
-பானுகுமார்
சில பேரைப் பார்த்தால் கேள்வி கேட்கத் தோன்றாத ஒரு நம்பிக்கை பிறந்துவிடும். அதனால்தானோ என்னவோ மணிகண்டன் டிரைவர் வேலை கேட்டு வந்தபோது, அவனிடம் எந்த ரெஃபரன்ஸும் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டும் திறமையை மட்டுமே பார்த்து பணியில் அமர்த்தினேன். அவனும் சரி, எத்தனை மணி நேர வேலை, என்ன சம்பளம், லீவ், ஓவர்டைம், போனஸ் எதுவுமே எவ்வளவு என்று கேட்காமல் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.
பார்க்க சுத்தமாக இருந்தான். பணிவுடன் பேசினான். ஒழுங்காக வேலைக்கு வந்தான். பத்திரமாக வண்டி ஓட்டினான். பத்து நாள் பழகியதில் சிகரெட், புகையிலை, குடி, சீட்டு என்று எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என்பது புரிந்தது. பரமதிருப்தி என் திருமதிக்கு. பழகப் பழக மணியின் பல நற்குணங்கள் எனக்குப் புரிய, மிகப் பெருமையாக இருந்தது. டிரைவர் என்று சொல்வதைவிட எங்கள் வீட்டுப் பையன் என அறிமுகப்படுத்தத் தோன்றியது.
எங்கள் பிள்ளையைவிட இரண்டு மூன்று வயது பெரியவன். ஏதோ படிப்பு இல்லாததால் இப்படி வேலைக்கு வந்திருக்கிறான். வசதி இருந்தால் படித்திருப்பானோ? புத்திசாலிதான், ஆனால் படிப்பில் ஆர்வமில்லை. கற்பதில் சலிப்பு என்றாலும் காது திறந்திருந்தது. சூட்டிகை. காரைப் பற்றி சகலத்தையும் அறிந்துகொள்வதில் ஆர்வமிருந்தது.