சிறுகதை - என் மஹாராணி!

short story
short story

-மரிய சாரா

வளின் கருவிழிகளில் அவளது குழந்தை மனமும் சேர்ந்தே தெரிகிறது. அதிதி.... பெயரைப்போலவே அதீத அழகுதான். நாள் முழுக்க நின்று ரசித்துக்கொண்டே இருக்கலாம். எப்போதும் புன்னகை பூத்த முகம். வாடா மலரை நேரில் பார்ப்பதுபோலன்ற உணர்வு ஆதிக்கு ஏற்படுவது ஆச்சரியமில்லை.

ஆதி, அதிதி வேலை செய்யும் அதே ஆபிஸில் வேலை செய்யும் 31 வயது திருமணம் ஆகாத கன்னிப்பையன். "ஏண்டா இப்டி இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க" என யாரவது அவனிடம் கேட்டால், "இல்லடா, எனக்கு யார பாத்தும் எனக்கு இவதான், இவதான் என்னோட பாதி, இவதான் என்ன ஆட்சி செய்யப்போற மஹாராணி ன்னு இதுவரைக்கும் தோணலடா" என்று பதில் சொல்லுவான். அவன் வீட்டிலும் சரி, உறவுகளிலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி, நண்பர்களிடத்தில் சரி, எல்லோருக்கும் இதே பதில்தான்.

அனால் இன்று... அதிதி எனும் அவளை பார்த்தபோது அவனுக்குள் ஏதோ ஒரு உணர்வு. இதயம் வேகமாக துடிப்பதை உணர்கிறான். விட்டால் அவனின் இதயம் வெளியில் வந்து தரையில் குத்தாட்டம் போடும் போல. ஐயோ ஏன் என் மனம் இன்று இப்படி கனக்கிறது என்று எண்ணி கலங்குகிறான். யார் இவள்? என்ன மாயம் செயகிறாள் என்னை?ஏன் எனக்குள் இவ்வளவு இன்ப வலி தருகிறாள் என்றெல்லாம் குழம்பி தவிக்கிறான்.

ஆதியின் தலை எழுத்தில் இடி விழுந்தாற்போல் அவளின் கேபின் ஆதியின் எதிரில்..... ஐயோ ஆண்டவா ஏண்டா என்ன இப்டி சாவடிக்கிற? இவள பாத்ததுக்கே செத்து பொழச்சேனே, இப்போ ஒவ்வொரு நிமிஷமும் சாகபோறேனே? எதிர்க்கவே அவளை செட்டில் பண்ணிட்டியே உனக்கு நியாயமா? என ஆண்டவனை திட்டி தீர்த்துவிட்டு பெருமூச்சை விடுகிறான். நொந்துகொண்டே நிமிர்ந்து பார்க்கிறான்.

நிமிர்ந்தவன், தோள்பட்டை வரை உள்ள அவளின் அடர்ந்த கூந்தல், அவளது அறையில் வீசும் விசிறியின் காற்றில் அலைபாய்வதை பார்க்கிறான். அந்த கூந்தலின் அசைவினில் இவனின் மனமும் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருக்க, போதையில் திளைத்திருந்த அவனை தட்டி கூப்பிட்டான் விக்னேஷ்.

இதையும் படியுங்கள்:
கொஞ்சம் உங்கள் பாதங்களையும் கவனியுங்களேன்!
short story

"எவ்ளோ நேரமா கூப்பிடறதுடா உன்ன? அப்டி என்னதான் யோசிக்கிற?" என கேட்டவனிடம்,

"கொஞ்ச நேரம் விட்டிருந்த செத்துப்போய் இருப்பேண்டா... நல்லவேளை நீ காப்பாத்திட்ட தேங்க்ஸ்டா" என்றான் ஆதி....

"என்னடா உளர்ர?" என்றவனிடம் "வாடா கான்டீன் போயிட்டு வரலாம். மூச்சு முட்டுது இங்க இருந்தா" என்று அவனை கான்டீன் அழைத்துச்சென்றான் ஆதி. அங்கு அமைதியாய் சூடாக காபி பருகினர் இருவரும்.

"என்னடா? ஏதோமாரி இருக்க? என்ன ஆச்சி?" என கேட்டான் விக்னேஷ்.

"ஒண்ணுமில்லடா... அந்த புதுசா ஜோயின் பண்ண பொண்ணு இருக்காங்க ல?" என கேட்டான் ஆதி.

"ஆமா.... அவங்களுக்கு என்ன?" என கேட்டான் விக்னேஷ்.

"என்னன்னே தெரியல டா, அவங்கள பாத்தா செக்ண்ட்ல இருந்து எனக்கு ஹார்ட் அட்டாக் வர்றமாதிரி ஒரு ஃபீலிங் டா. ஒண்ணுமே புரியல. மூச்சு முட்டுது." என்று சொன்ன ஆதியின் கையை பிடித்து, "congrats டா ஆதி, நீ காதலனா ப்ரோமோஷன் ஆகிட்ட" என்றான் விக்னேஷ்.

"என்னடா உளர்ர?" என்றான் ஆதி .

"ஆமாண்டா இனிமே பாரு எல்லாமே மாறும் உன் உலகமே மாறிடும்" என்றான் விக்னேஷ். அன்று போலவே சில மாதங்கள் கடந்தன. வேலை நேரங்களில் அவளை பார்ப்பதைத் தவிர்த்தான் ஆதி. ஓய்வான நேரத்தில் அவளை மட்டுமே பார்த்து, பார்த்து அவளால் கிடைக்கும் அந்த இனிமையான சித்திரவதையை மனதார அனுபவித்தான்.

அந்த நாள் அவள் பிறந்தநாளாம். அலுவலகத்தில் கேக் ரெடி செய்து பார்ட்டியும் ஏற்பாடு ஆகி இருந்தது. அவளை காணவில்லை என தேடினான் ஆதி. அவள் வந்தாள். பேபி பிங்க் நிறத்தில் ஒற்றை ப்ளீட் விட்டு கட்டியிருந்த சேலையில் தேவதை போல் மின்னினாள். எப்போதும் போல அந்த மந்திரப்புன்னகை அவள் முகத்தில்.

அப்போதுதான் சட்டென கவனித்தான்... அவளின் மென்மையான விரல்களை ஒரு 3 வயது உள்ள பிஞ்சு விரல்கள் இறுக்கமாய் பற்றியிருப்பதை. சற்று தடுமாறியவன் சுதாரித்துக்கொண்டு, அருகில் இருந்த ஒரு பெண்ணிடம் கேட்டான், "அதிதி கூட இருக்குற குழந்தை யாரு?".

"அது அவங்க பையன் ரிஷி" என்றாள் அந்தப் பெண். ஒரு நிமிடம் மௌனம் காத்தவன்,

"அவங்க husband வரலையா?" என மீண்டும் அவளிடம் கேட்டான்.

"இல்ல. அவங்களுக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சாம். ரொம்ப கஷ்டபட்டாங்களாம். அதனால, divorce வாங்கிட்டு அப்டியே transfer வாங்கிட்டு இங்க வந்துட்டாங்களாம்." என்று அவள் சொன்னதும், போன உயிர் மீண்டும் உடலுக்குள் இறங்கியதை உணர்ந்தான் ஆதி.

எது எப்டியோ, இவதான் எனக்கு, இவதான் என்னோட பாதி, இவதான் என்ன ஆட்சி செய்யப்போற மஹாராணி ன்னு அந்த நிமிஷம் முடிவு பண்ணிட்டு அவளை காதலிப்பதை தொடர்ந்தான்…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com