
விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில், நான்மட்டும் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தேன். என் மனத்தில் ஒரு பிரளயமே நிகழ்ந்து ஓய்ந்திருந்தது. இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவனைச் சந்திப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
அவன்… கபிலன். முப்பது வருடங்களுக்குப் பிறகு என்னைப் பார்த்ததும் திகைப்பும் பரவசமும் மின்னிய அவன் கண்களில், அதனைத் தொடர்ந்து படர்ந்த காதலும் ஏமாற்றமும் எனக்கு மட்டும் விளங்கியது.
என் தவிப்பையும் பதட்டத்தையும் அவனும் உணர்ந்திருப்பானோ?
காலத்தின் ஓட்டத்தில் அவனுக்கென்று மனைவி குழந்தைகள் என குடும்பம் வளர்ந்து, சொல்லாத எங்கள் காதல் மறந்து போயிருக்குமா? அதுதானே நிதர்சனம். நிறைவேறாத காதலை நினைத்து வாழ்க்கையையே தொலைத்துக் கொள்ளாமல், கபிலன் சந்தோஷமாக வாழ்கிறான் என்றால் எனக்கும் அது சந்தோஷம்தான்.
கல்லூரி படிக்கும்போது மலர்ந்த எங்கள் காதல், நான்கு வருடங்கள் படிப்படியாக வளர்ந்தது. உண்மையான அன்பும் புரிதலும் மட்டுமே எங்களுக்கு இடையே பரவிக் கிடந்தது.