
-ராதா வாசுதேவன்
லதா காலையிலேயே டீ.வி. பெட்டி முன்பு உட்கார்ந்து, சேனல்களுக்கிடையே தாவிக் கொண்டிருந்தாள். அன்று அலுவலகம் விடுமுறை. சீக்கிரம் சமையலை முடித்துவிட்டு, டீ.வி முன்பு உட்கார்ந்துவிட்டாள்.
'ஜெய்' டி.வி.யில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி அவள் கவனத்தைக் கவர்ந்தது. பிரபல நடிகரின் முயற்சியால் படிப்பதற்கு வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக, நான்கைந்து நல்ல உள்ளங்கள் சேர்ந்து ஆரம்பித்து இருக்கும் அமைப்பின் ஆரம்ப விழா நிகழ்ச்சி அது.
பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் பணம் இல்லாத காரணத்தால், அரசாங்கத்தால் நிர்ணயிக் கப்பட்ட குறைந்த அளவு கட்டணம் செலுத்திகூட தொடர்ந்து படிக்க முடியாத நிலையிலிருந்த மாணவ மாணவிகள் வரவழைக்கப்பட்டு, அவர்களை நிகழ்ச்சி நடத்துபவர் பேட்டி கண்டு கொண்டிருந்தார்.
அதில் பங்கு பெற்ற மாணவ மாணவியர், தாங்கள் மேற்கொண்டு படிக்க இயலாமல் போனதற்காகக் கூறிய குடும்பச் சூழ்நிலைக் காரணங்கள் லதாவின் கண்களில் நீரை வரவழைத்தன. ஐயாயிரம் ரூபாய் பணம் செலுத்த வழி இல்லாததால், அவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்பிற்கான வாய்ப்புகளைத் தவற விட்டதாக சொல்லி வருந்தியது கல்மனதையும் கரைப்பதாக இருந்தது.
லதாவுக்குப் பார்க்கப் பார்க்க தாங்கவில்லை. 'ஐயோ! இந்தக் குழந்தைகளுக்கு இவ்வளவு கஷ்டங்களா? இந்த அமைப்புக்கு நிச்சயம் நாம் உதவி செய்யணும். ஒரு குழந்தையாவது படிக்க பண உதவி செய்யணும்' என நினைத்தாள். திரையில் தெரிந்த தொலைபேசித் தொடர்பு எண்களைக் கவனமாகக் குறித்துக்கொண்டாள்.
அழைப்பு மணி ஒலித்தது. கணவன் சேகர்தான். லதாவின் அழுது சிவந்திருந்த கண்களைப் பார்த்து, "என்ன லதா? ஏன் அழுதாயா?" என பதறினான். லதா, டீ.வி.யில்தான் பார்த்த விவரங்களை மீண்டும் கண்கலங்கி சேகரிடம் சொன்னாள்.
"ச்சு! ச்சு! ஐயோ பாவம்" என்பதற்கு மேல் சேகரிடம் எந்த ரியாக்ஷனும் காணஇயலவில்லை.
லதாவுக்குச் சென்ற வாரம் அலுவலகத்திலிருந்து வந்த அரியர்ஸ் பணம் ஐம்பதாயிரம், அவளது ஞாபகத்தில் நிழலாடியது. உதவ வேண்டும் என்ற உணர்ச்சி மேலிட்டதால், அந்தத் தொகையை இந்த அமைப்பை நடத்துபவர்களிடம் கொடுக்க எண்ணி, கைபேசியை எடுத்தாள். கைபேசியை முதல்நாள் சார்ஜ் செய்ய மறந்தது நினைவுக்கு வர, நிகழ்ச்சி முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என நினைத்து, நிகழ்ச்சி பார்ப்பதைத் தொடர்ந்தாள் .
ஏதேதோ குடும்ப வேலைகளில் கவனம் சிதற, மதியம் சாப்பிடும்போது மகள் திவ்யா, "அம்மா! இன்னிக்கு என் ஃப்ரெண்ட் வீட்டிலே புது மாடல் வாக்குவம் க்ளீனர் வாங்கியிருக்காங்க. சூப்பரா வீட்டை க்ளீன் பண்ணுதும்மா! நம்ம வீட்டிலும் வாங்கிட்டா தினம் நானே வீட்டை க்ளீன் பண்ணிடுவேன். ரொம்ப உபயோகமா இருக்கும்" என்றாள். கணவனும் அதை ஆமோதித்தான்.
லதா ஏதோ சொல்ல முற்படுவதற்குள், மகன் தினேஷும், "அம்மா அதை வாங்கினால் அப்பாவோட வண்டி, என் சைக்கிள் எல்லாம் நானே க்ளீன் பண்ணிடுவேன். ப்ளீஸ்மா!" என்றான். இதைக் கேட்ட லதாவுக்கும் சிறிது சபலம் தட்டியது. வீடு பெருக்கும் மேகலா, பாதி நாட்கள் சொல்லாமலே மட்டம் போடுவது நினைவுக்கு வந்தது. சரி! க்ளீனர்க்கு பத்தாயிரம் ரூபாய் போனாலும் மீதி நாற்பதாயிரம் ரூபாயை அந்த அமைப்புக்குக் கொடுத்துவிடலாம் என சமாதானம் கூறிக்கொண்டாள்.
இரவே நாற்பதாயிரம் ரூபாய்க்கு செக் எழுதி வைத்துவிட்டால், அந்த அமைப்பினர் கொடுத்திருந்த முகவரியில் செக்கை சேர்ப்பித்து விடலாம் என நினைத்தபடி, பீரோவில் தனது செக்புக்கைத் தேடினாள்.
''ஏங்க, என் செக்புக்கை நீங்க எதுக்காச்சும் எடுத்தீங்களா?" என்று கேட்டாள்.
"போன மாசம் உன் டூ வீலர் ட்யூ கட்டும்போதே ஒரே ஒரு லீஃப்தானே இருந்துச்சு. தீர்ந்து போயிருக்கும். நாளைக்கு பேங்குக்குப் போய் புது செக்புக் வாங்கிட்டு வரேன். என்ன விஷயம்? யாருக்கு செக் தரணும்?" என்று கேட்டான். லதா, தன் தீர்மானத்தைக் கூறிவிட்டு கணவனின் முகத்தைப் பார்த்தாள். அவன் ஆறுதலாக, அவள் தோளைத் தட்டிவிட்டு, ஏதும் கூறாமல் சென்று விட்டான். கணவன் மறுப்பேதும் தெரிவிக்காதது அவளுக்கும் நிம்மதியாயிருந்தது.
மறுநாள், காலை நேர அவசரத்திலும், கணவனிடம் செக்புக் வாங்கிவர நினைவூட்டத் தவறவில்லை. அன்று அலுவலகத்தில், தோழி மாலதியின் அலங்காரம் எல்லாப் பெண்களையும் கவர்ந்தது. அவள் போட்டிருந்த புது மோஸ்தர் தோடு பற்றித்தான் பெண்களிடையே பேச்சு. நகரத்தின் பெரிய நகைக்கடையில் பிரத்யேகமாக ஆர்டர் கொடுத்து செய்து இருந்தாள். பதினைந்தாயிரம் ஆனது என்றாள். கீதா, உஷா, கமலா என அனைவரும் அரியர்ஸ் பணத்தில் அதே மாதிரி தோடு செய்வதாகத் தீர்மானித்தனர். மாலதி இவளிடமும், "என்ன லதா, நீயும் இதுமாதிரி ஒன்று வாங்கிக்கோயேன்!" என்றாள். "வேண்டாம் மாலதி எனக்கு இப்போ நகை எதுவும் வாங்குற ஐடியா இல்லை" என்றாள்.
அதற்குள், "அவள் ஹஸ்பண்ட்கிட்ட பர்மிஷன் கேக்கணும் போல இருக்கு. அவர் ஒத்துக்க மாட்டாரோ என்னவோ அதான் வேண்டாங்கிறா!" என்று கிண்டலடித்தாள் உஷா. லதாவுக்குச் சுருக்கென்றது.
"அப்படியெல்லாம் இல்லை. அவர் என்றைக்குமே என் ஆசைக்கு குறுக்கே நின்றதில்லை. எனக்கும் சேர்த்து ஒரு செட் ஆர்டர் பண்ணிடுங்க" என்றாள் ரோஷத்துடன். மனம், அரியர்ஸ் பணத்தில் தற்போது பாக்கி இருக்கும் இருபத்தைந்தாயிரத்தை வேறு செலவு வருவதற்குள், அந்த அமைப்புக்குக் கொடுத்துவிடு என்று சொன்னது.
மாலை அலுவலகம் விட்டு வந்தவுடன், "செக் புக் வாங்கியாச்சா?" என்றாள் கணவனிடம். "காலையிலேயே ஞாபகமா வாங்கி வெச்சுட்டேன். இந்தா" என்று அவன் ஆஃபீஸ் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தான். முதல் காரியமாக செக்கில், அரியர்ஸ் பணத்தில் மீதமிருந்த இருபத்தைந்தாயிரத்தை எழுதி கையெழுத்திட்டு கைப்பையில் வைத்துக்கொண்டு நிம்மதியாகத் தூங்கினாள்.
காலையில் கண் விழிக்கும்போதே ஹாலில் பேச்சுக்குரல். தம்பி ரமேஷின் குரல்போல இருக்கே? படுக்கையில் இருந்து துள்ளி எழுந்தாள்.
"என்ன ரமேஷ் பெங்களூரிலிருந்து எப்ப வந்தே? ஒரு ஃபோன்கூட பண்ணலையே? இவர் வண்டி எடுத்துக்கிட்டு ஸ்டேஷனுக்கு வந்திருப்பாரில்லே?" என்று உரிமையோடு கடிந்துகொண்டாள்.
பரவாயில்லைக்கா. ஆஃபீஸ் வேலையா வந்தேன். இன்னிக்கு ஒருநாள் உன் ஆஃபீஸுக்கு லீவ் போட்டுட்டு என்கூட வா. நம்ம சாருவோட நாட்டிய அரங்கேற்றத்துக்கு நிறைய பர்சேஸ் பண்ண வேண்டி யிருக்கு" என்றான்.
சேகரும் குழந்தைகளும் கிளம்பிய பிறகு இருவரும் நிதானமாக ஊர் விவரங்களைப் பேசியபடி ஷாப்பிங் கிளம்பினர்.
தம்பி மனைவி கொடுத்து விட்டிருந்த லிஸ்ட் பெரியதாகவே இருந்தது. அத்தையாய் லட்சணமாய், தம்பி பெண்ணின் நாட்டிய அரங்கேற்றத்துக்கு நல்லதாக ஏதாவது பரிசளிக்காவிட்டால் நன்றாக இருக்குமா? சாரு குட்டிக்கு அரை பவுனில் அழகான ஜிமிக்கி வாங்கினாள். டீ.வி.யில் பார்த்த மாணவியின் முகம் மனத்தில் நிழலாடியது.
"அக்கா புடைவைக் கடைக்குப் போகணும்" தம்பியின் குரல் கவனத்தைக் கலைத்தது. சாருவுக்கு நாட்டிய உடை தைக்க சுரேஷ் இரண்டு பட்டுப் புடவைகள் வாங்கினான். இவளும் தன் பங்கிற்குத் தம்பியுடன் வசிக்கும் அம்மா, அப்பா, தம்பி மனைவி என அனைவருக்கும் துணிகள் எடுத்தாள்.
ஒருவழியாக ஷாப்பிங், ஹோட்டல் என்று முடித்து சாயங்காலம் வீடு வந்தபோது, கையில் இருந்த ஏ.டி.எம். கார்டு தேய்ந்து கட்டெறும்பாகி இருந்தது.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் ஆஃபீஸில் ஆடிட்டிங் வேலை நெட்டி வாங்கியது. தம்பி மனைவி ஃபோன் செய்து அவளது பரிசுகளுக்கு நன்றி சொன்னாள். அன்று மாலை வீட்டுக்குக் கிளம்பும் முன் கைப்பையிலிருந்து சாவியை எடுத்தபோது தவறிக் கீழே விழுந்த பேப்பரை எடுத்தாள். இருபத் தைந்தாயிரம் ரூபாய்க்கான அந்த செக் அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலிருந்தது. குற்ற உணர்வுடன் வீட்டுக்குக் கிளம்பினாள்.
"என்ன லதா அந்த அமைப்புக்கு செக் கொடுத்துட்டியா?" ஆர்வத்துடன் விசாரித்தான் சேகர்.
லதாவின் முகம் போன போக்கைப் பார்த்து, வழக்கம் போல எதுவும் பேசாது அவளது தோளை ஆதரவுடன் தட்டினான். தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். தினமும் மாலை வேளையில் அந்த அமைப்பைச் சார்ந்த குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரம் இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுக்க அந்த அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தக் கடிதம் அது. ஆச்சரியமும் நன்றியும் கலந்த உணர்வுடன் கணவனைப் பார்க்க...
''ஆமாம் லதா. பணத்தால் உதவ முடியாதவங்க அவங்க நேரத்தைக் கொடுத்து உதவலாம்னு அந்த அமைப்பினர் சொன்னாங்க. நான், பத்தாவது பன்னிரண்டாவது படிக்கும் அந்த மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்கிறேன்னு ஏத்துக்கிட்டேன். நான்தான் எம்.எஸ்ஸி மேத்ஸ், ஃபர்ஸ்ட் கிளாஸ் ஸ்டூடண்ட் ஆச்சே!" என்றான் மாறாத அதே புன்னகையுடன்.
லதா, சேகரின் தோளில் சாய்ந்துகொள்ள அவள் மனம் இலேசாகியது.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் அக்டோபர் 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்