அழைப்பு மணியோசை கேட்டு கதவைத் திறந்த மங்கை, "வாங்க...வாங்க..."என்று அழைத்து "உட்காருங்க..." என்றாள்.
வந்தவள், "நான்..அபிராமி! பக்கத்து வீட்டிற்குப் புதிதாய்க் குடிவந்தவள்".
"நானும் உங்களை நேற்று பார்த்தேன்... என் பேரு மங்கை. நான் இல்லத்தரசி. கணவர் துபாயில் பணிபுரிகிறார். ஒரே பையன். அதியன். பத்தாவது படிக்கிறான். சரி... சரி....நான் என் கதையைச் சொல்லிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏதாவது வேணுமா?"
"இல்லை...இல்லை... சும்மாதான் வந்தேன். பக்கத்து வீட்டில் நீங்க இருப்பதைப் பார்த்தேன். நட்பிற்காக வந்தேன்… நானொரு ஒரு மென்பொறியாளர். வீட்டில் இருந்தபடியே வேலை செய்வேன். அப்பா, அம்மா, உறவுகளோ இல்லை. திருமணத்தில் விருப்பம் இல்லை. அனாதை விடுதியிலிருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம்னு இருக்கேன். எனக்கும் துணை. குழந்தைக்கும் அம்மா கிடைப்பாள்..."
"நல்லதுங்க..." என்ற மங்கை, "எலுமிச்சை பழச்சாறு போட இருந்தேன்... நீங்க வரவே அப்படியே வச்சிட்டு வந்துட்டேன். இருங்க...
பழத்தைப் பிழிஞ்சி கொண்டாரேன். இரண்டு பேரும் சேர்ந்து குடிக்கலாம். ஆங்...உங்களுக்குச் சாறில் உப்பா... சர்க்கரையா? அல்லது ரெண்டுமேவா?
"இரண்டும் கலந்தே தாங்க...எனக்கும் பிடிக்கும்."
பேசிக்கொண்டிருக்கும்போதே டியூசன் முடிஞ்சி உள்ளே நுழைந்த அதியன் ஒன்றும் பேசாமல் அறைக்குள் நுழைந்து தாளிட்டான்.
மங்கை... "நீங்க தப்பா நினைக்காதீங்க... தனியா வளர்ந்ததால் யாருடனும் பேச மாட்டான். அவன் அப்பாவும் இங்கே இல்லை. எப்பவும் உம்முனு புத்தகமும் கையுமா இருப்பான். என்கிட்டே கூட அவ்வளவாப் பேசமாட்டான். அதுவே எனக்குப் பெரிய மனக்குறைங்க..."
"இப்ப நிறைய பசங்க அப்படித்தான். செல்பேசி யோடத்தான் இருக்காங்க. யாரோடும் பேசறதே இல்லை. ஆனா இது தப்புங்க… உரையாடல் ஒரு சிந்தனைப் பரிமாற்றங்க! அப்புறம் அது மனஅழுத்தத்தைக் கொண்டு வந்துவிடுங்க....நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...
நான் உங்களை என் அக்காவாத்தான் பார்க்கறேன்...பேச…
பேசத்தான் நல்லது, கெட்டது, நியாயம், அநியாயம் தெரியும். மனமும் பக்குவப்படும்."
பழச்சாறு குடிக்க மங்கை அழைத்தவுடன் வெளியே வந்த அதியனிடம், தானாகப் பேச்சுக் கொடுத்தாள் அபிராமி. அவள் உளவியலும் படித்திருந்ததால் அவனைச் சற்றே அறிந்தாள். அவனின் சின்ன அசைவையும் பேசும் விதத்தையும் பாராட்டினாள். அவன் முகத்தில் ஒளிபரவலைக் கண்டாள், மங்கை.
அபிராமி, "ஆதவன்... நான் பக்கத்து வீட்டிற்கு நேற்றுதான் குடி புகுந்தேன். உனக்கு படிப்பு தொடர்பா... இல்லை… வேறு ஐயமோ இருந்தால் கேள். நான் சொல்லித் தர்றேன்! சரியா..."
"சரிக்கா..." என்று சிரித்தமுகத்துடன் அதியன் பேச...
நெகிழ்ந்த மங்கை, அபிராமியைத் தழுவி, முத்தமிட்டு கண்களால் நன்றி சொன்னாள். தன் மனக்குறை நீங்கியதாய் உணர்ந்தாள் மங்கை.