சிறுகதை - இதயத்தை வென்றவன்!

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்

ந்ததிலிருந்தே தன் பேரனின் முகம் சுரத்தில்லாமல் இருப்பதைக் கவனித்தார் ராஜகோபால். வழக்கத்திற்கு மாறான அவன் அமைதியே, விஷயம் நிறைய இருக்கிறது என்று உணர்த்தியது. தோப்புக்கு அழைத்துச் சென்றார்.

தென்னந்தோப்பில் குளிர்ந்த காற்றை அனுபவித்தவாறே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து, பண்ணையாள் வேலன் வெட்டித் தந்த செவ்விளநீரைக் குடித்து முடித்ததும்‘’வாவ் வெரி டேஸ்டி’’ என்றான்.

குடித்து முடிக்கும் வரை அமைதி காத்த பின் ‘’இப்ப சொல்லு கண்ணா.உன்னோட பிரச்சினை என்ன?’’ என்றவரை வியப்புடன் பார்த்தான்.

‘’எப்படித் தாத்தா,சொல்லாமலே புரியுது உங்களுக்கு?’’

‘’வாய்விட்டுச் சொன்னால் தானா? உன் முகமே சொல்லுதே. அதுவுமில்லாம,  நீ மட்டும் தனியா டிரைவரோட கிளம்பி வந்திருக்க...?’’

‘’ஆமா தாத்தா... உங்க கிட்ட மனசு விட்டு  பேசணும். என் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கணும்னு தான் வந்தேன். முந்தாநாள் என்னோட அரையாண்டுத் தேர்வு  ரிசல்ட் வந்தது. ஆனா, நான் ரொம்ப கம்மியா ஸ்கோர் பண்ணுனேன்’’ என்றவனின் குரல் கம்மியது.

‘’உன் அப்பா உன்னைத் திட்டினானா?’’ பரிவுடன் அவன் தோளில் கை வைத்து கேட்டதும் அன்று நடந்த சம்பவங்கள் காட்சியாய் அவன் கண்முன் விரிந்தன.

‘’ஏண்டா லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஊரிலேயே பெரிய ஸ்கூல்ல படிக்க வைக்கிறேன். ஸ்பெஷலா கோச்சிங் கிளாஸ்  வேற போற. ஆனா நீ கேவலமா மார்க் வாங்கியிருக்க. இந்த ரேஞ்சுல போனா நீயெல்லாம் எப்படி மெடிக்கல் சீட் வாங்குவ..?’’ கத்தினார் ஷங்கர்.

‘’இப்ப எதுக்கு அவனைத் திட்டறீங்க.... ?’’ என்றாள் ரம்யா.

‘’என்ன ரம்யா நீ ? அவன் மார்க்கப் பார்த்துமா இப்படிக் கேட்கறே.? இந்த மாதிரிப் படிச்சா பொதுத் தேர்வுலயும், நுழைவுத்தேர்வுலயும் எப்படி ஸ்கோர் பண்ண முடியும் சொல்லு..? அப்புறம் கவர்ன்மென்ட் மெடிக்கல் காலேஜ்ல எப்படி சீட் வாங்கறது?அந்தக் காம்பவுண்டுக்குள்ள கூட நுழைய முடியாது. சை!’’

இதையும் படியுங்கள்:
ஃபேஷன் உலகை கலக்கிக் கொண்டிருக்கும் 'ஜம்ப்சூட்' ஆடைகள் (jumpsuit dress) !
ஓவியம்; சேகர்

‘’ஏன் கவர்மென்ட் மெடிக்கல் காலேஜை விட்டா வேற காலேஜே இல்லையா உலகத்துல..?’’ என்றாள் ரம்யா.

‘’புரிஞ்சு தான் பேசறியா நீ...? அங்க தானே பீஸ் கம்மி..? தனியார்ல ஏகத்துக்கும் கொட்டிக் குடுக்கணுமே.?பேமெண்ட் சீட்டுங்கற பேருல சொத்தையே எழுதித் தரணுமே.?”

‘’ என்ன டியர், ஊர்ல, உலகத்தில யாருமே காசு கொடுத்து சீட் வாங்கறதில்லையா? போன வருஷம் உங்க பிரண்ட் ராகேஷ் தன் பையனுக்கு அம்பத்தஞ்சு லட்சம் கொடுத்து மங்களூரில சீட்  வாங்கலை..?’’

தலையசைத்து ஆமோதித்த ஷங்கர் ‘’ஆமா.. என்னோட சீனியர் மகேஸ்வரன் கூட தன் பொண்ணுக்கு அறுபது லட்சம் கொடுத்துசீட்டு வாங்கினார். ஆனா இவன் வாங்கியிருக்கிறது ரொம்பக் கம்மியாச்சே... எப்படியும் எழுபது எண்பது தர வேண்டியது வரும் ’’

‘’அதனால என்னங்க... ? நமக்கு இருக்கறது ஒரே பையன். யாருக்காக சம்பாதிக்கறோம்.? பல்க்கா காசு கைய விட்டுப் போகுதேன்னு கவலைப்படறீங்களா?அவன் படிச்சு முடிச்சிட்டு வந்தப்புறம் ஏகத்துக்கும் காசை அள்ளிக் கொட்டப் போறான். இப்ப மட்டும் என்ன.? நாம ரெண்டு பேரும் சேர்ந்து எவ்வளவு சம்பாதிக்கறோம்னு கொஞ்சம் கணக்கு போட்டுப் பாருங்க. உங்க கஞ்சத்தனத்த இதுல காட்ட வேணாம். நம்ம பையன் டாக்டர் ஆகாமப் போனா நமக்குத்தான அசிங்கம்....?’’ 

அம்மா பேசப் பேச அப்பாவின் மனம் மாறியது. என்ன விலை கொடுத்தாவது மகனை மருத்துவர் ஆக்கியே தீருவது என்று தீர்மானித்தனர்.   இருவரையும் வெறுப்புடன் பார்த்தான் சஞ்சய். அப்பா இருதய நோய் நிபுணர். அம்மா மகப்பேறு மருத்துவர். மூன்று  வருடங்களுக்குமுன்பு லோன் போட்டு ஊருக்குள் பெரிய ஆஸ்பத்திரி கட்டி, அதை ஆளும் இவர்கள் அசல் வியாபாரிகள் போல் அல்லவா பேசுகின்றனர்!

கேட்டுக்கொண்டிருந்த ராஜகோபாலுக்கு மனம் கசந்தது. தன் மகன் ஷங்கர் ப்ளஸ் டூ வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த அன்று அவர் எவ்வளவு ஆனந்தப்பட்டார்? ஏன், ஷங்கரே ஊடகங்களுக்களித்த பேட்டிகளில், ‘’நான் மருத்துவராகி ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பேன். இது என் லட்சியம்’’ என்றதும், தான் நெகிழ்ந்ததும் நினைவில் வந்து போனது. நான் அவனை சரியாகத் தானே வளர்த்தேன்? எப்போது பணத்தின் பின் ஓடக் கற்றுக் கொண்டான்?’’

‘’ரிடையர் ஆனப்புறம் கூட, கவர்மென்ட் ஸ்கூல் பசங்களுக்கு இலவசமா கணக்கு ட்யூஷன் சொல்லித் தர்றீங்க. ஐ லைக் யுவர் ஆட்டிட்யூட்’’ என்றான் அவர் கைகளைக் குலுக்கி.

‘’என்ன தாத்தாவும் பேரனும் பேசி முடிச்சாச்சா...?என்றபடி அங்கே வந்தார் பாட்டி கீதா, கையில் ஒரு மஞ்சள் பையுடன்.

‘’கண்ணு சமையல் ஆச்சு. எல்லாமே உனக்குப் பிடிச்ச ஐட்டந்தான். இன்னும் சேமியா பாயசமும், பக்கோடாவும் தான் பாக்கி. அதுக்கு சில சாமானம் வாங்கணும்.’’

இதையும் படியுங்கள்:
உடலின் 5 முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் ஒரே காய்கறி!
ஓவியம்; சேகர்

‘’நானும், தாத்தாவும் பைக்கில போய் வாங்கீட்டு வர்றோம் பாட்டி” என்றான் சஞ்சய்.

ராமன் அண்ணாச்சி கடையில் பொருட்கள் வாங்கியதும், எதிர்முனையில் தள்ளுவண்டியில் மாதுளம்பழங்கள் விற்றுக்கொண்டிருந்த வள்ளிப் பாட்டியிடம் வந்து ‘’ ரெண்டு கிலோ போடுங்கம்மா’’ என்றார்.

‘’கிலோ நூத்தி இருபது. நீங்க வாடிக்கையா வாங்குறவுக. பத்து ரூபா குறைச்சே குடுங்க சாமி’’ என பாட்டி சொன்னதைப் பொருட்படுத்தாமல் இருநூற்று நாற்பது ரூபாயே தந்தார்.  

வீடு வந்து சேர்ந்ததும், ‘’அந்தப் பாட்டிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் தாத்தா?’’ என்று கேட்டான் சஞ்சய்.

‘’என்ன பெரிசா கிடைக்கப் போகுது? பாவம், வட்டிக்கு கடன் வாங்கி பழம் வாங்கி, தள்ளுவண்டிக்கு வாடகை கொடுத்து, போலீஸ்காரங்களுக்கு மாமூல்  வேற கொடுக்கணும். மழை, கிழை வந்துட்டா இன்னும் கஷ்டம். பழங்கள் கெட்டுப் போகும். கைக்கும் வாய்க்கும் அல்லாடற ஜீவன்கள்ப்பா’’

‘’அந்த ஏழைப் பாட்டிக்கு இருக்கிற பெருந்தன்மை கூட எங்க அப்பா அம்மாவுக்கு இல்லையே தாத்தா? சில நூறு ரூபாய்களை கூட பைசா பாக்கியில்லாம கட்டுனாத் தான் நோயாளியை டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க. நானே பல முறை எங்க ஹாஸ்பிட்டலில் பார்த்து மனசு நொந்திருக்கேன். கேட்டா, போட்டிகள் நிறைஞ்ச இந்த உலகத்தில இதெல்லாம் சகஜம்னு சொல்றாங்க. ஆனா நீங்க வயசான காலத்தில கூட பிரதிபலன் எதிர்பார்க்காம, இலவசமா ட்யூஷன் சொல்லித்தர்றீங்க. உங்க மனசு ஏன் எங்கப்பாவுக்கு இல்லை தாத்தா?’’ முகம் சிவக்கக் கேட்டவனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தார்

‘’ உங்க அப்பா பணத்தை ஜெயிக்கிறான். நான் இதயங்களை ஜெயிக்க முயற்சி பண்றேன்’’

‘’இன்னும் எக்ஸாமுக்கு மூணு மாசம் இருக்கு. நான் ஹார்ட் ஒர்க் பண்ணி படிப்பேன். நிச்சயம் நல்ல மார்க் வாங்கி மெரிட்லையே சீட்டு வாங்கிருவேன். மருத்துவம்ங்கிறது வியாபாரம் இல்லை. அது ஒரு புனிதமான சேவை. டாக்டர் ஆனதுக்கப்புறம் பணக்காரங்க கிட்ட பணம் வாங்கிப்பேன். ஏழைகளுக்கு முழுவதும் இலவசமா வைத்தியம் பார்ப்பேன்’’ என்றான் கண்கள் மின்ன.

‘நிச்சயம் நீ ஒரு நல்ல மருத்துவரா வருவே. பல இதயங்களை ஜெயிக்கப்போறான் என் பேரன்’’ என்று அவனை அன்புடன் அணைத்துக்கொண்டார் அந்தப் பெரியவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com