
ஜானகியையும் நளினியையும் தவிர வீட்டில் யாரும் இல்லை. ஜானுவின் கணவர், பிள்ளை, மாட்டுப் பெண் மூவரும் எதோ கல்யாண ரிசப்ஷன் என்று மத்தியானமே கிளம்பி விட்டனர்.
டின்னரைப் பண்ணி வைத்து விட்டு, நளினியைப் பற்றிக் கவலைப்பட உட்கார்ந்தாள் ஜானு.
நளினி ஜானுவின் ஒரே பேத்தி. ஜானுவின் சம்பந்தியம்மாள், பெண் நர்மதாவின் கல்யாணம் முடிந்த கையோடு, படு அவசரமாய்ப் போய்ச் சேர்ந்து விட்டாள். ஸோ, ஜானு நளினியின் ஒரே பாட்டி. வளைகாப்பு - சீமந்தம், பிள்ளைப் பெறல், பத்தியம், புண்யாஜனம் என்று எல்லா வைபவமும் புகுந்த வீட்டில்தான் நடத்தது நர்மதாவுக்கு. அருமைப் பிள்ளை நரசிம்மன், சர்ச்சைகள் இன்றி குடும்பத்தில் ஒருத்தியாக இணைந்து விட்ட மருமகள் நர்மதா, குழந்தை நளினி. அமைதியாகக் கழிந்தது காலம். சாதாரணமாக எல்லா வீடுகளையும் போல புராணக் கதைகள் கேட்டுப், பாட்டும், பரதமும் பயின்று, பள்ளியிலும் நல்ல மாணவியாக, பிரமாதமான எதிர்காலத்தை நோக்கிப் படு வேகமாக வளர்ந்தாள் நளினி.
20 வருடங்களுக்கு முன் காலமாகிவிட்ட தன் மாமியார் மங்களத்தை அவரின் சிறுவயதில் ஜானு பார்த்திருக்க முடியாது. ஆனால் நளினி அதே வார்ப்பு என்பதில் ஜானுவுக்கு ஐயமில்லை. 60 வயதில், MS ப்ளூ பட்டுப் புடவையில், காதில் ரங்கூன் வைரம் மின்ன, தலை நிறைய ஜாதி மல்லி, காலில் வண்டி உருட்டு மெட்டி 'டக் டக்' என்று சப்திக்க, “சௌக்யமா? கல்யாணமாக்கும்? “ என்று வாயகலச் சிரிப்புடன் மங்களத்தம்மாள் உள்ளே வந்தால், வீடே கல்யாணக் களை கட்டி விடும்! நளினியும் அதே நிறம், உயரம், ஆகிருதி! இடது கன்னத்து மேட்டில் காணும் கடுகளவு மச்சம் மட்டும் சிறு அடிஷன். கூடுதல் களையூட்டியது.
ஜானுவின் கவலைக்குக் காரணம் இது தான்: கொஞ்ச நாளாகவே நளினியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள்… அடிக்கடி செல்போன் அழைப்புகள், ஸ்பெஷல் க்ளாஸ் என்று வெளியே சென்று திரும்பி வர கொஞ்சம் தாமதம், டிரஸ்ஸில் கூடுதல் கவனம்… ஸ்வீட் ஸிக்ஸ்டீனுக்கே உரிய பரபரப்பு, பளபளப்பு, மட்டுமின்றி ஒரு மிதப்பு… சதா க்ளவுட் நைனில்தான் வாசம்… எதாவது கேட்டால் மட்டும், பூமிக்கு இறங்கி வந்து பதில், பின் மீண்டும் மேக சஞ்சாரம்… கண்டிப்பாக எதோ விவகாரம்தான். இதோ மாடியிலிருந்து வருகிறாள்.
“பாட்டி வெளில போறேன், ஏதாவது வேணுமா?
ஜானு பேச ஆரம்பிக்குமுன் செல் ஃபோன் சிணுங்க, பால்கனியில் சென்று குரலைத் தாழ்த்திப் பேசிவிட்டு, “யா! வில் பி தேர். பை“, என்றவாறு உள்ளே வந்து செருப்பை மாட்டிக் கொண்டவளிடம், “எனக்குக் கொஞ்சம் பேசணுமே ஒன்னோட“, என்றாள் ஜானு நிதானமாக.
“பாட்டி…. நாட் நௌ. ஐ ஆம் அல்ரெடி லேட், ப்ளீஸ்!
சரி. இப்போ வேண்டாம். திரும்பி வரட்டும்.
“அஞ்சு - அஞ்சரைக்கெல்லாம் வந்துடுவேயில்ல? “
“ஓ யெஸ்!”
“ஓகே, சீ யு“
“பை“ கிளம்பி விட்டாள். மணி 4.
கண்டிப்பாக இது என்னவோ விவகாரம்தான் என்று பட்டது ஜானுவுக்கு. கணவர் கிருஷ்ணனுக்குப் பேத்தியிடம் அலாதிப் பிரியம். அவளைக் குற்றம் சொன்னால், சொன்னவனைக் கழுவிலேற்றிவிட்டுப் பிறகுதான் விஜாரிப்பார். பிள்ளை சிறிது முன் கோபி. மாட்டுப்பெண் பயங்கொள்ளி. பிரச்சனை ஒண்ணும் இல்லேன்னா… அனாவசியமாக பெரிது படுத்த வேண்டாம். பார்ப்போம் என்று முடிவெடுத்தாள்.
நாலே முக்காலுக்கெல்லாம் நளினி வந்து விட்டாள். முகம் வாடி இருந்தது.
“சீக்கிரமே வந்துட்டியே. யூ லுக் டயர்ட்.“
“பாட்டி, பிளீஸ் டோன்ட் ஆஸ்க் மீ எனிதிங் “
“ஐ ஸீ!”
பாட்டியின் அந்தக் கொயட் ‘ஐ ஸீ’, அவள் நுட்பமாக எதையோ உணர்ந்து கொண்டு விட்டாள் என்பதை நளினிக்கு உணர்த்தியது போலும். சிறு தடுமாற்றத்துடன் ‘பொத்’ என்று ஊஞ்சலில் உட்கார்ந்தவளிடம், “யாரந்தப் பையன்?“ என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் ஜானு.
“வாட்? உனக்கு எப்படி…“
“இது கூட தெரியாதா? ஸீ... உனக்கு வயசு 16. எனக்கு வயசு 60. கொஞ்ச நாளாவே என்னமோ ஆகாசத்துலே பறக்கறே. புது டிரஸ் போட்டுண்டா வானத்திலிருந்து தேவதை இறங்கி வந்துட்டாப்பல ஒரு மிதப்பு, ஒரு துள்ளல்… நானும் உன் வயசைத் தாண்டித் தானேடியம்மா வந்திருக்கேன். சொல்லு. என்ன விஷயம்?“
“கிளாஸ் பையன் ஒருத்தன். பேரு நவீன். சும்மா மெசேஜ் விடறது வாட்ஸ் ஆப்லே, 'கான் வீ மீட் டுடே? வில் யூ கம் டு காஃபி டே' ன்னு… ஒரே தொந்தரவு. டீச்சர் கிட்ட கம்ப்ளைன் பண்ண மனசு வரலை...“ தலை லேசாய்க் குனிந்தது. கண்ணில் சிறு நாணம். நளினி என்ன அழகு! ஜானுவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
“என்னதான் சொல்றான்னு பார்க்கலாமேன்னு காஃபி டே க்குப் போனேன்...“
“ம்.. நிறுத்தாம சொல்லு“ , என்றாள் ஜானு மனதில் தோன்றிய பதற்றத்தைக் குரலில் வெளிக்காட்டாமல். பாட்டியின் அமைதியான அந்த அணுகல் பேத்தியைப் பேசத் தூண்டியது.
“ 'சினிமாவுக்குப் போகலாமா?' ன்னு கேட்டான். ஓரிரு நாட்கள் கழித்து, 'வீக் என்ட் ஃபரண்ட்ஸோட ரிசார்ட் போறேன் நீ வருவியா?' என்றான்.
‘நத்திங் டூயிங்! விளையாடறியா? ஹெள வில் ஐ எக்ஸ்ப்ளைன் இட் டு மை பீப்பில் அட் ஹோம்? போகக் கூடாதுன்னு எனக்கே தோண்றதே!' ன்னு சொன்னேன்.
‘அப்பிடின்னா, லெட் அஸ் கால் இட் க்விட்ஸ். நம்ப ஃபரன்ட்ஷிப்பைக் கன்டின்யூ பண்றதில் அர்த்தமில்லை' ன்னு சொன்னதும்,
'ஓகே, கூல்!', என்று சொல்லிட்டு வந்துட்டேன். “ என்று நிறுத்தினாள் நளினி.
“உனக்கு அவனைப் பிடித்திருந்தா? “
“ஆமா. ஆனா அதுக்கான தகுதி அவனுக்கு இல்லை! “
“ஓஹோ! அது எப்படி தெரிஞ்சது?” .
“இன்னிக்கு சாரி கேட்க காஃபி டேக்கு வரச் சொல்லியிருந்தான். நான் போயிருக்கக் கூடாது. பட் போனேன். கொஞ்சம் முன்னால போயிட்டேன் போல இருக்கு. அவன் வேற ஒரு பொண்ணோட ரிசார்ட் போகப் ப்ரோக்ராம் போட்டுண்டிருந்தான். என்னை அவன் கவனிக்கலை. சத்தமில்லாம வந்துட்டேன்.“
“நளினியா கொக்கான்னானாம்... ப்ரௌட் ஆஃப் யூ!“ என்று திருஷ்டி கழித்தாள் ஜானு.
“ஒரு க்விக் க்வஸடின், பாட்டி. இதே சூழ்நிலையிலே நீ என்ன செஞ்சிருப்பே? “
“நான் இவ்ளோ தைரியமாய் ஹான்டில் பண்ணியிருப்பேனாங்கறது டவுட்ஃபுல்“, என்றாள் ஜானு சற்று யோஜனைக்குப் பின்.
“யாராவது பையன் வம்பு பண்ணினான்னு வீட்ல தெரிஞ்சா, அடக்கவொடுக்கமா இல்லேன்னு என்னைத் திட்டி, உடனடியா வரன் பார்த்துக் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியிருப்பா. காலேஜ் கட் ஆகி, M Sc., P Hd., உத்யோகம்… எல்லாத்திலேயும் மண்ணு விழுந்திருக்கும்… அதை விடு. நீ பண்ணினது எல்லாம் கரெக்ட். லைஃப்ல என்ன வேணும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அது பெரிய பிளஸ். இந்தக்காலத்துல பேசுவது பழகுவதெல்லாம் சகஜமாயிடுத்து. பட் பி எ நோ – நான்சென்ஸ் கேர்ள்.“
“நீ கொஞ்சம் பயந்துட்டே இல்ல? “
“நானா? சேச்சே! “
“ஹே பாட்டி… சமாளிக்காதே! நீ எப்போ சந்தோஷமா பாக்கறே, எப்போ சந்தேகமா நோட் பண்றே, எல்லாம் தெரியும் எனக்கு. நளினியா, கொக்கா? “
ஜானுவுக்கு கர்வம் தலைக்கேறியது.
“அடிச்சு வளர்த்திருக்கணும்டீ ஒன்ன!" என்று சிரித்தபடி கன்னத்தை இலேசாக கிள்ளினாள் ஜானு.
அடுத்த வாரம் நியூஸ் பேப்பரில் காணப்பட்ட தகவலின் சாரம்:
‘நவீனும் அவனது தோழர்/தோழிகள் சிலரும், போதைப் பொருள் அப்யூஸ் காரணமாக மயங்கிய நிலையில் ஈ சி ஆர் ரிசார்ட் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்ட பின் போலீஸ் விசாரணை தொடரும்.‘
நளினி ஓடி வந்து பாட்டியிடம்,
“ஓ தேங்க் காட்! இட் குட் ஹாவ் பீன் மீ! “
“எஸ்! தேங்க் காட்!“, என்று பேத்தியை அணைத்துக் கொண்டாள் ஜானு.