
வாசலில் நின்று வெகு நேரமாகக் கூவிக் கொண்டிருந்தாள் அவள். தலையில் ஏழெட்டுப் பாய்கள்.. வலக்கையில் ஐந்தாறு வீடு கூட்டும் சீமார்கள்.
‘அய்யா… ரொம்ப நேரமா அலையறேன். யாருமே எதுவும் வாங்கலை.! ‘பாய் வெயிட்’ சுமக்க முடியலை..! ரெண்டு பாய் வாங்கி உதவுங்கண்ணு சொன்னாள்.
‘ஏம்மா குளிர்காலமா இருந்தாக் கூட, படுக்கப் பாய் வாங்கலாம்., இப்போ வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு…! வெறும் தரையில் படுத்தாப் போதும்னு இருக்கு உடம்புக்கு!., பாய் வேண்டாம். ரொம்ப நேரமா சப்தம் வேற போட்டுக் கூவீட்டே நீ! ஒண்ணு - பண்ணு, வீடு கூட்டும் சீமார் கொடு! என்ன விலை?’ கேட்க,
‘இருநூற்றைம்பது!’ என்றாள்
‘கொள்ளை விலை சொல்றே..?. இரண்டு சீமாராக் கொடு! விலை எவ்வளவு கொறைச்சுத் தருவே?!’
எதோ கணக்குப் போட்டு…
‘ரெண்டு எடுத்தீன்னா ஒரு முன்னூற்றைம்பது கொடுங்க !’ என்றாள்.
‘முன்னூறுன்னாத் தந்துட்டுப் போ! இல்லேன்னா வேண்டாம்!’
‘சரி சரி மொத வியாபாரம். கொடுங்க!’ என்றாள்
ஐந்நூறு ரூபாய்க்குச் சில்லரை இருக்கா?
அதான் மொத வியாபாரம்னு சொல்றேனே..???’
சரி ஜீபே பண்ணலாமா… ? ஸ்கேன் பண்ணனுமா? நம்பருக்குப் பண்ணனுமா?’
‘நம்பருக்குப் பண்ணுங்க பண்ணீட்டு… அது என் வீட்டுக் காரர் நம்பர்தான்.. ரெண்டு வார்த்தை பேசீட்டுத் தரேன். டயல் பண்ணிக் கொடுங்க!’ என்றாள்
வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்த இருமொழிக் கொள்கையில் அசத்தினாள்.
ஜீபே பண்ணி, அவள் கேட்டுக் கொண்டபடி, நம்பரை டயல் பண்ணிக் கொடுக்க எடுத்தவனிடம்’ ‘நான் தேவி பேசறேன். எங்கிருக்க? சீமார்தான் முன்னூறு ரூபாய்க்கு வித்திருக்கேன். பாய் அப்படியே இருக்கு…! நீ எங்கிருக்கே?’ கேட்டாள். என்ன பதில் வந்தது தெரியலை!
என்னைப் பார்த்துத் திரும்பி…
‘ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வியாபாரம் பண்ண டூவீலர்ல வருவோம். வந்தோம்.! ஆளுக்கு முன்னூறுக்கு விக்கணும்னு ‘டார்கெட்!’ அது முன்னூறுக்குப் பண்ணிடுச்சாம். நான் எங்க இருக்கேன்னு கூட என்னைக் கேட்காம வீ வீலர்ல வீட்டுக்கு போயிடுச்சு! வண்டியை எடுத்துட்டு இங்க வந்திருந்தா, இப்ப நான் பாயைச் சுமந்துட்டுப் போக வேண்டியதில்லை! இனி நான் பஸ் ஏறி, இதைச் சுமந்து வீடு போகணும்! இல்லே, ஆட்டோல வீணா இதை ஏத்திக்கிட்டுப் போகணும். பொம்பளை சுமப்பது ஆம்பளைக்கு ஏன் தெரியறதில்லே?? ’சொல்லிவிட்டு பாயோடு வருத்தத்தோடு வாசல் கடந்தாள்!.
பேர் தேவியாய் இருந்து என்ன? இருமொழியில் அசத்தி என்ன? பெண்ணைப் புரியாத பூமியில்!
அவள் என்னுள் இறக்கிப் போட்ட வார்த்தைச் சுமையை எப்படி இறக்குவது என்று தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்தேன் நான்.