சென்னையில் சந்திரன் இருப்பது வடபழனி. லதா இருப்பது போரூர். இருவரும் ஒரே கல்லூரி. ஒரே வகுப்பு. இப்போது முதுகலை படித்து வந்தார்கள். கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தார்கள். சந்திரனுக்கு அப்பா இல்லை. வயதான அம்மா இருக்கிறார்.
நல்ல வேலை கிடைக்கும்வரை சும்மா இருக்கமுடியாது என்று நினைத்தார். அதனால் காலையில் 4 மணிக்கு அவர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் மற்றும் தினசரி பேப்பர் போட்டு வந்தார். அவர் லதாவை பற்றி அம்மாவிடம் சொல்லிவிட்டார். அம்மா… சீக்கிரம் கல்யாணம் செய் என்று சொன்னார்.
லதா வீட்டில் அப்பா வங்கி அதிகாரி. அம்மாவோ.. லதா மீது கொள்ளை பிரியம், பாசம் வைத்து இருந்தார். லதா முதலில் தன் காதலை பற்றி அம்மாவிடம் தான் சொன்னார்.
அம்மா அப்பா இதற்கு சம்மதிக்க மாட்டார் எனத் தெளிவாக சொன்னார். அம்மா… அவருடன் சண்டை போடுவது தவிர வேறு வழி இல்லை என்றார்.
ஒரு நாள் மாலை லதா பேச்சை ஆரம்பித்தார். அப்பா நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று சொன்னதுதான் தாமதம்… அப்பா லதாவை அரைந்து தள்ளினார். பெரும் கோபம். தனது மகள் என்றுகூட பார்க்கவில்லை. அவர் லதாவை அடித்து துவைத்தார். லதா அம்மா லதாவை ஆதரித்து பேச வர… அவரையும் விட்டு வைக்க வில்லை. அடி, உதை தான்.
மாதங்கள் ஓடின. நல்லவேளை சந்திரனுக்கு மத்திய அரசு தபால் தந்தி துறையில் வேலை கிடைத்தது. மிகுந்த சந்தோஷம்.
ஆம். இப்போதுதான் கல்யாணம் செய்து கொள்ள தடை இருக்காது என்று நம்பினார்.
லதாவிற்கு ஒரே குஷி. இனி எந்த நாள் வேண்டுமானால் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தார்.
இன்று…சந்திரன் போரூர் லதா வீட்டிற்கு சென்றார். கதவை லதாவின் அப்பா திறந்தார். “யார் வேணும்...?” என்று கேட்டார்.
“இல்லை சார்... நான் உங்களை பார்க்கத்தான் வந்தேன்!”
“எனக்கு உங்களைத் தெரியாதே…?” என்றார்.
“நான் எல்லாம் சொல்கிறேன். நாம் உட்கார்ந்து பேசலாமா?” என பணிவுடன் பேசினார்.
“வாங்க…!” என்று சொல்லி சோஃபாவில் உட்காரச் சொன்னார்.
சந்திரன் உட்கார்ந்தார். உள்ளே பயம், பதட்டம் மற்றும் டென்ஷன். தட்டு தடுமாறி பேச ஆரம்பித்தார் சந்திரன்.
“சார்… நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வருகிறேன். இப்போதுதான்.. ஒரு மாதம் முன் மத்திய அரசு தபால் தந்தி துறையில் வேலை கிடைத்தது. இதற்காகத்தான் இத்தனை நாட்களாக காத்து இருக்கிறேன்.
உங்கள் மகள் லதாவுடன் கடந்த 4 வருடங்களாக பழகி வருகிறேன். அவர் மீது உண்மையான பாசம். ‘காதல்’ என்று சொல்ல தைரியம் இல்லை. ஆனால் கடைசியில் லதாவும் என்னை விரும்புகிறார். நீங்கள்தான் எங்கள் திருமணத்தை நடத்தி தர வேண்டும்…!” என்று பவ்யமாக சொன்னார்.
லதாவின் அப்பா மிகுந்த கோபம் அடைந்தார்.
“டேய்.. எழுந்திருடா…! வீட்டை விட்டு வெளியே போடா !” என்று கத்தினார்.
சந்திரன் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே சென்றார்.
அவர் போனதும் லதாவிற்கு அடிதான்… லதா அழுதுபுரண்டார்.
லதாவை கல்லூரி அனுப்புவதை நிறுத்திவிட்டார்.
சந்திரன் லதா சந்திக்க வாய்ப்பே இல்லை. சந்திரன் தைரியமாக ஒரு முடிவுக்கு வந்தார். லதா கிளாஸ்மெட் கீதாவிடம் ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார்.
எல்லாம் திட்டம் போட்டப்படி நடந்தது. வரும் வெள்ளிக்கிழமை பதிவு திருமணம் செய்துகொள்ள திட்டம். வெள்ளி அன்று திருமணம் நடைபெற்றது.
லதாவின் அப்பா தனது மகளை சந்திரன் கடத்தி போய் விட்டதாக புகார் அளித்தார். அதே காவல் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று இருவரும் மனுக் கொடுத்தனர்.
சில விஷயங்களை அடைய வேண்டும் என்றால் சில நேரங்களில் தைரியமாக நடந்துகொள்ள வேண்டும்.
சந்திரன்-லதா வாழ்க… !