மோட்டிவேஷன் இரண்டு வகை. உள்ளிருந்து வருவது ஒன்று. வெளியிலிருந்து கிடைப்பது மற்றொன்று. நமக்குள்ளிருந்து வரும் உந்துதலே நீடித்த ஆயுளை உடையது என்றாலும் அவ்வப்போது வெளியிலிருந்தும் நமக்கு மோட்டிவேஷன் தேவைப்படுகிறது தான் இல்லையா..
சக மனிதர்கள் சென்றுகாட்டியிருக்கும் வெற்றிப்பயணங்கள் நிச்சயமாக நமக்கு ஊக்கமளிக்க வல்லவை. அப்படியான ஒரு பெண்மணியின் வெற்றிப்பயணம் தான் இது.
1988 ல் ஆஃப்கனிஸ்தான் எறாத் பகுதியில் பிறந்தவர் நதியா நதீம். இவருக்கு 12 வயதிருக்கும்போது ஆஃப்கனின் தேசிய இராணுவ தளபதியாக இருந்த இவரது தந்தையை தலிபன்கள் தூக்கிலிட்டனர். இவரும் இவரது தாயாரும் ஒரு சரக்கு லாரியின் பின்னால் ஒளிந்துகொண்டு தப்பிச்சென்று டென்மார்க்கில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர்.
அதன் பின்னர் நதியா நதிம் டென்மார்க்கில் தன் கல்வியைத் தொடர்ந்திருக்கிறார். கடின உழைப்பால் டென்மார்க் தேசிய கால்பந்து அணியில் முன்கள வீராங்கனையாக உயர்ந்திருக்கிறார்.
கால்பந்தோடு நில்லாமல் இவர் ஒரு உதவி அறுவைசிகிச்சை நிபுணர் என்று அறியும் போது புருவங்கள் உயர்வதைத் தவிர்க்க முடியவில்லை. கால்பந்தினைத் துரத்தியதோடு ஆருஹஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று 'அறுவை சிகிச்சை நிபுணராகவேண்டும்' என்ற தன் சிறுவயது கனவையும் விட்டுவிடாமல் துரத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் நதியா.
ஒன்பது மொழிகள் கற்றிருக்கும் இவர் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 'சர்வதேச விளையாட்டுக்களில் சக்திவாய்ந்த பெண்கள்' பட்டியலில் இருபதாம் இடத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காகவும் சர்வதேச அளவில் சிறுமிகள் மற்றும் பெண்களின் கல்விக்காக வாதிடுவதில் இவரது பங்களிப்புக்காகவும் யூனெஸ்கோ இவரைத் தன் 'சிறுமிகள் மற்றும் பெண்கள் கல்வி' பிரிவுக்கான அம்பாஸிடராக அறிவித்துள்ளது.
சாதனைப் பெண்மணியான இவரது சுயசரிதையை டென்மார்க் வெளியீட்டு நிறுவனம் புத்தகமாய் வெளியிட்டு பெருமைப்பட்டுக்கொண்டுள்ளது. இப்புத்தகம் பிரென்ச் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய்நாட்டையும் துறந்து அகதியாய்த் தன் வாழ்வினைத் துவங்கி இன்று கால்பந்திலும் கல்வியிலும் தன்னைத் தானே முன்னேற்றி கொண்டு உயரத்தை அடைந்திருக்கும் நதியா நதிம், சிறு சறுக்கல்களுக்கெல்லாம் துவண்டுபோய் முயற்சியை விட்டுவிட நினைக்கும் பெண்களுக்கு ஒரு தூண்டுகோலாய் நிச்சயமாக இருப்பார்.