சிறுகதை; உயிர் உருகும் உறவுகள்!

short stories in tamil
ஓவியம்; ஸ்யாம்
Published on

-நிர்மலாதேவி

"ஹை... கிளிப்பச்சைல அரக்குக் கலர் பார்டர். சூப்பரா இருக்கும்மா இந்தப் பட்டுப் புடைவை..." எனக் கண்கள் பளபளக்க அந்தப் புத்தம் புது காஞ்சிபுரம் பட்டுப் புடைவையைக் கையில் எடுத்தாள் செல்லம்.

"ஏய் வைடி... வை... அடடா... இப்படியா அழுக்குக் கையோட தொடுவ, சே!" என்று ஓடிவந்து எரிச்சலோடு பிடுங்கிய ஜானகியம்மாளுக்கு செல்லத்தின் முகம், கறுத்துச் சுருங்கியதைக் கண்டதும் என்னவே போலாகிவிட்டது.

“மன்னிச்சுக்கோடி... செல்லம்.. புதுப் பட்டுப் புடைவையா? அதுவும் ஆசை ஆசையா எம் மருமகளுக்குன்னு எடுத்தது..." என்றாள் ஜானகியம்மாள்.

"அப்படின்னா.. தம்பி வாராராம்மா?"

"ஆமாண்டி செல்லம்... எல்லோரும் அடுத்த வாரம் வர்றாங்க... நேத்துதான் ராகவன் ஃபோன் பண்ணான்." சந்தோஷத்தில் திணறினாள் ஜானகியம்மாள். அந்த எழுபது வயது முதியவளின் சந்தோஷத்தைக் கண்டதும் செல்லத்துக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

''ம்... அப்ப அடுத்த வாரம் இந்நேரம் நம்ம வீடு களைகட்டிப் போகும்னு சொல்லு...''

''ஆமாண்டி செல்லம்... ஒரு வாரத்துக்குள்ள என் பேரன் பேத்திகளுக்கு அதிரசம், முறுக்கு, லட்டு, சோமாஸுன்னு செஞ்சு அடுக்கிடணும்... புரியுதாடி?"

"ஜோரா செஞ்சிடலாம்மா.. நான் இருக்கும்போது உனக்கென்ன கவல...?"

'பசின்னு கேட்டா சோறு போடு போதும்... நீ சொன்னதைச் செய்யறேன்...' என்று கண்ணீருடன் வாசலில் வந்து நின்றவள்தான் இந்தச் செல்லம். குடிகாரக் கணவனை இழந்து தனிமரமாய் நின்றவளுக்கு, அடைக்கலம் கொடுத்தாள் ஜானகி.

கூட்டுக் குடும்பத்தைத் தனியாளாய் சமாளித்துக்கொண்டிருந்த ஜானகிக்கு மூன்றாவது கையாய் மாறிப் போனாள் செல்லம். நாற்பது வயதை நெருங்கிவிட்டாள். இன்றும் அதே சுறுசுறுப்பும், புன்னகை மாறாத முகத்துடனும் வளைய வருகிறாள்.

மாமியார், மாமனார் மற்றும் கணவர் மறைய... வெளிநாட்டுக்குச் சென்ற ஒரே மகனும் விரும்பியவளைக் கட்டிக்கொண்டு அங்கேயே தங்கிவிட... உறவுகளை எண்ணி ஏங்கி, பாசத்திற்காகப் பரிதவித்து கண்ணீர் விடும்போதெல்லாம்...

"தோ...நானிருக்கேன்.. கவலைப் படாதேம்மா...'' என நாய்க் குட்டியைப்போல் தன் காலையே சுற்றி வரும் செல்லத்தைக் கடிந்துகொண்டு விட்டோமே... ஜானகியம்மாளின் மனம் குறுகுறுத்தது.

"என்னம்மா யோசனை? பத்து வருஷம் கழிச்சு, குடும்பத்தோட மகன் வரப் போறாரு. ஃபோட்டோல பார்த்துப் பார்த்து ரசிச்ச பேரன், பேத்திகள் வந்தப்புறம் ... உனக்கு இந்த உலகமே மறந்துடும்..." என்று சிரித்தாள் செல்லம்.

இதையும் படியுங்கள்:
சாமுத்ரிகா லட்சணம் நிறைந்த பெண்... கொழுத்த மீன் போன்ற கை விரல்கள்... மாவடு போன்ற நீண்டு சிவந்த கண்கள்...
short stories in tamil

'பேசறதுக்கு நேரமில்லை. வா... நிறைய வேலை கிடக்கு. கிளம்பு, கடைக்குப் போகணும். ம்..." என்று உற்சாகத்துடன் எழுந்தாள் வயதையும் மறந்து...

ஜானகி அம்மாள் சொன்ன அத்தனைப் பலகாரங்களையும் சுட்டு அடுக்கிவிட்டாள் செல்லம். புதிய விரிப்புகள், திரைச்சீலை என்று அந்த வீடே மாறிப் போனது.

பேரன் பேத்திகளுக்கு விதவிதமான ஆடைகள், பொம்மைகள் என்று வாங்கிக் குவித்துவிட்டாள் ஜானகியம்மாள். இன்னும் இரண்டே நாள்தான். உறக்கம் வர மறுத்தது. செல்லம், ஜானகியம்மாளின் காலை இதமாகப் பிடித்துக்கொண்டே கேட்டாள்.

"எவ்வளவு பாசம் உம் பிள்ள மேல. ஏன்மா பேரன் பேத்திக வந்ததும் மருந்து, மாத்திரை சாப்பிட மறந்துடாதே... சரியா?" - செல்லத்தின் பேச்சில் இருந்த அக்கறையைக் கண்டு சிரித்தாள் ஜானகியம்மா.

"என் பேரன் பேத்தியோட கையைப் பிடிச்சுக்கிட்டு இந்தத் தெரு முழுசும் சுத்தி வரணும்டி. நம்ம வீட்டுச் சமையலை சாப்பிட்டு என் மருமக, அமெரிக்காவே வேணாம்னு சொல்லணும். எப்படி அசத்தப் போறேன் பாரு. ஏண்டி செல்லம். எம் மருமகளுக்கு இந்தப் பட்டுப் புடைவை நல்லா இருக்கும்ல.."

''சூப்பரா இருக்கும்மா. யாரோட செலக்ஷன்? எங்க அம்மாதில்ல..." என்று பெருமையுடன் கூறிக்கொண்டே இரவு மாத்திரைகளைக் கொடுத்தாள்.

"ஜானகி, நீ தனியா வேற இருக்க... செல்லம் ஒரு நாள் உன்னை அடிச்சுப் போட்டு நகை பணத்தையெல்லாம் சுருட்டிட்டு ஓடப் போறா" என பயமுறுத்திய எந்தச் சொந்தமும் ஜானகியம்மாள் படுத்தப் படுக்கையாய் கிடந்தபோது எட்டிப் பார்க்கவில்லை.

சுயநினைவு இல்லாமல் கிடந்தவளை இரவு, பகல் தூக்கம் இல்லாமல் கவனித்துக்கொண்டவள் செல்லம்தான். ‘இந்தச் செல்லம் மட்டும் இல்லைன்னா இந்தக் கிழவி போய்ச் சேர்ந்து ஒரு வருஷம் ஓடிப் போயிருக்கும்...' என்று தனக்குள் எண்ணிக்கொண்டே மெள்ள உறங்கிப் போனாள் ஜானகியம்மாள்.

ஜானகியின் கனவுகளை மெய்யாக்கும் பொன்னான காலை நேரம் விடிந்துவிட்டது. குறுக்கும் நெடுக்குமாக உலவிக்கொண்டிருந்தாள் ஜானகி.

"அடியே செல்லம், ஆரத்தி எடுத்துட்டு வா" என்று கூவிக்கொண்டே வாசலுக்கு ஓடினாள்.

சற்றுப் பருத்து ஆறடி உயரத்தில் வந்து நின்ற மகனைக் கண்டதும், ஆனந்தத்தில் அழுதே விட்டாள்.

இதையும் படியுங்கள்:
மார்ச் 8 - மகளிர் தினம் - மார்ச் மாதத்தை 'மகளிர் வரலாற்று மாதமாக' அறிவித்தவர் யார் தெரியுமா?
short stories in tamil

"ராகவ்... ராகவன்... எங்க.. எங்கடா பேரன்? எங்கடா என் பேத்தி?" பரபரப்புடன் அவள் விழிகள் தேடின.

"ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் மம்மி... அவங்கெல்லாம் சென்னைல இருக்காங்க" என்றான் ராகவ் நிதானமாக.

"ஏன்.. ஏன்டா ராகவ்... என்னைப் பார்க்க என் மருமக, பேரன், பேத்தி எல்லாம் வருவாங்கன்னு..." அதற்கு மேலே பேச முடியாமல் விம்மினாள் ஜானகியம்மாள்.

"ஐயோ... அம்மா அழாதே. இங்க பாரு.. உனக்கு.. எப்படிப் புரிய வைக்க? இங்க பாரு.. இந்த கிளைமேட்ல என்னாலயே நம்ம வீட்டுக்குள்ள நிக்க முடியலை. அதுங்க அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்ததுங்க, என் வொய்ஃப் ஏ.ஸி. இல்லாம ஒரு நிமிஷம்கூட இருக்க மாட்டா புரிஞ்சுக்கோ... இங்க பாரு... டக்குன்னு கிளம்பு. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கேன். அங்க வந்து கொஞ்சு.. சரியா?"

"அப்படின்னா... நீ... நீ இங்க தங்க மாட்டியா..?"

''கூல் மம்மி... கூல்... சீக்கிரம் கிளம்பு... டூ அவர்ஸ்ல உன் பேரன் பேத்திகளோட விளையாடலாம்..." என்றான் ராகவன் உற்சாகமாக.

"சரி... சரி... இருடா அவசரப்படாதே. செல்லம் அடியே செல்லம். அந்தப் பலகாரங்களையெல்லாம் எடுத்து வண்டில வை. எம் மருமகளுக்கும் பிள்ளைகளுக்கும் வாங்கின துணிகளைப் பெட்டியில அடுக்கி எடுத்துக்கிட்டு கிளம்பு... சீக்கிரம்..." என்று பரபரத்தவளை,-

"நோ மம்மி நோ.. ஏன் டென்ஷன்! என் பிள்ளைகள், இது மாதிரி பலகாரங்களைத் தொடவே தொடாது. என் வொய்ஃப் அல்ட்ரா மாடர்ன்... புடைவையே கட்ட மாட்டா. சொன்னா கேளு.. இங்க பாரு செல்லம், நீ வீட்டைப் பார்த்துக்க...எனக்கு ஏகப்பட்ட ப்ரோகிராம்ஸ் இருக்கு. ப்ளீஸ்மா என் டைமை வேஸ்ட் பண்ணாதே! சீக்கிரம் கிளம்பும்மா..." என்று அவசரப்படுத்திய மகனையே வெறித்தாள்.

''நாளைக்கு வர்றேம்பா! இப்ப நீ கிளம்பு. உனக்கு எவ்வளவோ முக்கிய வேலை இருக்கும்' ராகவனின் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே செல்லும் அம்மாவை விநோதமாகப் பார்த்துவிட்டுக் கிளம்பினான் ராகவன்.

ஜானகியம்மாள் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய்,

"செல்லம், ஒரு ஆட்டோவைப் பிடி. இந்தா இந்தப் பட்டுச் சேலையைக் கட்டிக்கோ. பலகாரங்களை எடுத்துக்கோ. பக்கத்துல உள்ள ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு உன் கையால கொடுத்துட்டு வா..."

"வந்து... நான்... எனக்கா... என்னம்மா..." செல்லத்தின் நாக்கு குழறியது

"ஏண்டி... உனக்குப் புடைவை பிடிச்சிருக்குதுதான?... கட்டிக்கோ..." அதட்டினாள்.

'என் சுகதுக்கத்தைப் பகிர்ந்துக்கொள்ள உரிமையுடன் கோபப்பட, ஆறுதலாய்ப் பேச, பாசத்துடன் பணிவிடை செய்ய., எனக்காகவே வாழற என் செல்லமே.. இந்தக் கிழவியோட தனிமைக்குத் துணையாய், வேதனைக்கு மருந்தாய் எப்போதும் சிரிச்ச முகம் மாறாத நீயும் என் உறவுதான் என்று எண்ணிய ஜானகியம்மாள், ஒரு குழந்தையாய் மாறி செல்லத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் ஏப்ரல் 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com