

-ஆர். புவனேஸ்வரி
மருத்துவமனை வராந்தாவில் முன்வாசலைப் பார்த்தபடி அமர்ந்திருந்த சங்கரின் பார்வை இலக்கில்லாமல் வெறித்துக்கொண்டிருந்தது. முன்வாசல் தோட்டத்தில் இருந்த அழகிய பூச்செடிகளின் அசைவோ, வெள்ளை உடை செவிலியர்களின் பரபரப்பான நடமாட்டமோ, பார்வையாளர்களுக்கான இருக்கையில் அமர்ந்திருந்த துறுதுறு குழந்தையோ எதுவுமே அவனது கவனத்தைக் கவரவில்லை.
'சுமதி.. சுமதி' தாரகமந்திரம்போல் மனம், அந்தப் பெயரை மட்டுமே இடைவிடாமல் ஜெபித்துக்கொண்டிருந்தது. சுமதி... பெயரைப் போலவே அவள் நினைவுகளும் இனித்தன. மனம் பதினெட்டு வருடங்கள் பின்னோக்கிப் பயணித்தது.
பெண் பார்த்து வந்த அன்று அம்மா, அப்பா, தங்கை எல்லோரும் அவள் புராணமே பாடிக்கொண்டிருந்தார்கள். அவள் கொண்டு வந்து தந்த கேசரி, போண்டாவிலிருந்து, அவர்கள் வீட்டுச் சுவர் அலங்காரம், திரைச்சீலை வரை சுமதியின் கைவண்ணம் மிளிர்ந்தது.
சுமதியின் சமையலையும், கைவேலைகளையும், அவள் இன்டீரியர் டெகரேஷன் கோர்ஸ் முடித்திருப்பதையும் அவளது தந்தை புகழ்ந்ததில் தவறே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
திருமணம் முடிந்த இரண்டாம் நாள் வந்திருந்த பரிசுப் பொருள்களை எல்லோரும் பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்க, சுமதி மட்டும் பரிசுப் பொருள் சுற்றி வந்த வண்ணத்தாள்களைப் பொறுமையாக நீவி மடித்து வைத்துக்கொண்டிருந்தாள்.