
பாண்டிபஜார் அருகே சென்று கொண்டிருந்த ஸ்ரீநாத், தம்மை யாரோ அழைப்பது கண்டு தயங்கி நின்றார். “என்னை நினைவிருக்கிறதா?” அழைத்தவர் கேட்டார்.
“மன்னிக்கவும், இல்லை.” என்றார் ஸ்ரீநாத்.
“நீங்கள் என் திருமணத்தை வீடியோ எடுத்துக் கொடுத்தீர்கள்” என்ற அவர் திருமணத் தேதி, நடைபெற்ற மண்டபம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னார். ஸ்ரீநாத்துக்கும் ஞாபகம் வந்துவிட்டது. “எப்படி இருக்கிறது உங்கள் மணவாழ்க்கை?” என்று கேட்டார்.
“உங்கள் உதவியால் ‘இப்போது‘ மகிழ்ச்சிகரமாக இருக்கிறது-.”
“இப்போது என்றால்...?”
“ஆமாம்; திருமணமாகி ஆறு மாதங்கள் வரை நான்... வந்து, நாங்கள்... சந்தோஷமாகவே இல்லை. விவாகரத்து வரை போய்விட்டோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்....”
“அடக் கடவுளே!”
“ஆமாம்; அதன் பிறகு உங்கள் உதவியால்தான் நாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறோம்; மகிழ்ச்சியான மணவாழ்க்கை நடத்தி வருகிறோம்.”
“என் உதவியா?புரியவில்லையே!”
“அதற்கு முன்னால் சிக்கலைச் சொல்லிவிடுகிறேன். திருமணமாகி என் வீட்டிற்கு வந்த என் மனைவியின் போக்கு எனக்குப் பிடிக்கவேயில்லை. மரியாதை இல்லாமல் அவள் பழகுவதும், எதிர்ப்பேச்சுப் பேசுவதும், எதையாவது நினைத்துக் கொண்டு அழுவதும்.... நான் வாழ்க்கையையே வெறுத்துவிட்டேன். ஒரே ஒரு வழிதான் எனக்குத் தோன்றியது. அவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டால், தற்காலிகமான பிரிவினை காரணமாக அவள் போக்கில் மாற்றம் ஏற்படும் என்று நம்பினேன். ஆனால் நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்றாகி விட்டது. அவள் மாறவில்லை.”
“மாறவில்லை என்று எப்படித் தீர்மானித்தீர்கள்?”
“அவளுடைய வீட்டிலிருந்து யாருமே என்னவென்று விசாரிப்பதற்கே வரவில்லையே! நானாகப்போய் அழைத்து வருவதென்றால் என் கௌரவம் என்னாவது?‘‘
ஸ்ரீநாத் அவரைப் பார்த்துச் சிரித்தார்.
“இதேபோல நீங்கள் எடுத்த வீடியோ என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது!”
அவரைக் குழப்பத்துடன் பார்த்தார் ஸ்ரீநாத்.
“மனைவியை அனுப்பிவிட்டு ஒரு சில மாதங்கள் ஆன பிறகு விவாகரத்து நோட்டீஸ்கூட அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன். ஒருநாள் தற்செயலாக என் வீட்டில் டிவிடி ப்ளேயரில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு டிவிடியை எடுத்து ‘டெக்’கில் போட்டு விசையைத் தட்டினால் - அது என் திருமண வீடியோ! திரைப்பட வீடியோ உறைக்குள் தற்செயலாகத் திருமண டேப் நுழைந்திருக்கிறது. இப்படி அவல வாழ்க்கை வாழும் என் திருமணம் எப்படி நடந்தது என்பதை மீண்டும் பார்க்கும் ஆவலில் படத்தை ஓடவிட்டேன்
“படத்தில் என் மனைவி -அவள் முகத்தில்தான் எத்தனை கவலை, பயம்! பள்ளிக்கூடத்துக்கு முதல் நாள் போகும் எல்கேஜி மாணவி மாதிரி! அவளுடைய பெற்றோர்கள் முகத்திலும் தாங்க முடியாத வேதனை. இருபத்தைந்து வருடங்கள் ஒரே சூழலில் தாம் வளர்த்த பெண், முற்றிலும் புதிய சூழ்நிலையில் புதிய உறவுகளை எப்படி எதிர்கொள்வாளோ, எப்படிச் சமாளிப்பாளோ என்ற அச்சம்...
தாலி கட்டியபோது, அவள் தந்தை குழந்தை போலக் கேவிக் கேவி அழுத காட்சி என்னைச் சிந்திக்க வைத்தது. முற்றிலும் புதிய சூழ்நிலைக்குள் அவள் உடனே பொருந்திவிட வேண்டும் என்று எதிர்பார்த்தது என் தவறு! அதை எளிதாக்க நான், இரு குடும்பத்தாருக்கும் இடையே ஒரு பாலமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்? மாறாக முரட்டுத்தனமாக நடந்து கொண்டு விவாகரத்து வரையில் பிரச்னையைக் கொண்டு போய்விட்டேனே!”
“பிறகு?”
“என் பெற்றோரிடம் பேசினேன். அனாவசியமாக ஒரு பெண்ணை அவதிக்குள்ளாக்குவதற்கு நமக்கு உரிமையில்லை. அவளோடு வாழ முடியாதபட்சத்தில், பரந்த மனப்பான்மை இல்லாத நம்மால், எந்தப் பெண்ணுடனுமே வாழ முடியாது. ஆகவே விவாகரத்து நோட்டீஸை வாபஸ் பெற்றுக்கொள்ளப் போகிறேன் என்றேன்.
“அவள் வீட்டிற்குப்போய் விவரம் சொன்னபோது, அவர்கள் வீட்டில் எல்லோருமே கதறி அழுதுவிட்டார்கள். என் குடும்பத்தை அனுசரித்துக் கொண்டு போகாமல் முற்றிலும் தன்னிச்சையாகச் செயல்பட்டது தன் குற்றம்தான் என்று அவளும் ஒப்புக்கொண்டாள். இந்த சந்தோஷ சூழ்நிலை என் வாழ்வில் மீண்டும் நிலவ, நீங்கள் எடுத்த வீடியோதான் காரணம். ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீநாத்.”
ஸ்ரீநாத்தும் தம் கண்களைத் துடைத்துக்கொண்டார்.