சிறுகதை - மங்கம்மாவின் தேர்தல்!

சிறுகதை - மங்கம்மாவின் தேர்தல்!
Tamil short stories
Tamil short stories

பர்ணா ஐஏஎஸ் என்றால் அந்தப் பகுதியில் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஏனெனில், மற்ற ஐஏஎஸ் அதிகாரிகளைப் போல இல்லை அபர்ணா. மிகவும் எளிமையானவள். யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் உதவி கோரி அபர்ணா வீட்டுக் கதவை தட்டலாம். அரசாங்க அதிகாரியாக, நேர்மையாக பணியாற்றுவதில் அபர்ணாவிற்கு நிகர் யாருமில்லை எனலாம். இவள் தேர்தல் அலுவலராகவும் நியமிக்கப்பட்டதால் நகரம் முழுவதும் சுற்றி பணப்பட்டுவாடா, பணப் பறிமுதல் போன்றவற்றை நேரம் காலமின்றி கண்காணித்தாள்.

சொந்தக்காரரே என்றாலும் பிடிபட்டுவிட்டால்  அபர்ணாவிடம் தயவு தாட்சண்யம் இருக்காது. அவ்வளவு ஏன்? அவள் கணவராக இருந்தாலுமே இதே நிலைதான். எத்தனை அனுபவங்கள்? ‘ஏன்தான் இந்த மக்கள் ஆட்டு மந்தை போல பணம் இருக்கும் அரசியல்வாதிகளிடம் சரணடைகிறார்களோ’ என்று எண்ணி மனம் பொருமும்.

மதிய உணவுக்காக வீட்டுக்குள் நுழைந்த அபர்ணா, "உஸ்" என்று அமர்ந்தாள். வெயில் என்னமா கொளுத்துகிறது?

அப்போது  வீட்டுப் பணிப்பெண் மங்கம்மா பரபரவென்று உள்ளே நுழைந்தாள். "அம்மா, மன்னிச்சுக்கோங்க... இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..." என்றாள்.

"அது சரி, உங்களுக்கும் ஏதாவது அவசர வேலை இருக்கும் இல்லையா? இதுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு. போய் வேலையை பாருங்க மங்கம்மா..." என்றாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை - இதயத்தை வென்றவன்!
சிறுகதை - மங்கம்மாவின் தேர்தல்!

"அது இல்லம்மா, நாளைக்குத் தேர்தல் இல்லையா? யாருக்கும் தெரியாம ஓட்டுக்கு பணம் கொடுக்குறாங்கன்னு நியூஸ் வந்துச்சு. என்னோட புருஷன் அந்தப் பணத்தை வாங்கியே ஆகணும்னு நிக்குது. நானும் எவ்வளவோ போராடிப் பார்த்தேன். நம்ம ஓட்டு விக்கிறதுக்காம்மா? கை நீட்டி பணத்தை வாங்கிட்டா மனசாட்சிக்கு தவறாமல் ஓட்டு போடணுமே. நமக்கு எதுக்கு அந்தப் பொழப்பு? நீங்களே சொல்லுங்கம்மா நான் சொல்றது சரிதானே?" என்றாள்.

"ஆமா, ரொம்ப சரி மங்கம்மா" என்றாள் அபர்ணா.

"ஆனா, என் புருஷன் என்ன சொல்லுதார் தெரியுமாம்மா? ‘அவன் என்ன, அவனோட வீட்டு பணத்தையா தூக்கிக் குடுக்குறான். நாம கட்டற வரியைத்தானே இப்படி எல்லாம் அரசியல்வாதிங்க தராங்க. இத ஏன் நாம வாங்கக்கூடாது’ அப்படின்னு சொல்றாரு. நான் கறாரா சொல்லிப்புட்டேன். காச வாங்கிட்டு நம்ம உரிமையை விட்டுத்தரது கேவலம்னு. கரெக்ட்தானேம்மா?"

அபர்ணாவினால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை. மங்கம்மாவின் நிலை அவளுக்குத் தெரியும். 100 ரூபாய் என்றாலும் அது மங்கம்மாவைப் பொறுத்தவரை பெரிய தொகைதான். அவளின் நேர்மை அபர்ணாவை அதிசயப்படச் செய்தது. இன்னும் இந்த நாடு ஜனநாயகத்தோடு இருப்பதற்கு மங்கம்மா போன்றவர்களே காரணம் என்பதை கலெக்டர் அபர்ணா உணர்ந்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com