
-சோபனா ராஜ்
சமையலறையில், மருமகளுக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்த ஞானத்துக்கு ஒரு நொடி 'கிறுகிறு'வென தலை சுற்றுவதுபோல் இருந்தது.
அடுத்து வந்த சில நாட்களிலும் அடிக்கடி தலை சுற்றல் தொடரவே, மகனிடம் வாய் திறந்தாள்.
மாலை வந்து அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்று காண்பிப்பதாக சொன்ன மகனின் சொல்லால், சற்று தெம்பாகத் தெளிந்தாள்.
மகன் மாலை சொன்னதுபோல் கூட்டிச் செல்லவில்லை. ஆஃபீஸில் நிறைய வேலை. மனைவியிடம் சொல்லி டாக்டரிடம் மறுநாள் அவளை அழைத்துச் செல்லுவதாக, மகன் தந்த வாக்குறுதியில், ஞானம். ஆறுதலடைந்தாள்
மருமகளும் வேலைக்குச் செல்வதால், அடுத்து வந்த நாட்களிலும் ஞானத்தை டாக்டரிடம் அழைத்துச் செல்ல முடியவில்லை.
உள்ளூரில் இருக்கும் பெரிய பெண்ணுக்கு ஃபோன் பண்ணி, தன்னை டாக்டரிடம் அழைத்து செல்ல வருமாறு வேண்டுகோள் விடுத்தாள். ஆனால், அவளிடம் இருந்து சரியான பதில் ஒன்றும் வரவில்லை.
யாரைக் குற்றம் சொல்லுவது? அவளது மனவிரக்தியின் புலம்பலுக்கு, இரக்கப்பட்டதுபோல, இரண்டொரு நாட்கள் உடம்பு படுத்தாமல் இருந்தது.
மகன், மருமகள், பேரக் குழந்தைகள் எல்லாம் போனபிறகு, சமையலறையைச் சுத்தம் பண்ணியவளிடம் சேட்டை செய்ய ஆரம்பித்தது ஞானத்தின் உடல்நிலை.