சிறுகதை - புத்தியா? வீரமா? அறிவா?

ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

ஜ்ஜயினி மாநகரத்தை ஒரு புத்திசாலி அரசர் ஆண்டு வந்தார். அவருடைய முதன் மந்திரி ஹரிதாஸ் மதியூகி. அவருடைய மனைவி சந்திரகலா. அவர்களுக்கு ராமதேவா என்ற மகனும், சந்திரவதி என்ற மகளும் இருந்தனர். சந்திரவதி பேரழகி. அவளின் அழகு உஜ்ஜயினி தொடங்கி, அருகிலுள்ள நாடுகளிலும் பரவியிருந்தது. இத்தனை அழகான பெண்ணிற்கு, ஒரு நல்ல கணவன் அமைய வேண்டுமே என்ற கவலை அவளுடைய பெற்றொர்க்கும், அண்ணன் ராமதேவாவிற்கும் இருந்தது.

ந்திரவதி மணப்பருவம் அடைந்தவுடன், அவள் திருமணத்தைப் பற்றிக் குடும்பத்தவர் அவளின் கருத்தைக் கேட்டனர். “நான் நல்ல படித்த அறிவாளியை மணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றாள் சந்திரவதி. “உலகத்தில் அறிவாளிகள் குறைவு. சில சமயம் நன்கு கற்றறிந்தவர்கள்கூட முட்டாள்கள்போல நடந்துகொள்கிறார்கள்” என்றார் தந்தை ஹரிதாஸ். “இல்லையென்றால் ஒரு வீரனை மணம் புரிந்துகொள்வேன்” என்றாள் சந்திரவதி.

“வீரர்களும் எண்ணிக்கையில் குறைவு. பெரிய வீரன் என்று சொல்பவன்கூட, அவன் உயிருக்கு ஆபத்து என்றால் கோழையாகி விடுகிறான்” என்றாள் தாயார் சந்திரகலா. “ஒரு புத்திசாலியைக் கரம் பிடிப்பேன்” என்றாள் மகள். “புத்திசாலி என்பவர்கள் சிலர் தந்திரமாக மற்றவர்களை ஏமாற்றும் குணம்கொண்டவர்களாகவும் இருக்கலாம்” என்றான் அண்ணன் ராமதேவா.

“என் கணவனாக விரும்புவர் அறிவாளி அல்லது மாவீரன் அல்லது புத்திசாலியாக இருக்க வேண்டும், என்பதே எனது விருப்பம்” என்றாள் சந்திரவதி. “உனக்கு ஏற்ற துணைவனைக் கண்டுபிடிப்பது கடினம் என்றாலும், உன் விருப்பப்படியே எல்லாம் நடக்கும்” என்றார்கள் பெற்றோரும், சகோதரனும்.

ரு முறை அரசு உடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிட அண்டை நாடான மால்வாவிற்குச் சென்றார் ஹரிதாஸ். அங்கே, அவருக்கு எல்லா உதவியையும் செய்தான் அர்ஜுன் என்ற அழகான வாலிபன். அவனுடைய நடத்தை, புத்திசாலித்தனம் அவரைக் கவர்ந்தது. வந்த வேலை முடிந்தவுடன், புறப்படும் முன்னால், அர்ஜூன் தயங்கியபடியே ஹரிதாஸிடம் வந்தான். “உங்கள் மகள் பேரழகி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் மகளை மணம் புரிய ஆசைப்படுகிறேன்” என்றான். ஹரிதாஸூக்கும் அவனைப் பிடித்திருந்ததால், “நீ அறிவாளியா, தைரியசாலியா, புத்திசாலியா” என்று கேட்டார்.  அர்ஜூன் உடனே “நான் புத்திசாலி” என்றான். “புத்திசாலி என்பதை நிரூபிக்க முடியமா” என்று கேட்டார் ஹரிதாஸ்.

“நிச்சயமாக” என்று சொல்லிச் சென்ற அர்ஜூன், அடுத்த நாள் ஒரு பறக்கும் தேருடன் வந்தான். “இந்த தேர் நான் உருவாக்கியது. என்னுடன் வாருங்கள். நான் உங்களுக்கு இந்த நாட்டை வானத்திலிருந்து காண்பிக்கிறேன்” என்றான். வானத்திலிருந்து மாட மாளிகைகளையும், நதிகள், காடுகளையும் பார்க்க மிகவும் ரம்மியமாக இருந்தது. “நீ உண்மையிலே புத்திசாலி என்று ஒத்துக்கொள்கிறேன். இன்றிலிருந்து பத்து நாட்களில் முழு நிலவு வரும். அன்று என்னுடைய மாளிகைக்கு வா. நான் என் மகளை மணமுடித்து வைக்கிறேன்.” என்றார் ஹரிதாஸ்.

தே நாளில், ராமதேவா அவனுடைய நண்பன் சஞ்சீவ் என்பவனுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். சஞ்சீவ், ராமதேவாவிடம் “நான் உன் சகோதரியை மணம் புரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான். “என் சகோதரி அவள் வாழ்க்கைத் துணை அறிவாளி அல்லது மாவீரன் அல்லது புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள்” என்றான் ராமதேவா, “உனக்குத் தெரியும் என்னுடைய வீரத்தைப் பற்றி” என்றான் சஞ்சீவ். அப்போது, மிகவும் பெரிய சிங்கம் ஒன்று பயங்கரமாக கர்ஜித்துக்கொண்டு திறந்த வாயுடன் அவர்கள் மீது பாய்ந்தது. சிங்கத்தைப் பார்த்து ராமதேவா பயந்து ஓட, சஞ்சீவ், சிங்கத்தின் திறந்த வாயைக் குறி வைத்து அம்பை செலுத்தினான். சிங்கம் பெருத்த கர்ஜனையுடன் மடிந்தது.

ராமதேவாவிற்கு மிக்க மகிழ்ச்சி, தன் தங்கைக்கு ஏற்ற மாவீரனைக கண்டுபிடித்து விட்டேன் என்று. “சஞ்சீவ், நீ என் தங்கைக்குப் பொருத்தமானவன், வருகின்ற பௌர்ணமியன்று எங்கள் வீட்டிற்கு வா. என் தங்கையை உனக்கு மண முடித்து வைக்கிறேன்” என்றான்.

இதையும் படியுங்கள்:
உடற்பிரச்னைகளின் அறிகுறிகளைக் காட்டும் நாக்கு!
ஓவியம்: தமிழ்

தே நாளில், மற்றுமொரு இளைஞன் சந்திரகலாவை அணுகி பெண் கேட்டான். “நீ அறிவாளியா, தைரியசாலியா, புத்திசாலியா” என்று கேட்டாள் சந்திரகலா. “நான் அறிவாளி” என்றான் அந்த வாலிபன் விதுரன். “அப்படியென்றால் என் கேள்விக்கு பதில் சொல்” என்றாள் சந்திரகலா. “எல்லா சொல்லுக்கும் எளிதில் விளக்கம் அளிக்க முடியம். ஆனால், இந்த சொல்லுக்கு விளக்கம் அளிப்பது கடினம். என்ன சொல்?” என்று கேட்டாள் சந்திரகலா. “கடவுள்” என்றான் விதுரன். “கடவுள் ஒருவரா, அல்லது பலர் உண்டா” என்று கேட்டாள். “கடவுள் ஒருவர்தான், ஆனால், பல கடவுள்கள் என்றும் சொல்லலாம்” என்றான். “எப்படி, பல கடவுள்கள்” என்றாள் சந்திரகலா. “உலகில் எத்தனை மனிதர்கள் உள்ளாரோ, அத்தனை கடவுளரும் உண்டு” என்றான் விதுரன்.

விதுரன் அறிவாளி என்பதை ஒத்துக்கொண்ட சந்திரகலா, பௌர்ணமியன்று மாளிகைக்கு வரும்படியும், அன்று மகளை மணம் செய்து வைப்பதாகவும் கூறினாள்.

முழுநிலவு வந்தது. சந்திரவதியைக் கரம்பிடிக்க அர்ஜூன், சஞ்சீவ், விதுரன் மூவரும் முதலமைச்சர் ஹரிதாஸ் மாளிகைக்குச் சென்றனர். சந்திரவதி விரும்பிய குணாதிசயங்கள் மூவரிடமும் இருந்தன. யாருக்கு அவளை மணம் செய்துகொடுப்பது என்று குழம்பினார் ஹரிதாஸ்.

அப்போது, நந்தவனத்தில் தோழியருடன் நடந்து கொண்டிருந்த சந்திரவதியை ஒரு அரக்கன் கவர்ந்து சென்றுவிட்டதாக செய்தி வந்தது. என்ன செய்வது என்று திகைத்துக்கொண்டிருந்தபோது அறிவாளியான விதுரன் “யோசித்துப் பார்த்தால், அரக்கன் தொலை தூரம் தள்ளி மலைமேலே உள்ள கோட்டையில் சந்திரவதியை சிறை வைத்திருக்க வேண்டும்” என்றான்.

“கவலை வேண்டாம். என்னுடைய புத்திகூர்மை கொண்டு என்னால் பறக்கும் தேர் உருவாக்க முடியும். அதில், சந்திரவதியை சிறை வைத்திருக்கும் கோட்டைக்கு நான் உங்களைக் கூட்டிச் செல்கிறேன்” என்றான் புத்திசாலியான அர்ஜூன். “அரக்கனிடம் சண்டையிட்டு சந்திரவதியை அவனிடமிருந்து காப்பாற்றுவேன்” என்றான் தைரியசாலி சஞ்சீவ்.

சொன்னதுபோலவே அர்ஜூன் பறக்கும் தேரில், அரக்கன் இருப்பிடம் செல்ல, சஞ்சீவ், அரக்கனின் உருவம் கண்டு பயப்படாமல், அவனுடன் சண்டையிட்டு, மலையிலிருந்து தள்ளிக் கொன்றான். இப்போது மூவரும், தங்களுடைய திறமையால் சந்திரவதி காப்பாற்றப்பட்டதால், அவளை மணந்து கொள்ளும் தகுதி தங்களுக்கே என்று வாதிட்டார்கள். முடிவை எடுக்க வேண்டியது சந்திரவதி என்றார் ஹரிதாஸ்.

சந்திரவதி சொன்னாள். “அறிவாளி, அரக்கன் இருக்குமிடத்தைக் கண்டறிந்து சொன்னான். அந்த இடத்தை அடைவதற்கு உதவினான் புத்திசாலி. இரண்டு செயலும் பாரட்டத்தக்க செயல் என்றாலும், இவற்றில் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை. ஆனால், தைரியசாலி, அரக்கனுடன் சண்டை போட்டால் உயிர் இழக்க நேரிடும் என்பது தெரிந்தும், அதைப் பற்றிய கவலையில்லாமல் அரக்கனுடன் போரிட்டான். ஆகவே, மூவரில் நான் மாவீரன் சஞ்சீவை மணப்பதே சரியான முடிவாக இருக்கும்” என்றாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com