சிறுகதை; ஆட்டோகிராஃப்

Short Story in Tamil
ஓவியம்: சேகர்
Published on

சிறுகதை: டால்மியாபுரம் கணேசன்

தேசியக் கல்லூரியின் பிரதானசாலை நெடுகிலும் அலங்கார வளைவுகள், மின்விளக்கு ஜோடனைகள். கலைத்தாயின் தவப்புதல்வனே வருக!', 'வருங்கால முதல்வரே வருக!', 'எங்கள் உயிரே வருக!' பலத்த வரவேற்புடன் தமிழ்த் திரையுலக நடிகர் அரவிந்தனின் ஆளுயர கட்-அவுட்கள் சாலையின் இரு மருங்கிலும் ஒளி வீசிப் பிரகாசித்தன.

ரசிகர் மன்றங்கள் நடிகர் அரவிந்தனுக்கு 'பத்மஸ்ரீ' பட்டம் கிடைத்ததற்குப் பாராட்டு விழா எடுத்தன. கல்லூரி மைதானமும் வளாகமும் நிரம்பி வழிந்தது. இரவு ஏழு மணிக்கு அரவிந்தன் மேடையேறியதும் அரங்கமே கைதட்டலாலும், விசிலாலும் அதிர்ந்தது. அரவிந்தன் பேசத்துவங்கினார்.

"உங்கள் முன் நிற்கும் அரவிந்தனை ஒரு நடிகனாக அல்ல, உங்களில் ஒருவனாகக் கருத வேண்டும். இந்தக் கல்லூரிக்குச் சம்பந்தமில்லாத ரசிகர் மன்ற விழாவினை, இங்கு நடத்த அனுமதித்த கல்லூரி நிர்வாகத்துக்கு என் உளமார்ந்த நன்றி. இதுபோன்ற விழாக்களை நடத்தி, காலத்தையும், பணத்தையும் என் ரசிகர்கள் வீணடிப்பதை நான் சற்றும் விரும்பவில்லை. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!"

அரவிந்தனின் இந்தப் பேச்சைக் கேட்டதும் ரசிகர்கள், கூச்சல் எழுப்பத் துவங்கினர். முன்வரிசையில் இருந்த ஒரு தீவிர ரசிகன், "பின்னே ஏன் தலைவா, விழாவிலே கலந்துக்க சம்மதிச்சே? எத்தனை நாள், எத்தனை பேரோட உழைப்பு தெரியுமா? எவ்வளவு பணம் செலவழிச்சுருக்கோம் தெரியுமா? இப்படி ஒரேயடியா எங்களைக் கவுத்துட்டியே தலைவா?" தேம்பி அழத் துவங்கி விட்டான் அந்த இளைஞன்.

"தம்பி, மேடைக்கு வாப்பா!' கனிவுடன் அழைத்தார் அரவிந்தன்.

ரசிகனை அன்புடன் அணைத்துக்கொண்டே, "இந்தப் பாராட்டும் பரிசளிப்பும் தேவையில்லாத விஷயம் ராஜா! இதுக்கு செலவு பண்ணிய காசை, ஏதாவது நல்ல காரியத்துக்கு உபயோகப்படுத்தி இருக்கலாம் தம்பி. அப்புறம் ஏன் இந்த விழாவுக்கு வந்தேனு கேட்டே இல்லையா? சொல்றேன்.

''நான் இந்தக் கல்லூரியின் பழைய மாணவர்களிலே ஒருவன்" இதைக் கேட்டதும், ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

கூச்சல் அடங்கியதும், ''பி.காம் இரண்டாமாண்டு வரைக்கும்தான் படிச்சேன். அதுக்கு மேலே தொடர வழியில்லே! எங்கப்பா பக்கத்திலே உள்ள ஒரு கிராமத்திலே, கணக்குப்பிள்ளையா வேலை பார்த்தார். அவர் திடீரென காலமானதும் புத்தகம், நோட்டு வாங்கக்கூட காசில்லே. அப்பல்லாம் கணக்குப்பிள்ளைங்க எழுதறதுக்கு மங்கலா இருக்குற சாணித் தாள்லேதான் அரசாங்கம் பிரிண்ட் பண்ணிக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
உலக நாடுகளில் அரசியலில் பெண்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறதா?
Short Story in Tamil

வேற வசதியில்லாம, அந்தப் பேப்பரிலேதான் நோட்டு தைச்சு உபயோகப்படுத்துவேன். இனிமே படிக்க முடியாதுங்கற நெலைமை வந்துச்சு. ரெண்டாம் வருஷம் கடைசி வகுப்பிலே மாணவர்கள் எல்லாம் வாத்தியார்கிட்டே ஆட்டோகிராஃப் வாங்கினாங்க. எல்லார்கிட்டேயும் ரொம்ப கவர்ச்சியா அழகான ஆட்டோகிராஃப் நோட் இருந்துச்சு. ஆனா எங்கிட்டே இருந்ததோ சாணித்தாள் நோட்டுத்தான்.

"எங்க ஆசிரியர் பெரியசாமி, ஒரு நடிகர்போல ரொம்ப கவர்ச்சியாயிருப்பார். எப்போதும் எடுப்பா ட்ரெஸ் பண்ணுவார். அற்புதமா பாடம் நடத்துவார். ஆனா, முன்கோபி.

என் நோட்டைப் பார்த்ததும், "என்னடாது? என் கையெழுத்துக்கு மதிப்பில்லையா? ஒரு குப்பைக் காகிதத்தை நீட்றே?'னு கோவமா, என்னோட நோட்டைப் பறிச்சு ஜன்னல் வழியா வெளிலே வீசிட்டார். விக்கிச்சுப் போயிட்டேன் நான். அழுதபடியே, "சார் உங்க நினைவு என்னைக்கும் எங்கிட்டே இருக்கணும்னுதான் கையெழுத்தைக் கேட்டேன். அது ஒரு கோடி பெறும் சார். மதிப்பு, உங்க கையெழுத்துக்கும், நான் உங்க மேலே வெச்சுருக்கற மரியாதைக்கும்தான் சார். இந்த நோட்டுக்கு இல்லே!" "வகுப்பே அமைதியில் உறைஞ்சு போச்சு. கொஞ்ச நேரம் என்னையே வெறிச்சுப் பாத்துகிட்டிருந்தவர், தானே வெளியே போய், என் நோட்டை எடுத்துவந்து, கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

"மன்னிச்சுருடா தம்பி, கோபத்திலே உன்னைப் புண்படுத்திட்டேன். வருங்காலத்திலே, நீ பெரிய ஆளா வருவே! உங்கிட்டே நானே கையெழுத்து வாங்கற நேரம் வரும்!"ன்னார்! அவர் கால்ல விழுந்து வாங்கினேன். அவர் வாக்கு பொய்க்கலே.

"அதனாலதான், எனக்கும் இந்தக் கல்லூரிக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கு. என்னைக்கும் அது இருக்கும். இந்த நல்ல நேரத்திலே, கல்லூரி கட்டட நிதிக்கு பத்து லட்ச ரூபாயை நன்கொடையா கொடுக்க ஆசைப்படறேன். நிர்வாகம் பெரிய மனசு பண்ணி ஏத்துக்கணும்."

'அரவிந்தன் வாழ்க!' 'அரவிந்தன் வாழ்க!' வாழ்த்தொலிகள் வானைப் பிளந்தன.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் ஜூன் 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com