பெற்றோர்கள், அதிகமாக கவனம் செலுத்த வேண்டியது குழந்தைகள் மீதுதான். குழந்தைகள் திடீரென்று அழும்போது, எதற்காக அழுகிறார்கள் என்பதை கண்டறிவதே பெற்றோர்களுக்கு பெரிய சவாலாக அமையும். இதுபோன்ற நேரங்களில் குழந்தைகளை சமாளிக்க சில டிப்ஸை தெரிந்துவைத்துக் கொள்வது நல்லதுதானே பெற்றோர்களே! வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்!
* குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால், வெந்நீரில் சுக்கு தட்டிப்போட்டு வெது வெதுப்பாகக் கொடுத்தால், வாயு கலைந்து மோஷன் ஆகி சரியாகிவிடும்.
* குழந்தை அழும்போது காதுப் பக்கம் தன் கையைக்கொண்டு போய் வைத்துக் கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம். உடனே மருத்துவரிடம் காண்பித்து தக்க சிகிச்சை அளிக்க வேண்டும்.
* மழை, குளிர்காலங்களில் குழந்தைகள் வெறும் காலுடன் நடந்தால் 'சிலீர்' என்று குளிர் காலைத்தாக்கும். சாக்ஸை குழந்தைகளுக்கு வீட்டிற்குள் நடக்கும்போது போட்டு விட்டால் போதும்.
* வீட்டில், குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப்புண் வருகிறதா? உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை எதேனும் வளர்க்கிறீர்களா? அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளை பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்கு தொண்டைப் புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும்.
* குழந்தையின் பற்களில் கரும் புள்ளிகள் மற்றும் ஓட்டை இருப்பின் பல் டாக்டரிடம் காண்பித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈத்தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி கொஞ்சம் புதினா இலைகளை கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.
* பாலில் தேன் சேர்த்து வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்கள் உடல் வளர்ச்சி சீராகவும் சரியாகவும் அமையும்.
* குழந்தைகளுக்கு இரவு 1-2 பேரீச்சம் பழம் கொடுத்து பால் அல்லது தண்ணீர் குடிக்கக் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும், மூளை பலப்படும்.
* குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனிக்க வேண்டும். பேசாமல் விட்டு விட்டால் சீழ் மூளைக்கு சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப் படும்.
* குழந்தைகளை கோரைப்பாய் விரித்து அதன் மீது ஒரு துணியையும் விரித்துப் படுக்க வைத்தால் உடல் நலத்திற்கு நல்லது. எந்த சீதோஷ்ண நிலைக்கும் மிகவும் உகந்தது.
* குழந்தைகளில் சிலருக்கு பால் அலர்ஜி இருக்கலாம். அவர்களுக்கு யோகார்ட் கொடுக்கலாம்.
* சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதை தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் பாதிக்கும்.
* குழந்தைகளுக்குத் தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலை விட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப் பால்.