
கைராசி என்றால் அதிர்ஷ்டம் அல்லது நல்ல நேரம் என்று பொருள் கொள்ளலாம். ஒருவருடைய கைபட்டால் அந்த செயல் சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையை குறிக்கும். இது ஒரு பொதுவான நம்பிக்கை என்றாலும் சிலர் இதை மூடநம்பிக்கையாகவும் கருதுகின்றார்கள். உண்மையில் இது ஒரு நேர்மறை ஆற்றலாகவும், செயல்களில் ஊக்கமாகவும் பார்க்கப்படுகிறது. சிலர் கைராசியை தொட்டதெல்லாம் துலங்கும் என்று கூறுவார்கள். அதாவது அவர்கள் எதை செய்தாலும் சிறப்பாக நடக்கும் என்பார்கள்.
பேச்சில், சிந்தனையில், செய்கையில் வளமை இருந்தால் தோற்றப்பொலிவும், நேர்மறை அலைகளும் நம்மைச்சுற்றி வியாபிக்கும். இந்த குணம் கொண்டவர்கள் எதைத் தொட்டாலும், எதைச் செய்தாலும் சிறப்பாக முடியும் என்ற அர்த்தத்தில் கைராசி என்பது சொல்லப்படுகிறது.
ஒவ்வொருவருக்கும் ஒரு கைராசி இருக்கிறது. அவர்களின் கைகளால் மண்ணைத் தொட்டாலும் கூட பொன்னாகும் அதாவது எடுத்த காரியம் அற்புதமாக முடியும். இதற்கு ராமாயணத்திலேயே ஒரு சான்று உள்ளது. சிலருக்கு ஒரு ராசி உண்டு அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் அவர்களிடம் இருக்கும் செல்வம் குறையாது. மகாபாரதத்தில் ராஜசூய யாகம் செய்ய வேண்டும் என்று பாண்டவர்கள் நினைத்தார்கள்.
தர்மரை அந்த யாகத்தில் அமரும்படியும், யாகத்திற்கு வருபவர்களை வரவேற்பது, உணவுப் பரிமாறுவது போன்ற பொறுப்புகளை பீமனுக்கும், நிகழ்ச்சிக்கு வருபவர்களை சந்தனம் பன்னீர் கொடுத்து வரவேற்க வேண்டிய பொறுப்பு அர்ஜுனனுக்கும், விருந்தினர்களுக்கு வெற்றிலை பாக்கு தரும் பொறுப்பு நகுல சகாதேவர்களுக்கும் ஸ்ரீகிருஷ்ண பகவான் தந்தார்.
துரியோதனனிடம் யாகத்திற்கு தேவையான பொருட்களை தர்மனுக்கு எடுத்துக்கொடு என்றார். யாகம் தொடங்கியது. யாகப் பொருட்களை குறைத்து யாகத்திற்கு தடை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்த துரியோதனன் யாகப் பொருட்களை மிக வேகமாக அள்ளி அள்ளிக்கொடுத்தான். தருமரும் அந்த யாகப் பொருட்களை யாக குண்டத்தில் போட்டுக் கொண்டே வர யாகம் சுபமாக முடிந்தது.
இதைக் கண்ட துரியோதனனுக்கு ஆச்சரியம். என்ன இது? வேகமாக அள்ளி அள்ளிக் கொடுத்தும் யாகப் பொருட்கள் குறையவில்லையே என்ற குழப்பத்துடன் கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்க துரியோதனா உனக்கு தருமனின் கைராசியைப் பற்றி தெரியாது! தருமன் எது செய்தாலும் அது விருத்தியாகும். நீ யாகத்திற்கு எதாவது தடை செய்வாய் என யோசித்துதான் கைராசிகாரனான தர்மனை யாகத்தில் அமர வைத்தேன் என்று புன்னகையுடன் கூறினார்.
கைராசி என்பது உண்மையல்ல. இது ஒரு மூடநம்பிக்கை. ஒரு செயல் சிறப்பாக நடப்பதற்கு ஒருவருடைய கைராசியோ, அதிர்ஷ்டமோ காரணமல்ல. அந்த செயலில் உள்ள உழைப்பு, திறமை, திட்டமிட்டு செயலாற்றுவது போன்றவையே வெற்றியை நிர்ணயிக்கின்றது என்று கூறப்படுவதும் உண்டு.
ஒரு செயலின் வெற்றி என்பது பல காரணிகளைப் பொறுத்தது. ஒரு செயல் சிறப்பாக நடப்பதற்கு அந்த செயலில் ஈடுபடும் நபருடைய தனிப்பட்ட திறமையும், அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சியும், உழைக்கும் கடின உழைப்பும், சரியான திட்டமிடலும் முக்கிய காரணிகளாகும்.
கைராசி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத ஒன்று. இருந்தாலும் இவை மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. சிலர் ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது பொருளை கைராசியாக கருதுவதற்கு காரணம் அந்த நபருடன் அல்லது அந்தப் பொருளுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் வெற்றி பெற்று இருக்கலாம். இது அவர்களுடைய மனநிலையை மேம்படுத்தி அவர்கள் மேலும் நம்பிக்கையுடன் செயல்பட வழி வகுக்கிறது.
கைராசி, அதிர்ஷ்டம் எல்லாம் ஏன் வேண்டாம்? வேண்டும் தான். நம் கடும் உழைப்போடு ஒரு சின்ன இணைப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்தானே! என்ன நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே!