண்டு விக்கித்துப் போனாள் அந்தப் பெண்.

"இல்ல அத்தை காசெல்லாம் வேணாம்... இங்க அவரு வாழ்ந்த இடத்துலையே இருந்து என் மனசை தேத்திக்கறேனே" கேவினாள் பரிதாபமாக. குழந்தை அஞ்சுகம் வீரிட்டு அழுதாள்.

அவளது உடைமைகள் என இரண்டு சேலைகளை மட்டும் மூட்டையாக கட்டி வீசினாள்.

"யாரேனும் தலையிட்டால் வகுந்துவிடுவேன்" என ஊர் நடுவே நின்று மிரட்டினான் மாணிக்கத்தின் தம்பி வைரவன். ஊர் கூடி நின்று வேடிக்கை மட்டும் பார்த்தது.

இடுப்பு குழந்தையோடு ஊர் பேருந்து நிறுத்தத்தில் அடைக்கலம் புகுந்தாள் முத்து இரண்டு நாட்கள்.

பிறந்த வீடு பக்கத்து கிராமத்தில்தான். ஆனால், இறுதிச்சடங்கின்போதே அண்ணனும் அண்ணியும் பென்சன் காசோடுதான் வரவேண்டுமென உத்தரவு போட்டுவிட்டனர்.

கருணை அடிப்படையில் கொடுக்கப்பட்ட அரசு வேலை, பென்ஷன் அனைத்தையும் அபகரித்துக்கொண்டுவிட்டான் வைரவன்.

"மனுச ஜென்மங்களா நீங்கல்லாம்? தூ தெறி" கூடியிருந்த மக்களை ஏசினார் பஞ்சாயத்து பிரசிடெண்ட் லிங்கேஸ்வரன்.

"ஒரு தியாகியோட பொஞ்சாதிக்கு நீங்கள்ளாம் தர்ர மரியாதை இதுதானா? ஈவு இரக்கம் இல்லாம இந்த பெண்ணையும் அவ குழந்தையையும் சித்ரவதை பண்ணியிருக்காங்க. அதுங்களுக்கு ரெண்டு நாளு அடைக்கலம் குடுக்கணும்னுகூடவா தோணலை? மாணிக்கம் மாதிரி லட்சம் பட்டாளத்துகாரங்க எல்லையில சுயநலமில்லாம. குடும்பத்தை மறந்து நெஞ்சை நிமித்தி நிக்கறதாலதான் நாம திங்கவும் தூங்கவும் முடியுது."

அதே ஆங்காரத்தோடு தங்கையின் பக்கம் திரும்பினார்.

"மனுஷியா டீ நீ? உன் புருஷனுக்கு உடம்பு சரியில்லைனு நான் அவரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போன நேரத்துல அந்தப் புள்ளையை திட்டம் போட்டு விரட்டியிருக்க. இந்தா பாரு மங்கா, மாமாவோட மரியாதைக்காக அவரு தலை குனியக்கூடாதுன்னு ஒரே காரணத்துக்காகத்தான் நான் போலீஸுக்கு போகலை. நீங்க ரெண்டு பேரும் பேராசை பிடிச்சவங்கனு தெரியாம ஈஸ்வரிக்கும் வைரவனுக்கும் பரிசம் வேற போட்டுடேன்."

"என்ன ணே சொல்ற?" அதிர்ந்தாள் மங்கா.

"காசுக்கு ஆசைப்பட்டு மாணிக்கத்தோட சம்சாரத்தை விரட்டிவிட்ட நீ, என் பெண்ணையும் அதே மாதிரி நடத்தமாட்டேன்னு என்ன நிச்சயம்?”

"அண்ணே அவ வேற... இது நம்ம ஈஸ்வரி."

"ச்சை... நீ பொம்பளைதான?"

வைரவனுக்கும் தனக்கும் போடப்பட்ட பரிசத்தை உடைத்தாள் லிங்கேஸ்வரன் மகள் ஈஸ்வரி ஊர் முன்னிலையில்.

"சொந்த அண்ணனோட சாவுல ஆதாயம் தேடுற பிணந்தின்னி நீ, உன்னோட குடும்பம் நடத்த நான் ஓநாய் இல்ல"

முத்துலட்சுமியின் விதவை பென்ஷன், அரசாங்க வேலை அனைத்தையும் மோசடி செய்து அபகரித்துக்கொண்டதாக புகார் கொடுத்தார் தங்கவேலு,

"எங்களை வுட்ருங்க பிரெஸிடெண்டய்யா. முத்துவுக்கும் அவ புள்ளைக்கும் எதுனா ஒண்ணுனா, பென்சன் காசுக்காக கொடுமை பண்ணோமின்னு புகாரியிடும். நீங்களே அதுங்கள எதா ஆசிரமத்துல சேத்துருங்க"

முத்துவின் பிறந்த வீடு கதவடைத்தது.

கதையின் தொடர்ச்சி நாளை 05-07-2024, மாலை 5-30 மணிக்கு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com