
கார் கச்சேரி நடக்கப்போகும் ஹாலைநோக்கி விரைந்துகொண்டிருந்தது. இசையுலகில் முன்னணியில் இருக்கும் பாடகி உஷா சங்கர், பாடவேண்டிய கிருதிகளைத் திரும்பவும் நினைவுபடுத்திக்கொண்டாள்.
கண்களை மூடியவாறு கச்சேரிக்குமுன் அமைதியாக இருக்க விரும்பும் அவளுடைய மோனத்தை வயலின் வாசிக்கும் கிரிஜாவோ, மிருதங்க வித்வான் ரமணியோ, தம்புரா சரோஜாவோ, யாருமே கலைக்க விரும்பவில்லை.
திடீரென்று மோனம் கலைந்தது. 'பரபர'வென்று உஷா பின்சீட்டைப் பார்த்தாள், தேடினாள்.
"என்ன தேடறே உஷா?" சரோஜா மாமி.
"மாமி, அந்தத் தம்புரா ஜமக்காளப்பையை எடுத்து வைத்துக்கொண்டீர்களா?"
கையில் எடுத்துக்கொண்டு வந்த அந்தப் பையை வண்டியில் ஏறும் முன்பு நீர் குடிப்பதற்காக ஹால் ஜன்னல் விளிம்பில் வைத்தாள் மாமி. எடுத்துக்கொள்ள மறந்தது இப்போதுதான் நினைவுக்கு வந்தது.
"ரகு, வண்டியைத் திருப்பு; ஜமக்காளத்தை எடுத்துட்டு வரணும்," குரலின் தவிப்பை உணர்ந்த டிரைவர் வண்டியைத் திருப்பினான்.
கச்சேரி மேடையில் சபாக்காரர்கள் வசதியான மெத்தென்ற ஜமக்காளங்களை விரித்திருந்தார்கள்.
அரக்கப்பரக்க வந்து சரியான நேரத்திற்கு கச்சேரி ஹாலை அடைந்துவிட்டது உஷாவின் குழு. பக்கவாத்தியக்குழு பவ்யமாக ஒதுங்கி நிற்க, சரோஜாமாமி பழையதாகி விட்டாலும், பளபளப்பும் அழகும் இம்மியும் குறையாத அந்த பவானி ஜமக்காளத்தை பக்திசிரத்தையாக விரித்தாள். ஜமக்காளத்தின் விளிம்பைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு நெஞ்சம் தழுதழுக்க, அப்பா சுந்தரம் தலையில் கைவைத்து ஆசிர்வதிப்பதுபோல உணர்ந்தபடி, உடலெல்லாம் சிலிர்க்க, நான்கு மூலைகளிலும் பச்சைக்கிளிகள் கொஞ்சும் அந்த தங்கநிறப் பட்டுஜமக்காளத்தில் அமர்ந்தாள் உஷா.
சரோஜாமாமி தம்புராவை ஸ்ருதிகூட்ட, அதன் ரீங்காரத்துடன் அவள் குரல் சமனப்பட்டு இழைந்து கலந்தது. அற்புதமான சங்கீதம் பிறந்து ரசிகர்களைக் கட்டிப்போட்டது.
சுந்தரம் அப்போது கவர்ன்மெண்டு வேலையில்தான் இருந்தார். பெரிய சம்பளம் ஒன்றும் கிடையாது. நூற்றிபது ரூபாய்! சாப்பாட்டுக்குக் கஷ்டமில்லாவிடினும் மற்றபடி கஷ்டஜீவனம்தான். அவரும் அம்மா கமலமும் குழந்தைகளுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. ஸ்டோர்ரூமில் முறுக்கு, தேன்குழல், கடலை உருண்டை என ஏதாவது பட்சணங்கள் நிறைந்த தூக்குகளும், சாப்பாட்டுக்கு அப்புறம், சீசனுக்கு ஏற்றபடி மாம்பழமோ, சாத்துக்குடியோ அல்லது மலைவாழைப்பழமோ கட்டாயம் இருக்கும். பள்ளிக்குச் செல்ல சீருடைகள் இரண்டு மூன்று செட்டுகள் இருக்கும். சாயம்போய்க் கிழியாத கொஞ்சம் குட்டையான பழைய சீருடைப்பாவாடைகள்தான் வீட்டில் போட்டுக்கொள்ளும் துணிகள். ஒன்றிரண்டு செட்டு நல்ல உடைகள் உண்டு. குழந்தைகள் இதையெல்லாம் பெரிதாக ஒரு குறையாக எண்ணவேயில்லை.
ஆனால், இத்தனை கஷ்டத்திலும் மாதம் எட்டு ரூபாய் கொடுத்து ஒரு பாட்டு டீச்சரிடம் உஷாவை பாட்டுக் கற்றுக்கொள்ள வைத்திருந்தார் சுந்தரம். பாட்டின்மேல் அவ்வளவு ஆசை. உஷாவுக்கும் இனிமையான குரல். புத்திசாலியான பெண். அந்தத் தெருக்குழந்தைகள் எல்லாருக்குமே, புத்திசாலியான உஷாவை மிகவும் பிடிக்கும்.
தீபாவளிக்கு ஒருமாதம் முன்னால்தான் அப்பாவுக்குச் சென்னையில் ஒரு முக்கியமான சொந்தவேலை இருந்தது.
"கமலா, உங்க சாரதா அத்தை அகத்தில் தங்கிக்கட்டுமா?"
"அவர்களுக்கு எப்பவுமே உங்களைக் கண்டால் இளப்பம். இப்ப என்னத்திற்காம்?
"ஆனா... வேறே எங்கே போய்த் தங்குவேளாம்?"
"ஆபத்துக்கு தோஷமில்லை; நன்றாக இரண்டுபடி பாலை எடுத்து திரட்டிப்பால் கிளறிக்குடு; உன்னோட அத்திம்பேருக்குத்தான் ரொம்பப் பிடிக்குமே..."
திரட்டிப்பால் ரெடியான கையோடு ஒரு லெட்டர்; சாரதா அத்தையிடமிருந்து.
'ஈரோட்டுக்குப் பக்கத்தில்தானே பவானி. எனக்கு ஒரு நல்ல பட்டு ஜமக்காளம் வாங்கிண்டு வந்துவிடு.'
சுந்தரம் கொஞ்சம் தடுமாறினார், "கமலா, எங்கே போறது இப்போ அத்தனை பணத்துக்கு? நாப்பது அம்பது ரூவா ஆகுமே."
கமலம் சொன்னாள், "அத்தைக்கு நம்ம கஷ்டம் தெரியும்; அவாளேதானே கேட்கிறா; கையோட பணம்தந்துடுவா."
சுந்தரம் யாரிடமோ சொல்லிவைத்து இரண்டாம்நாளே நான்கைந்து பவானிப்பட்டு ஜமக்காளங்கள் வீடுதேடி வந்துவிட்டன. ஒவ்வொன்றும் கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில், அழகழகான டிசைன்களோடு. உஷாவுக்குக்கூட அவற்றைப் பார்த்து ஆசையாக இருந்தது. ஆனால், தங்கள் குடும்பத்தால் அப்போதைக்கு இதுமாதிரி ஒரு ஜமக்காளம் வாங்கமுடியாது என்று அவளுக்குத் தெரியும்.
"அத்தைப்பாட்டிக்குத்தானே! நாலு மூலையிலும் பச்சைக்கிளிகள் போட்ட இந்த ஜமக்காளத்தை எடுத்துக்கலாம்பா," என்றதும் சுந்தரமும் அதைத் தேர்ந்தெடுத்தார்.
சுளையாக நாற்பது ரூபாய்கள்! அம்மாடி! அந்தக்காலத்திற்கு அது மிகப்பெரிய தொகை!
சுந்தரத்திடம் அப்போது கொடுப்பதற்குக் கையில் பணமில்லை; "என்ன சார், அதனாலென்ன? ஊருக்குப் போயிட்டுவந்து குடுங்க," என்ற நண்பர் சரவணன் ஜமக்காள உற்பத்தியாளருக்கு மைத்துனர்!
"ஆனால் ஒண்ணு சார்! உங்க சொந்தக்காரங்க இதைக் கட்டாயம் எடுத்துப்பாங்க இல்லியா? வாங்கிட்டிங்கன்னா கடையில திருப்பி எடுத்துக்கமாட்டாங்க, " என்றார்.
"ஆசையா ஸ்பெஷலா கடிதாசி எழுதிக்கேட்டிருக்காங்கப்பா; கட்டாயம் எடுத்துப்பாங்க," சொன்னாரே தவிர சுந்தரத்துக்கு உள்ளூறக் கவலைதான்.
நாலுநாள் கழித்துப் பள்ளியிலிருந்து உஷா திரும்பி வந்தபோது அப்பாவும் சென்னையிலிருந்து திரும்பி வந்திருந்தார். அம்மாவும் அவரும் ஆழ்ந்த யோசனையுடன், கவலையாக இருந்ததுபோல இருந்தது. உஷாவுக்கு ஏதோ உள்ளுணர்வு கூறியது- இது ஜமக்காளக்கதைதான் என்று!
அம்மா,"சரி; கையைக்காலை அலம்பிண்டு சாப்பிடவாங்கோ! பின்னே யோசிக்கலாம்," என்றவுடன், அப்பா ஊருக்கு எடுத்துப்போயிருந்த தனது பையிலிருந்து அந்த அழகான பட்டுஜமக்காளத்தை எடுத்தார். உஷாவிடம் கொடுத்து உள்ளே வைத்துவிடச் சொன்னார். கேள்விக்குறியுடன் தன்னைப்பார்த்த பெண்ணை நோக்கி சோகப்புன்னகை பூத்தார். வலுவில் உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு, "புதுசா என்னம்மா பாட்டு கத்துண்டே?" என்றபடி பெண்ணைப் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு சிற்றுண்டி உண்ணலானார்.
சென்னையில் சுந்தரம் பவானி ஜமக்காளத்தை எடுத்துப் பிரித்து சாரதா அத்தைக்குக் காட்டினார். அத்திம்பேர் பெரிய உத்யோகத்தில் இருந்து ரிடையர் ஆனவர். பங்களா, கார், எல்லாம் உண்டு. ஒரேபையன் அப்போதே அமெரிக்காவில் படிக்கப்போய்த் தங்கிவிட்டான். அத்தைக்கு தங்கள் 'ஸ்டேடஸை'ப் பற்றிப் பெரிய எண்ணமுண்டு. அதனால் அதற்கு சமதையாக இல்லாத யாரையும் மட்டம் தட்டத் தயங்கவேமாட்டாள்.
"சுந்தரம், உங்க ஊரில் சர்க்கரை விலை கம்மியோ? திரட்டிப்பால் திகட்டறதே!
"அட! நன்னாத்தான் இருக்கு ஜமக்காளம்; என்ன விலை?"
"அத்தை! தறிபோடறவா கிட்டேயே சொல்லிவெச்சு நல்ல சகாயவிலைக்குக் கிடைச்சது. நாற்பதே ரூபாய்தான். வேற எங்கும் இந்த விலைக்குக் கிடைக்காது அத்தை," சுந்தரத்திற்கே தனது வியாபாரயுத்தி ஆச்சரியத்தை விளைவித்தது.
அத்திம்பேர் கேட்டார், "சுந்தரம், வேற வேலைக்கு முயற்சி பண்ணறியா? இருக்கிறது ரெண்டும் பெண்குழந்தைகள். நாளைக்கு அதுகளுக்கு நல்லது பண்ண நாலுகாசு சேர்த்துவைக்க வேண்டாமோ?" சுந்தரத்துக்குச் சமர்த்துப் போராது என்பது அத்திம்பேரின் எண்ணம்.
சாரதா அத்தை பவானி ஜமக்காளத்தை மேலும்கீழும் நான்கைந்துதடவை புரட்டிப் பார்த்துவிட்டுக் கீழே வைத்தாள். கண்களில் ஆசை மின்னியது; அதைக் காண சுந்தரம் தவறவில்லை.
"சாரதா, உனக்கு எதற்கு இத்தனை விலைகொடுத்து இந்த ஜமக்காளம்? இப்போ இது வேண்டாம் சுந்தரம்," இது அத்திம்பேரின் முடிவான வார்த்தை. மேலே அப்பீல் கிடையாது! அத்தையின் முகம் தொங்கிவிட்டது. ஒருகணம் சுந்தரத்துக்கே அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
சுந்தரம் சொன்னார், "நான் இதை அத்தைக்கு பரிசாகக் கொடுத்துவிடலாமா என்று ஒரு நிமிஷம் யோசித்தேன் கமலா; ஆனா நம்ம குடும்பம் இருக்கிற நிலையில் இந்தப் படாடோபம் எல்லாம் எதுக்கு என்று, 'திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்,' என்று சொல்லிப் பெட்டிக்குள் எடுத்துவைத்து விட்டேன்," என்றார்.
உஷாவுக்கு, 'திக்' கென்றிருந்தது. ஜமக்காளத்தைத் திருப்பிக்கொடுக்க முடியாது; அப்பா எப்படி இந்தப் பெரிய தொகையை சமாளிக்கப் போகிறார் என்று மலைப்பாக இருந்தது.
அப்பா எப்படி பவானிப் பட்டுஜமக்காளத்தின் விலையைத்தீர்த்து சமாளித்தார் என்பது பழையகதை.
அப்புறம் கொஞ்சநாட்களுக்குப் பின் வசதிகள் எல்லாம்பெருகி, சுந்தரம் ஒரு உயர்ந்த பதவியில் அமர்ந்தார்.
உஷா பாட்டுக்கற்றுக்கொள்வது அப்பாவின் விருப்பத்தின்பேரில் எப்படியோ ஒரு நல்ல குருவிடம் தொடர்ந்துகொண்டிருந்தது. அப்பா விரும்பும் எல்லாப் பாட்டுக்களையும் ராகங்களையும் கற்றுக்கொள்வதே அவளுக்கும் லட்சியமாக இருந்தது.
மாநில அளவிலான பாட்டுப்போட்டியில் அவள் ஐநூறு ரூபாய் முதல்பரிசு வாங்கியபோது அப்பாவின் கண்களில் கண்ணீர் மின்னியது.
"கமலா, குழந்தையோட பரிசுப்பணம் இது. பத்திரமா உள்ளேவை! அவளுக்குத்தான் பயன்படனும்!"
ஒருநாள் அவள் கல்லூரியிலிருந்து திரும்பி வீட்டுக்குள் நுழைந்தபோது, ஆபீஸ்வேலையாகக் காரில் திருச்சிவரை போய்விட்டு வந்திருந்த சுந்தரம் உஷாவுக்காக ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தார்.
"உஷா, கைகால் அலம்பிக்கொண்டு பூஜை உள்ளுக்கு வாயேன்," என்றாள் அம்மா.
என்ன இருக்கிறது அங்கே? என்ன விசேஷம்? ஆவலாக உள்ளே நுழைந்த உஷா எதிரே இருந்ததைப் பார்த்ததும் மயங்கிவிழாதகுறை. எதிரே ஒரு அருமையான புத்தம்புது தம்புரா கம்பீரமாக அமர்ந்திருந்தது.
"இது ஏது?" என ஈனஸ்வரத்தில் கேட்டவளுக்கு, "உனக்காகத்தானம்மா. திருச்சியில், உன் பரிசுப்பணத்தில் வாங்கினேன் அம்மா. கூடக் கொஞ்சம் போட்டேன். இது ரொம்ப உயர்ந்த வெரைட்டி தம்புரா. உம்ம பொண்ணு நல்லாப்பாடட்டும்; அவளுக்கு சகலசௌபாக்யங்களும் கிடைக்கட்டும் என்று ஆசிர்வாதம் பண்ணிக் கொடுத்தாரம்மா அந்தப் பெரியமனுஷர்; வா, வந்து உட்கார்," என்றார் அப்பா.
"கமலா," என்றதுமே, அம்மா உள்ளேபோய் இத்தனை நாட்களாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த பவானிப்பட்டு ஜமக்காளத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்.
தலையில் தைத்துக்கொள்ளும் தாழம்பூவின் நடுவில் வாசனையாக இருக்கும் மகரந்தப்பொடியை ஜமக்காளத்தின் இடையே போட்டு வைத்திருந்தது. தாழம்பூ மணம் பூஜையறை எங்கும் பரவியது. உஷாவின் உடலெல்லாம் சிலிர்த்தது; தங்கநிறப் பட்டு ஜமக்காளத்தின் நாலு மூலைகளிலும் பச்சைக்கிளிகள் கொஞ்சியவண்ணம் அமர்ந்திருந்தன. அப்பா சொற்படி, அந்த ஜமக்காளத்தின் நடுவில் அமர்ந்துகொண்டாள் உஷா.
அப்பா மல்லிகைச்சரம் சுற்றிச் சந்தனம் குங்குமம் இட்டு வைத்திருந்த தம்புராவுக்குக் கற்பூர தீபாராதனை காட்டினார். பரவசமாக அதனை எடுத்து உஷாவின் கையில் கொடுத்தார். தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு மெல்ல அதன் தந்திகளை மீட்டி ஸ்ருதிகூட்டினாள் உஷா.
"மீனாக்ஷி மேமுதம்' கிருதியை அப்பாவுக்காகப் பாடேன்," என்றார் சுந்தரம்.
அன்பு என்ற ராகம் அபரிமிதமாக ஆலாபனை செய்யப்பட, பட்டுஜமக்காளம் என்ற அற்புதத் தேரிலேற்றி வைக்கப்பட்டு, இசை தேவதையின் வடிவமாய்த் திகழ்ந்த தம்புராவைத் தன் விரல்களால் மீட்டினாள் உஷா. அந்தக் குடும்பமே சொல்லவொண்ணாத ஆனந்தலயிப்பில் திளைத்தது.
தம்புரா ஸ்ருதியில் அமிழ்ந்து சில நிமிடங்கள் எல்லார் சிந்தையும் ஒருமைப்பட்டது.
வீணாகான தசகமகக்ரியையான மீனாட்சி மகாராணிக்குரிய கம்பீரத்துடன் உஷாவின் நாபியிலிருந்து புறப்பட்டு, ஹ்ருதயத்தில் அமர்ந்து, கண்டம் எனும் தொண்டையில் வலம் வந்து, பூர்விகல்யாணியாக புறப்பட்டு உலா வரத் தொடங்கினாள்.
அம்மாவின் கைவிரல் தன்னையுமறியாமல், ஒரு பச்சைக்கிளியை மெல்ல வருடியது. அவள் கண்களில் ஆனந்தபாஷ்பம்! என்றென்றும் அந்தத் தங்கநிறப்பட்டு ஜமக்காளம் தம்புராவிற்கு இணைபிரியாத துணையாகிவிட்டது.