ஒவியம்; வேதா
ஒவியம்; வேதா

சிறுகதை - அன்னையர் தினம்!

- அனு

நேற்றைய தொடர்ச்சி...

"ஈஷு.... ஈஷு...."

"பெரியவங்களை பேரு சொல்லிக் கூப்பிடக் கூடாது தங்கம்..."

"அட போக்கா... அவ இப்படி கூப்பிடலைன்னா எனக்கு அன்னிபொழுது, அச்சோன்னு இருக்கு..."

அஞ்சுகத்தை கையில் அள்ளிக்கொண்டாள் ஈஸ்வரி "ஈஷுவுக்கு என்ன வச்சிருக்க பட்டு?"

"மித்தாய்.... தீச்சர் குத்தாங்க... இந்தா..."

ஈஸ்வரிக்கும் முத்துவிற்கும் தனது மிட்டாயை பகிர்ந்து கொடுத்தாள் அஞ்சுகம்.

லிங்கேஸ்வரன் ஊரில் இருந்த சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டு மனைவி, மகளோடு சென்னைக்கு புலம் பெயர்ந்தார். ஈஸ்வரி தனியார் வங்கியில் பணிக்கு சேர, லிங்கேஸ்வரன் சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.

துரோகம், நிராகரிப்பு, ஏமாற்றம் என பரிசளித்து ஆதாயம் மட்டுமே தேடிய கூட்டத்திற்கு மத்தியில் எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் முத்துவை மகளாக ஏற்றுக்கொண்டது லிங்கேஸ்வரன் குடும்பம்.

முத்துலட்சுமியை மேலே படிக்க சொல்லி வற்புறுத்தினாள் ஈஸ்வரி.

"அட போ ஈஸு இதென்ன சினிமாவா? ஈரோயினிக்கு கஷ்டம் வந்ததும் தீடீர்னு ஒரு பாட்டு முடியக்குள்ள பட்டம் வாங்கி ஆபிஸர் ஆவறதுக்கு?"

ஈஸ்வரி களுக்கென சிரிக்க, முத்துவிற்குமே சிரிப்பு வந்துவிட்டது.

"நானு சின்னப் பிள்ளைலேருந்தே மக்கு தே. ரொம்ப பெஞ்சு தேச்சு தேச்சுதேன் பாஸானே. அதும் அய்யா டூஷன் வச்சதால்தான் ரேங்கு வாங்குனே. ஹும்...... நா அறிவாளியும் இல்ல, பணக்காரியும் இல்லை. மாமா என்னைய எதுக்கு ஆசைபட்டு கட்டுச்சுன்னு எனக்கு இப்பவுமே புரியலை ஈஸு...."

முத்துவை ஆச்சரியமாக பார்த்தாள் ஈஸ்வரி. இவைகளையெல்லாம் காதலின் அளவுகோல்களாக மனிதர்கள் மாற்றியிருப்பது எத்தனை அவலம்?

"ஜல்லிக்கட்டுல வைரனை மாடு முட்டுச்சே அப்பவே அந்த வீணாபோனவன் சாவட்டும்னு நீ விட்ருகணும் க்கா. அவனுக்கு ரத்தம் குடுத்து காப்பத்தினியே அதுலதான் மாணிக்கம் மாமாவுக்கு உன் மேல பிரியம் ஏற்பட்டுச்சு."

லேசாக முறுவலித்தாள் முத்துலட்சுமி.

"அந்த நாயி உனக்கே துரோகம் பண்ணியிருக்கு."

"விடு ஈஸு அதை போய் ஏன் இப்ப..."

அவளது கரங்களை ஆறுதலாய் பற்றினாள் ஈஸ்வரியின் அம்மா. "வெகுளியா இருக்கலாம் ஏமாளியா இருக்காத முத்து. இது உன் வீடு, உன் குடும்பம், நீ என் பொண்ணு. ஆனா நீ சுயமா நின்னு ஜெயிக்கணும். உனக்காக, உன் மகளுக்காக."

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேண்ட் பேக்குகள்!
ஒவியம்; வேதா

முத்துலட்சுமி தையல் வகுப்பில் சேர்ந்தாள். மெல்ல முன்னேறி அக்கம் பக்கத்தினருக்கு ரவிக்கை, சுடிதார் என தைத்து குடுக்கும் அளவிற்கு ஆற்றல், தன்னம்பிக்கை வளர்ந்தது.

அவளது வெளி உலக அறிவு விரிவடைந்தது. இருபத்தி எட்டு வயதில் விதவை பென்ஷனை முதலாககொண்டு தனது சொந்த தையலகத்தைத் துவக்கினாள் முத்துலட்சுமி.

 கஸ்ட் 2020.

"வாவ் இந்தப் பார்ட்டி ஏற்பாடெல்லாம் யாரோடது? எதுக்கு?" முத்துவைப் பார்த்து கேட்டபடியே அறையை சுற்றிலும் நோட்டம் விட்டாள் ஈஸ்வரி.

"ஐடியா உன் செல்ல பொண்ணோடது, நாங்க உதவியாளர்கள். அவ்வளவுதான். .அவ்வளவுதான். அவள் கணவன் ஹரி கேக் ஒன்றை கொண்டு வைத்தான்.

ஹரிஷ் - ஈஸ்வரிக்கு திருமணம் நடந்து பதினெட்டு வருடங்களாகிவிட்டன. சொந்த வியாபாரம். நிறைவான வாழ்க்கை.

"அன்னையர் தின வாழ்த்துக்கள் ஈஷு மா, முத்து மா."

"ஏய் இப்ப இல்லையே... மே மாசம்தான?" குழப்பம் மேலிட்டது.

"எனக்கு மும்பை டாட்டா இன்ஸ்டியூட்ல MSc Environmental Science படிக்க அட்மிஷன் கிடைச்சிடுச்சு, ஸ்காலர்ஷிப்போட."

கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

அம்மா, ஈஷு மா நீங்க ரெண்டு பேரும் இல்லைனா இது எதுவுமே நடந்திருக்க வாய்ப்பில்லை. இருபது வருஷம் முன்னாடி இதே நாள்ளதான் எனக்கு ரெண்டு அம்மா கிடைச்சாங்க. ஊர்ல பிரச்னை நடந்த அன்னிக்கு தான ஈஷு மா என்னை உங்க மகளா வளக்க முடிவெடுத்தீங்க?"

கண்ணீரோடு அஞ்சுகத்தை அணைத்தவாறு, ஆமோதிப்பாய் தலையசைத்தாள் ஈஸ்வரி.

"ஸோ என்னை பொறுத்தவரை இன்னைக்குத்தான் எனக்கு அன்னையர் தினம்."

-முற்றும்.

logo
Kalki Online
kalkionline.com