
"ஏங்க! நம்ப பொண்ணு இனியா, சொன்னா கேக்கவே மாட்டேன்கிறா.." குறைப்பட்டவாறே கூறிய மனைவி லதாவிடம், "சொல்ற விதத்துல சொல்லணும். கேப்பா" என்றான் சுரேஷ்.
"ஆமா! பெரிய சொல்ற விதம். நீங்க எப்பவாவது சொல்லி இருந்தாத்தானே தெரியும்? " முணுமுணுத்தவாறே உள்ளே சென்றாள் லதா. சுரேஷ் விட்ட இடத்திலிருந்து பேப்பரை படிக்க ஆரம்பித்தான்.
சற்று நேரம் சென்று ஸ்டைலாக டிரெஸ் செய்து கொண்டு வந்த இனியா, "அப்பா! என் ஃப்ரெண்ட், தன்னோட சகோதரனோட பர்த்டே பார்ட்டிக்கு என்னைக் கூப்பிட்ருக்கா. நான் போய்ட்டு வறேன்."
அவளைப் பார்த்த சுரேஷ், "ஏம்மா! இந்த டிரெஸ்லயா போகப்போறே? "
"ஆமா! இதுதான் இப்ப ஃபேஷன். ப்ரெண்ட் ஓபன்.
"நல்லாத்தான் இருக்கு. ஆனால், கொஞ்சம் கவர் பண்ணின மாதிரி டிரெஸ் போட்டா, உனக்கு இன்னம் நல்லா இருக்கும்"
"என்னப்பா நீங்க! அம்மா மாதிரி ஓல்ட் thoughts -ல இருக்கீங்க!"
"சரி! புது ஃபேஷனா! நல்லா இருக்கு. உனக்கு ரொம்பவே ஸுட் ஆறது. ஆமா! உன் கைல என்ன..?"
"செல்போன். நீங்க ப்ரெஸென்ட் பண்ணினதுதான். மறந்திட்டீங்களா?"
"ஆமா! வரவர ஞாபக மறதி" என்ற சுரேஷ், "அந்த மொபைலுக்கு பின்னாடி உள்ள டிசைன் நல்லா இருக்கே. அது..?"
"அதுவா அப்பா! மொபைல் கவர். புது டிசைன். நேத்து என் ஃப்ரெண்ட்டும் நானும் வாங்கினோம். டெம்பர்டு க்ளாஸ் -ம் ஸ்கீரினுக்கு மேல போட்டோம். கை தவறி கீழ விழுந்தா, க்ராக் ஆகாது. மொபைலுக்கு ரொம்ப ஸேஃப்டி. இந்தாங்கப்பா. பாருங்க"
கையில் மொபைலை வாங்கிப் பார்த்த சுரேஷ், "ப்யூட்டிஃபுல் ஐடியா இனியா! மொபைலுக்கு நல்ல ஸேஃப்டிதான். அப்பா ஒண்ணு சொல்றேன். ரூபாய் 5,000/- பெறுமானம் கொண்ட மொபைலுக்கு ஸேஃப்டி தேவைன்னு சொல்ற நீ, உன்னோட ஸேஃப்டி பத்தி யோசிச்சியா..?"
"நான் ஸேஃபா தானே இருக்கேன். நோ கவலை!"
"இனியா! உனக்கு இப்ப வயசு16. நீ போட்டிருக்கற உன் ப்ரண்ட் ஓப்பன் உடை, மற்றவர்கள் உன்னை கூர்ந்து கவனிக்க வைக்கும். தவறான எண்ணங்களை பாக்கறவங்க மனசுல உருவாக்கும். கொஞ்சம் யோசிச்சுப் பாரு! புரியும். எப்படி உன் மொபைல் ஸேஃபா இருக்கணம்னு நீ கவர் போட நினைக்கறயோ, அதே போல, நீ ஸேஃபா இருக்கணும்னு அப்பாவும், அம்மாவும் நினைக்கறது தப்பா? எங்களுக்கு நீதான் எல்லாமே. நீ இன்டலிஜென்ட் பொண்ணாச்சே! காலம் கெட்டுக்கிடக்கறது பத்தி உனக்கே எல்லாம் தெரியும். நாங்க சொல்ல வேண்டியது கிடையாது."
அப்பாவை ஒரு பார்வை பார்த்த இனியா, சடக்கென தன் அறைக்குள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள். சுரேஷ் சற்று பயந்து போனாலும், இனியாவைப் பற்றி நன்கு அறிந்தவன்.
கிச்சனிலிருந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த லதா ஹாலுக்கு ஓடி வந்தாள். "சொல்ற விதத்துல சொல்லணும்னு சொன்னீங்களே ! இப்ப பாருங்க. நம்ப இனியா ரூமுக்குள்ள போய்ட்டா."!
சுரேஷீம், லதாவும் இனியாவின் அறையைத் தட்ட செல்கையில், கதவைத் திறந்து கொண்டு புன் சிரிப்போடு வெளியே வந்த இனியா, அழகான சுடிதார் அணிந்திருந்தாள்.