சிறுகதை: அருகில் இருந்தும் அந்நியராய்!

Short Story in Tamil
ஓவியம்; தமிழ்
Published on

-உஷா ஸ்ரீநிவாஸன்

ன்னலுக்கு வெளியே பேச்சுக் குரல் கேட்டது. பின்பக்கத்து வீட்டின் பால்கனியில் நின்றபடி, சரயு செல்ஃபோனில் பேசுவது ரமாவுக்குத் தெரிந்தது. சற்று இடைவெளி விட்டு, மீண்டும் மீண்டும் சரயு வேறு நபர்களோடு பேசும் குரல் கேட்கவே என்ன விஷயம் என்று கவனித்தாள். சரயு, தன்னுடைய செல்ஃபோன் நம்பரையும், வீட்டு முகவரியையும் ஃபோனில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

சற்று நேரம் கழித்து, சரயுவின் செல்ஃபோனுக்கு அழைப்புகள் வர ஆரம்பித்தன. "மத்தியானம் மூன்று மணிக்கு ஆச்சு" என்றும் ''நாளைக்குக் காலை பத்து மணிக்கு" என்றும் பதில் சொல்லிவிட்டு, தன் வீட்டுக்கு வருவதற்கான வழி எப்படி என்று விளக்கிக்கொண்டிருந்தாள்.

இப்போது ரமாவுக்கு விவரம் என்னவென்று யூகிக்க முடிந்தது. சரயுவின் அப்பா, ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அவருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?' என்று எண்ணினாள். சற்று நேரத்தில் ஆஃபீஸில் இருந்து வீடு வந்தான் ரமாவின் கணவன் ராகவன்.

"பின் வீட்டு பெரியவர், உடம்பு சரியில்லாமல் இருந்தாரே, போய்ட்டார் போலிருக்கு. அவரோட பொண்ணு ஒரு மணி நேரமா ஃபோனில் எல்லோருடனும் பேசிக்கிட்டிருந்தாங்க" என்று ராகவனிடம் கூறினாள். "அடடா, அப்படியா? மாமா ரொம்ப நல்ல மாதிரி" என்று வருத்தப்பட்டவன், அவரைப் பற்றிய நிறைகளை மனத்தில் ஓடவிட்டான்.

'நாராயணா, நாராயணா' என்று நாள் முழுவதும் உச்சரித்தவாறு இருக்கும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் தன் அப்பா ஞாபகம்தான் அவனுக்கு வரும். கம்பீரமான குரல் மாமாவுக்கு. காலை நேரத்தில் அவனை எழுப்புவதே அவரது ஸ்லோகங்கள்தான்.

விடியற்காலையில் எழுந்து குளித்து, சுவாமி அறையில் உட்கார்ந்து பூஜையை ஆரம்பிப்பார். சுமார் ஒரு மணி நேரம் பூஜை செய்தபின், வரிசைக்கிரமமாக அன்றாட வேலைகளில் ஈடுபடுவார். மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றுவது, நடந்து சென்று பால் வாங்கி வருவது, தொட்டிகளில் வளர்க்கும் செடிகளுக்கு நீர் ஊற்றுவது என்று ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பார். அதன் பிறகு, சற்று நேரம் செய்தித்தாள் வாசிப்பார்.

எட்டு மணி அளவில், பேரன் சஞ்சயும், பேத்தி ஸ்ருதியும் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்புவார்கள். அவர்களை மேற்பார்வை பார்த்து, இடையிடையே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து அவர்களை வழியனுப்பி வைப்பார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ‘சுமைதாங்கி சாய்ந்தால்…!’
Short Story in Tamil

மேலே கூறப்பட்ட காட்சிகள் எல்லாம் தன் வீட்டு பால்கனி பக்கம் செல்லும்போது பார்த்தவைதான். அவர்கள் வீட்டில், ஒருவரையொருவர் அழைப்பதைக் கேட்டுத்தான் அவர்களது பெயர்கள் கூட பரிச்சயம்.

சிறிய குடும்பம். அமைதியான குடும்பத்தினர். குழந்தைகளின் அப்பா அலுவலக வேலை காரணமாக வெளிநாட்டில் இருப்பவர் போலும். ராகவன் இந்த ஃபிளாட்டில் குடியேறிய ஐந்து வருடத்தில் ஒரே முறை, இரண்டு பெரிய சூட்கேஸுகளுடன் சரயுவின் கணவர் காரில் வந்து இறங்கி, வீட்டுக்குள் நுழைந்ததைக் காண நேரிட்டது.

அப்போதுகூட அவர் திரும்பிச் சென்றதையோ அவர் வரவால் வீட்டில் ஆரவாரச் சப்தங்கள் எழுந்ததையோ அறியும் சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை.

ரமாவும், ராகவனும் எப்போதாவது பின் வீட்டு விஷயம் குறித்துப் பேசுவதுண்டு. அது என்னவென்றால், அக்கம் பக்கம் பாராமல் அந்தக் குடும்பத்தினர், அவரவர் வேலைகளைக் கவனித்துக் கொண்டு செல்வதுதான்.

மாப்பிள்ளை அங்கு இல்லாத காரணத்தால், மகளையும், பேரக் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள அவர்களுடனே தங்கி யிருக்கும் அந்த மாமாவுக்கு வேறு குழந்தைகள் இருப்பார்களா, இருந்தால் அவர்கள் எங்கே இருக்கக்கூடும் என்றுகூட பேசிக்கொள்வார்கள்.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்னால்தான், ஒரு நாள் ஆம்புலன்ஸில் மாமாவை ஏற்றிச் சென்றதை ரமா பார்த்தாள். 'என்னவோ, ஏதோ' என்று மனது சஞ்சலப்பட்டபோதிலும், ஏதும் தெரிந்துகொள்ள முடியவில்லை. மறுநாள், சரயு அவள் வீட்டு வேலைக்கு வரும் பெண்ணிடம், "நான் ஆஸ்பத்திரிக்குப் போகிறேன். அப்பாவுக்கு நெஞ்சுவலி. உனக்காகத்தான் காத்திருந்தேன். நீ நாளை காலையில் வா" என்று சொல்லிவிட்டுக் கிளம்பியபோதுதான் மாமாவுக்கு என்ன நேர்ந்தது என்று இவர்களுக்குத் தெரியவந்தது.

ண்ண ஓட்டத்தில் இருந்து விடுபட்ட ராகவன், பால்கனிப் பக்கம் வந்தான். நெருங்கிய உறவினர் போலும். வேகமாக ஆட்டோவில் வந்து இறங்கி, வீட்டினுள் சென்றார். சற்று நேரம் கழித்துப் பார்த்தபோது, பால்கனியிலும் சிலர் நின்றிருந்தனர். வீட்டுக்குள் இருந்து சற்று உரத்த குரலில் எல்லோரும் பேசுவது கேட்டது. பிறகு பால்கனிக்கு வந்த சரயுவைத் தேற்றியபடியே மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

ரமாவும், ராகவனும் நீண்ட நேரம் விழித்திருந்தனர். இரவு உறங்கப் போவதற்கு முன் பால்கனிப் பக்கம் சென்றபோது, பின் வீட்டில் விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டிருக்க, கதவுகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன. அதிகப்படியாக உறவினர்கள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. அடுத்தடுத்த வீடுகளில் இருந்தும் கூட ஒரு பெரிய இழப்பினால் துக்கத்தில் இருப்பவர்களிடம் ஆறுதலாக ஒரு வார்த்தைக் கூற முடியவில்லை. ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்க முடியவில்லை.

இதையும் படியுங்கள்:
'முகப்பருவை விரட்டணுமா?' இதோ சீக்ரெட் டிப்ஸ்!
Short Story in Tamil

இதுநாள் வரை அறிமுகப் புன்னகை கூடப் பரிமாறிக் கொண்டதில்லையே; இப்போது அவர்களிடம் சென்று எப்படித் துவங்குவது? 'தேவையற்ற ஆர்வம்' என்று அவர்கள் நினைத்து விடுவார்களோ என்ற தயக்கம்.

ராகவனுக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. ஏதோ ஒரு காரணத்தால் அன்று எதிர்பாராதவிதமாக பள்ளிக்கூடம் சற்று சீக்கிரமாக முடிந்து விட்டதால், ஸ்ருதி மட்டும் வீட்டுக்கு வந்து விட்டாள். சரயு வேலை முடிந்து திரும்ப மாலை ஆறு மணி ஆகிவிடும். குழந்தைகள் வருவதற்குள் திரும்பி விடலாம் என்று மாமா பக்கத்தில் எங்காவது போயிருப்பார் போலும். வீடு பூட்டி இருந்ததால் ஸ்ருதி வீட்டு வாசற்படியிலேயே புத்தகப் பையுடன் உட்கார்ந்துகொண்டாள்.

"என்னங்க, பின் வீட்டுக் குழந்தை படிக்கட்டிலேயே உட்கார்ந்திருக்கா. வீடு பூட்டி இருக்கு. நம்ம வீட்டுக்கு வரச் சொல்லலாமா?" என்று கேட்டபடி வந்தாள் ரமா. "சரி, கூப்பிடலாமே" என்று சொன்னபடியே ராகவனும் ரமாவோடு பால்கனிக்கு வந்தான். ஸ்ருதி நோட்டுப்புத்தகத்தைப் பிரித்து வைத்து 'ஹோம் - வொர்க்" செய்து கொண்டிருந்தாள்.

அவளை வரச் சொல்லிக் கூப்பிட்டால், கவனத்தைச் சிதற விட்டதாக ஆகி விடுமோ, கூப்பிட்டாலும் அவள் வருவாளா, அப்படியே வந்தாலும் அம்மாவும், தாத்தாவும் அதற்காக அவளைக் கடிந்து கொள்வார்களோ தெரியவில்லையே! மௌனமாகத் திரும்பி வந்தனர் இருவரும்.

சற்று நேரத்தில் இருவருக்கும் காப்பி எடுத்துக் கொண்டு வந்த ரமா, குடிக்க மனமில்லாமல் பால்கனிப் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அப்பாடா! ஸ்ருதியின் தாத்தா வந்து விட்டிருந்தார்.

இனிமேல் சரயு, என்ன மாற்று ஏற்பாடுகள் செய்வாளோ தெரியவில்லை என்று பேசிக் கொண்டது நினைவில் படர்ந்தது.

மறுநாள் காலை சீக்கிரமே பின் வீட்டில் கூட்டம் சேர்ந்துவிட்டது. ரமா, ராகவன் இருவருக்கும் எந்த வேலையும் ஓடவில்லை. மிகவும் நெருக்கமான ஒருவரை இழந்துவிட்ட துயரத்தில் இருவரும் பேச்சற்று வீட்டுக்குள் மௌனம் காத்தனர். மாமாவின் முகத்தைக் கடைசியாக ஒரு முறை பார்க்க முடியுமா என்று இருவர் மனதிலும் ஓர் ஆதங்கம்.

ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து மாமாவின் இறுதிப் பயணம் ஆரம்பமானது. ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் சூழ்ந்தபடி மாமா வீட்டிற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டார். பால்கனியில் இருந்து பார்க்க முயன்ற இவர்கள் இருவரும் சுற்றி நின்ற கூட்டத்தினரை மட்டுமே பார்க்க முடிந்தது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், யாராவது இப்படி அப்படி நகர்ந்தால் சற்றுப் பார்க்கலாமே என்று காத்து நின்றவர்கள், கடைசி வரை அந்த வாய்ப்பைப் பெறவே இல்லை. மாமாவின் நல்ல குணத்துக்கு அவருக்குச் சிறந்தபேறு கிடைக்கும் என்று ஒருவருக்கொருவர் கூறியபடியே உள்ளே சென்றனர்.

பின்னர் சில நாட்களுக்கு ஸ்லோகங்கள் சொல்லும் மாமாவின் குரல் கேட்காத காலைப் பொழுதுகளிலும், பிற்பாடு குழந்தைகளுக்கு 'டாடா' சொல்லி அனுப்பி வைக்கும் சப்தம் கேட்காத வேளைகளிலும், அவரது இழப்பு ஞாபகத்துக்கு வந்து இருவரையும் வருத்தத்துக்கு உள்ளாக்கியது.

ப்போதெல்லாம் பெரியவனான சஞ்சய் பூட்டைத் திறந்துகொண்டு ஸ்ருதி யுடன் வீட்டுக்குள் போகிறான். உள்பக்கமாகத் தாளிடப்பட்ட கதவுகள், சரயு வந்து தட்டிய பிறகு திறக்கப்படுகின்றன. அவரவர்களுக்குக் கூடுதல் பொறுப்புகள் சேர்க்கப்பட்டன போலும்.

ஆனால், சஞ்சயோ, ஸ்ருதியோ, சரயுவோ இந்தப் பக்கம் திரும்பினால், ஒரு 'ஹலோ' சொல்ல நினைக்கிற ரமாவுக்கு அந்தச் சந்தர்ப்பம் இன்று வரையிலும் இன்னும் கிட்டவில்லை!

நகர வாழ்க்கை நாகரிகம் அருகருகே இருப்பவர்களையும் அந்நியர்களாகவே நிறுத்தி வைக்கிறது!

 பின்குறிப்பு:-

மங்கையர் மலர் டிசம்பர் 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com