நாக்கு மனித உடலின் சகல உறுப்புகளோடு தொடர்புடைய ஓர் உறுப்பு. வைட்டமின் குறைபாடு, தொற்று பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு என உடலில் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை காட்டிக் கொடுக்கும். அதனால்தான் மருத்துவர்கள் முதலில் நாக்கை நீட்டச் சொல்லி பரிசோதிக்கின்றனர்.
நாக்கின் நிறம் மட்டுமின்றி, அதன் வடிவம், மேல், கீழ் பகுதிகளும் நோய் பாதிப்பை காட்டுகிறது. சில அறிகுறிகளாக, நாக்கு வெள்ளை நிறத்தில் இருந்தால் வாயில் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என அறியலாம். சிவப்பு நிறமென்றால் வைட்டமின் பாதிப்பு, மஞ்சள் நிறமென்றால் நீர்ச்சத்து குறைபாடு என அறியலாம்.
நாக்கின் நுனி மட்டும் சிவந்திருந்தால் மன அழுத்தம், நாக்கின் பின்புறம் சிவப்பு நிறமாக இருக்கும் பட்சத்தில் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது என அறியலாம். நாக்கு வீங்கியிருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு, நாக்கில் வலி இருந்தால் சர்க்கரை நோய், நாக்கின் இடது, வலது பக்கத்தில் பாதிப்பு இருந்தால் கல்லீரல் பாதிப்பு, நாக்கின் மேற்பரப்பு வறண்டு இருந்தால் இரத்த சோகை,அடர் சிவப்பெனில் உஷ்ணம், கறுப்பு நிற புள்ளிகள் எனில் இரத்த ஓட்டத்தில் பிரச்னை என அறியலாம்.
நாக்கை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். காலையில் பல் துலக்கும்போது, நாக்கை சுத்தப்படுத்த வேண்டும். நாக்கை பராமரிக்காமல் விடுவது வாய் மற்றும் பல் தொடர்பான பிரச்னைகளை கொடுத்து விடும். நாம் சாப்பிடும் உணவு செரிக்க எச்சில் மிக மிக அவசியம். எனவே, தினமும் ஃப்ரஷ் செய்யும்போது நாக்கின் மேல்புறத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். டங் கிளீனரை அழுத்தித் தேய்த்து சுத்தம் பண்ணக் கூடாது.அப்படிச் செய்ய வீக்கம், வலி உண்டாக வாய்ப்புண்டு.
மிதமான சூட்டில் தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றமின்றி சுத்தமாக இருக்கும். சாப்பாட்டிற்குப் பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேற்சொன்ன அறிகுறிகள் நாவில் தென்பட்டால் வயிற்றுப் புண், வாய்ப்புண்தான் என சுய மருத்துவம் பார்க்காமல் மருத்துவரைப் பார்க்க வேண்டும். பற்களை டென்டல் ஃப்ளாஸ் கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். நல்ல உணவு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் இருந்தால் நாவின் பணி பாதுகாக்கப்படும்.