சிறுகதை; கதைகளற்றுக் கடந்து போகும் பால்ய காலங்கள்!

Short Story in Tamil
ஓவியம்; தமிழ்
Published on

-மேரித்தங்கம்

ரண்டு நாளில் சி.இ.ஓ. இன்ஸ்பெக்ஷன் இருக்கிறது என்ற செய்தி வந்தபோது ப்யூலா ராணி டீச்சருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

சி.இ.ஓ. இன்ஸ்பெக்ஷன் வருகிற தினத்தில் ஒன்பதாம் வகுப்புக்கு மாரல் சயின்ஸ். 'மாரல்' வகுப்புகள் என்றாலே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வு மாதிரி. பெரும்பாலும் இவளுடைய மாரல் வகுப்புகளில் மாணவர்களை வெளியில் போய் விளையாடச் சொல்லிவிடுவாள்; அல்லது வேறு ஆசிரியர் அந்த வகுப்பை கேட்டால் தாராளமாக தாரை வார்த்துவிடுவாள். இன்ஸ்பெக்ஷன் அன்று என்ன பேசி, எப்படி அந்த வகுப்பை சமாளிப்பது என்று ஒரு வழியும் புலப்படவில்லை ப்யூலாவுக்கு.

தலைமை ஆசிரியரிடம் போய் 'சார், சி.இ.ஓ. இன்ஸ்பெக்ஷன் வருகிற அன்னைக்கு எனக்கு மாரல் கிளாஸ் ஒண்ணு இருக்கு. அது சம்பந்தமா.." என்று இவள் முடிப்பதற்குள்,

''என்னம்மா, மாரல் கிளாசுக்குப் போய் இப்படி பயப்படுறீங்க! எதுனா நீதி போதனைகளா சொல்ல வேண்டியதுதானம்மா?" நீங்க, நம்ம தமிழ் வாத்தியாரைப் பார்த்துக் கேளுங்க. அவருக்கு நீதிக் கதைகள் நிறையத் தெரிஞ்சிருக்கும்'' என்று அனுப்பி வைத்தார்.

''நீதிக் கதைகளா? எனக்கு அப்படி எதுவும் தெரியாதே! இராமாயணம், மகாபாரதம், சீவகசிந்தாமணி, சீறாப் புராணம்னு செய்யுள்கள் கொஞ்சம் தெரியும். அந்தப் புத்தகங்கள் வேணும்னா தர்றேன் . படிச்சுப் பார்த்து ஒப்பேத்துறியா?" என்றார் தமிழ் ஆசிரியர்.

''அதெல்லாம் பசங்களுக்குத் தெரியும். புதுசா ஏதாச்சும் சொல்லுங்க சார்."ஃ

''ம்.. பாட்டி வடை சுட்டது, காக்கா கல் பொறுக்கி பானையில போட்டு, தண்ணி குடிச்சது மாதிரி கதைகள் பரவாயில்லயா?"

"அதெல்லாம் எலிமென்ட்டரி லெவல் சார். பெரிய பசங்களுக்கு சொல்றது மாதிரி ஏதாவது சொல்லுங்க."

''எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். நீங்க நம்ம கதிரேசன் சாரைப் போய்ப் பாருங்க. அவருதான் நம்ம ஏரியாவுலேயே பட்டிமன்றத்துல நம்பர் ஒன் பேச்சாளர். அவருக்கு இந்த மாதிரி சங்கதிகள் எல்லாம் லட்டு மாதிரி. அப்படியே புட்டு புட்டு வைப்பார்" என்றார் முடிவாக.

சாப்பிட்டு முடித்து பல் குத்திக்கொண்டிருந்த கதிரேசன், ப்யூலா சொன்னதைக் கேட்டு, பகபகவென்று சிரித்தார். "பட்டிமன்றத்துல நாங்க நீதியும் சொல்றதுல்ல, கதையும் சொல்றதுல்ல! இரண்டு மூணு ஜோக் சொல்வோம். உப்புக் கல்லுக்குப் பெறாத தீர்ப்பு சொல்வோம். ஸாரி" என்று சொல்லிவிட்டார்.

விடுப்பு எடுப்பது சரியான யோசனையாகத்தான் தோன்றியது. போயும் போயும் ஓர் இன்ஸ்பெக்ஷனுக்குப் பயந்து லீவு போடுறதாவது என்று தன்மானம் தடுக்க, நூலகத்துக்கு ஓடினாள் ப்யூலா.

நூலகர் மாரிமுத்து, டேபிளில் தலை வைத்துக் குறட்டை விட்டுக்கொண்டிருக்க, இவள் சத்தம் கொடுக்கவும் திடுக்கிட்டு விழித்து 'என்ன?' என்று பார்வையாலேயே வினவினார்.

இதையும் படியுங்கள்:
வசீகர தலைப்பு, துள்ளும் இளமை நடை... வேறு யாரு? நம்ம 'சுஜாதா'வேதான்!
Short Story in Tamil

"இங்க சிறுவர் நீதிக் கதைகள் சம்பந்தமா புக்ஸ் ஏதாச்சும் இருக்குமா?" என்று கேட்டாள் ப்யூலா.

“அப்படி எதுவும் பார்த்த ஞாபகம் எனக்கில்ல. எதுக்கும் அலமாரியில் தேடிப் பாருங்க” என்று சொல்லிவிட்டு தன் தூக்கத்தைத் தொடர்ந்தார்.

அலமாரிகளை ஆராய்ந்தபோது நிறைய அறிவியல் புத்தகங்களும், மாணவர்களின் பாடப் புத்தக மாதிரிகளும், வினாத் தாள்களும் அதிகமிருந்தன. சிவசங்கரி, அகிலன், லட்சுமி, ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் பெரிய பெரிய கதைப் புத்தகங்களும் கொஞ்சம் இருந்தன.

வீட்டுக்கு வந்தபோது வராண்டாவில் ஜானி சுருண்டு படுத்துக்கிடந்தான். பார்க்க பாவமாக இருந்தது. அவசரமாய்க் கதவைத் திறந்து பால் காய்ச்சி அவனை எழுப்பி பிஸ்கட்டும் பாலும் கொடுத்தான். இவனை பராமரிக்கக் கூட அவகாசமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோமே என்று தன்னிரக்கம் சூழ்ந்தது. இவனுக்கு ஒரு நாளாவது கதை சொல்லியிருக்கிறோமா? நிலா காட்டி சோறூட்டி இருக்கிறோமா?

வீட்டில் கதைகள் சொல்ல தாத்தா பாட்டிகள் இல்லை. அம்மா அப்பாக்களுக்கு அதற்கெல்லாம் அவகாசமிருப்பதில்லை. பள்ளிகளிலும் பாடங்களைத் தவிர்த்து வேறெதுவும் கிடைப்பதில்லை. பிள்ளைப் பிராயம் பெரிய சாபம்தான்!

ப்யூலாவின் கணவன், ஒரு புத்தகப் பிரியன். அவ்வப்போது, இவள் கேள்வியே பட்டிராத சிறு பத்திரிக்கைகளில் கதைகளும் கவிதைகளும் எழுதுபவன்.

கணவனிடம் மெதுவாகக் கேட்டாள். "இவ்வளவு புக்ஸ் படிக்கிறீங்க. அப்பப்ப பத்திரிக்கையில் எழுத வேற செய்றீங்களே! எனக்கு நாளைக்கு ஒரு முக்கால் மணி நேரத்துக்கு ஒப்பேத்துற மாதிரி நீதிக் கதைகள் ஏதாவது சொல்லுங்களேன்.

"நீதி சொல்றது இலக்கியவாதியோட வேலை இல்லையே! நான் படிக்கிற, எழுதுற கதைகளில் எல்லாம் கலை இருக்கும்; அனுபவம் இருக்கும்; நீ தேடுற நீதி இருக்காதே!" என்றபடி ஒரு தடிமனான புத்தகத்தை விரித்துப் படிக்கத் தொடங்கினான்.

மறுநாள் ப்யூலா, பயந்தபடியே அவள் நீதிபோதனை வகுப்பிலிருந்தபோது இன்ஸ்பெக்ஷன் நடந்தது. இவள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எதை எதையோ உளறி நீதி போதனை என்று ஒப்பேற்றி விட்டு, மாணவர்களைப் பார்த்து "உங்களுக்குத் தெரிந்த கதைகள் ஏதாவது சொல்லுங்கள்" சமயோசிதமாக. என்றாள்

மணிகண்டன் எழுந்து நிற்கவும் ப்யூலாவுக்கு சுரீரென்றது. இவன் மக்கு மாணவனாயிற்றே! கிணறு வெட்ட பூதம் கிளம்பும் போலிருக்கிறதே! என்னத்தைச் சொல்லி மானத்தை வாங்கப் போகிறானோ என்று பதறினாள்.

''மிஸ். ரொம்ப நாளாவே ஒரு விஷயம் என் மனசுல அரிச்சுக்கிட்டு இருக்கு. சமீபத்துல ஒரு சம்பவம் என் வாழ்க்கையில நடந்துச்சு மிஸ். நான் பன்னிரண்டு ரூபாய்க்கு ஒரு நோட்டு வாங்கிட்டு ஐம்பது ரூபாய் கொடுத்தேன். கடைக்காரர் ஏதோ ஞாபகத்துல நான் குடுத்தது நூறு ரூபாய்ன்னு நெனைச்சுக்கிட்டு எண்பத்தெட்டு ரூபாய் திருப்பிக் கொடுத்தார். நானும் கவனிக்காம பணத்தை வாங்கிட்டு அம்மாகிட்ட கொடுத்தேன். அவங்க கவனிச்சு, அதிகப்படியான ரூபாயைக் கடைக்காரர்கிட்டயே திருப்பிக் கொடுத்துட்டு வரச் சொன்னாங்க.

''நானும் சரின்னு கொடுக்கப் போனப்ப அப்பா, ஹால்ல உட்கார்ந்து தன் ஆடிட்டர்கிட்ட, 'பதினைஞ்சு இலட்ச ரூபாயெல்லாம் வரியா கட்ட முடியாது. இன்னும் கொஞ்சம் கணக்கு வழக்குகளை அட்ஜஸ்ட் பண்ணி ரெண்டு அல்லது மூணு இலட்சம் மட்டும் வரி கட்டுற மாதிரி கணக்கெழுதுங்க'னு சொல்லிக்கிட்டு இருந்தார். எனக்கு நேர்மை பத்தி சின்னக் குழப்பம் வந்துச்சு.

"சரி, அது பெரியவங்க விஷயம்னு நெனைச்சுக்கிட்டு நான் பணத்தைத் திருப்பிக் கொடுக்க கடைக்குப் போனேன். கடையில என் வயதொத்த பொண்ணுகூட கடைக்காரர் சண்டை போட்டுக்கிட்டு இருந்தார். என்ன விஷயம்னா, அந்தப் பெண், இவர் கடையில முப்பத்தைந்து ரூபாய்க்கு ஒரு பேனா வாங்கியிருக்கிறாள். வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் பிரிச்சுப் பார்த்தபோதுதான் தெரிஞ்சுருக்கு அது ரிப்பேரான பேனான்னு.

"'நீ போற வழியில பேனாவ போட்டு உடைச்சுட்டு இப்ப வந்து புதுப்பேனா கேட்குற, அதெல்லா மாற்றித் தர முடியாது'ன்னு கடைக்காரர் வம்படியா சொல்றாரு. அப்படி அவர் சொல்லும்போது, அவர் முகத்துல ஒரு பழுதுள்ள பேனாவ சிறுமி தலையில கட்டிட்ட சந்தோஷத்த நான் கண் கூடாப் பார்த்தேன்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் அழுவதற்கான காரணங்கள்: பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்
Short Story in Tamil

"எங்க அப்பா, கடைக்காரர்னு யாருமே நேர்மைபற்றி சிந்திக்கலையா நேர்மைங்கிறது காலத்துக்கு காலம், மனிதருக்கு மனிதர், வயசுக்குத் தக்கபடி எல்லாம் மாறுபடுமா மிஸ்? விளக்கிச் சொல்லுங்களேன்" என்று கேட்டபடி பரிதாபமாகப் பார்த்தான்.

சி.இ.ஓ. அவன் தோளில் தட்டி 'வெரி குட்' என்றாள். "கடைக்காரர் உனக்கு அதிகப்படியா கொடுத்த ரூபாயை திருப்பிக் கொடுத்தியா இல்லையான்னு இன்னும் சொல்லலையே!" என்றார் ஆர்வம் பொங்க.

"நீங்களே சொல்லுங்க மிஸ். நாள் திருப்பிக் கொடுக்கணுமா, தேவையில்லையா?" என்றான். சி.இ.ஓ. மாணவர்களை நோக்கி இந்தக் கேள்வியை வீசினாள். திருப்பித் தந்திருக்க வேண்டும் என்று மூன்று பேர் மட்டும் கைதூக்கினார்கள். மற்ற முப்பத்தெட்டு பேரும். திருப்பித் தரத் தேவையில்லை என்றார்கள். "சரி நீ என்ன செய்தேன்னு சொல்லு" என்றாள் சி.இ.ஓ.

"நான் முப்பத்தைந்து ரூபாயை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்து வேறொரு பேனா வாங்கிக்க சொன்னேன். மீதி ரூபாயை நானே வெச்சுக்கிட்டேன் ¬¬¬¬¬¬என்றான் மணிகண்டன். எல்லோரும் கைதட்டினார்கள், சி.இ.ஓ. உட்பட.

ப்யூலா, பிரமித்து நின்றாள்.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர், பிப்ரவரி 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com