குட்டி கதை - "ஹலோ...மேடம்! நீங்க சொன்னீங்கன்னுதான்...!"

Short Story - Hello Madam!
Short Story - Hello Madam!

- ரெ.ஆத்மநாதன்,  காட்டிகன், சுவிட்சர்லாந்து 

‘ஹலோ! மேடம்! நீங்க சொன்னீங்கன்னுதான் ஏர்போர்ட்டுக்குப் பக்கத்ல பிளாட் வாங்கினோம்! ஆமாம் மேடம்! நீங்க அங்க எத்தனை பிளாட் வாங்கினீங்க?எல்லாத்லயும் தண்ணி இருக்கா? நாங்க சீக்கிரமாவே வீடு கட்டலாம்னு இருக்கோம்! நீங்க அங்க வீடு ஏதாவது கட்டிட்டீங்களா?’   

அந்தப் பிரபல நடிகைக்கு தலையும் புரியவில்லை… வாலும் புரியவில்லை… ’எந்த பிளாட்? எங்க வாங்கினோம்?’ என்று மூளையைக் கசக்க, அப்புறந்தான் ஞாபகத்திற்கு வந்தது… ஏதோ பிளாட் விளம்பரப் படத்தில் நடித்தது! அங்க பிளாட் வாங்கிய ஒருத்தர்தான் இப்படிக் கேள்வி கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டார்! 

‘என்ன மேடம்? அமைதியாயிட்டீங்க? நீங்கதானே அவ்வளவு புகழ்ந்து அந்த பிளாட்டைப் பற்றி அன்னிக்கி அவ்வளவு பேசினீங்க! இப்ப ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க?’ 

என்ன பதில் சொல்வதென்று அந்த நடிகைக்குத் தெரியவில்லை. விளம்பரத்திற்காக சொன்னதை இவர் இப்படிப் பிடித்துக் கொண்டாரேயென்று எண்ணியபடியே மொபலைக் கட் பண்ணினார்!

அடுத்த சில நொடிகளில் மீண்டும் சப்தமிட்டது மொபைல்!

’வணக்கம் மேடம்! நீங்க சொன்னீங்கன்னு அந்த குடிநீர் ஆர்.ஓ.,வை வாங்கினேன்! ஆனா அது அவ்வளவு நல்லா இல்லயே… உங்க வீட்ல அந்த ஆர்.ஓ.,வைத்தான் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ஒண்ணும் பிராப்ளம் வர்றதில்லையா மேடம்?’     

ஆர்.ஓ.,விளம்பரத்தில் நடித்தது மனதில் ஓட,’ என்ன ஆனது நமக்கு இன்னிக்கி? காலை ஆறு மணிக்கே இப்படி ஆரம்பித்து விட்டார்கள்! படப்பிடிப்புக்கு வேறு சீக்கிரம் கிளம்பியாக வேண்டும்!’ என்று எண்ணிக் கொண்டிருந்த போதே மொபைல் சிணுங்கிற்று.

இதையும் படியுங்கள்:
பிரச்சனைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல!
Short Story - Hello Madam!

காதருகில் கொண்டு வந்ததும், ’மேடம்! வணக்கம்! நீங்க என்னோட அபிமான நடிகை! நீங்க சொன்னதுக்காகத்தான் என் மனைவி சொன்ன பிராண்டை ஒதுக்கிட்டு, நீங்க சொன்ன ஏ.சி.,யை வாங்கினேன். ஆனா பாருங்க… அவ்வளவு காசு கொடுத்து வாங்கியும் திருப்தி இல்ல மேடம். ஏ.சி.,காரன் எலக்ட்ரீஷியனையும், எலக்ட்ரீஷியன் ஏ.சி.,காரனையும் குறை சொல்லி, எப்படியோ எங்க தூக்கத்தைக் கெடுத்துட்டாங்க! ஆமாம் மேடம்! உங்க வீட்ல எத்தனை ஏ.சி.,யூனிட் இருக்கு மேடம்? எல்லாம் நல்லா ஒர்க் பண்ணுதா?’

அந்த நடிகைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அறையின் ஏ.சி.,யைப் பார்த்தாள். அது சப்தமில்லாமல் நிதானமாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அது அவள் விளம்பரப் படுத்திய பிராண்ட் கிடையாது!     

‘மேடம்… மேடம்…’ என்று குரலெழுப்பியபடி நடிகையின் மானேஜர் அவசரமாக உள்ளே நுழைந்தார்.  ‘என்ன இது மேடம்! நீங்க இன்னுமா ரெடியாகல? அந்த விளம்பரப் படப் பிடிப்புக்காக போட்டோகிராபர் ரொம்ப நேரமா வெயிட் பண்றாரு! அதை முடிச்சிட்டு நாம ஷூட்டிங் வேற போக வேண்டியிருக்கு!'

அந்த நடிகைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com