

அந்த நாற்பதடிச் சாலை சட்டென்று நூறடிச் சாலையாகத் தோற்றமளித்தது. காதுகளை அசைத்துக் கொண்டு தும்பிக்கையைச் சுழற்றி நடந்து வந்து கொண்டிருந்தது கோயில் யானை. அதை அடங்க வைத்தவன் என்ற நினைப்பின் கர்வத்தில் நெருங்கி நடந்தான் பாகன்.
வசந்தி வீட்டிற்கு வெளியில் நின்று யானையின் கம்பீரத்தைப் பார்த்தவாறிருந்தாள். எதிர் வீட்டுக் கனிகாவின் இடது கை அவள் அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டிருந்தது. வலது கை கொடுத்த பழத்தை பூக் கொய்கிற விதமாகப் பறித்துக் கொண்டது யானை.
சாகசத்தில் எம்பி எம்பிக் குதித்த மகளை அணைத்துத் தூக்கிக் கொஞ்சியதைப் பார்த்து உள்ளே வந்தாள் வசந்தி.
அப்பாவும் மகளும் அவர்கள் வீட்டிற்குள் நுழையும் வரை ஜன்னலில் பார்த்து நின்றாள். கதவைச் சாத்தினாள். அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் நிலா. சத்தமின்றி மகளைப் பார்த்து விட்டுச் சமையலறைக்கு நகர்ந்தாள் வசந்தி.
வெளியே கேட் திறக்கும் ஓசை கேட்டு நிலா கதவைத் திறந்தாள். வாசலில் செல்வகுமார். அவர் அப்பா என்று சொல்லிக்கொள்கிற செல்வகுமார்; ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் வருகிற நேரமது. வெள்ளை வேட்டியும் சட்டையும். கழுத்தில் பட்டைப் பொன் சங்கிலி. நாய்ச் சங்கிலி என்று அம்மாவிடம் சொல்லிச் சிரிப்பாள் நிலா.
அவர்கள் வந்த காரை நிறுத்தி விட்டுப் பின்னாலேயே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள் மூன்று தற்காலிக கூட்டாளிகள். மாதங்களுக்கா நாட்களுக்கா என்பது அவர்களுக்கே தெரியாத நட்பு.