சிறுகதை - சருகும்… சண்முகமும்!

ஒவியம்; தமிழ்
ஒவியம்; தமிழ்
Published on

- ரெ. ஆத்மநாதன்,

  ஜூரிக், சுவிட்சர்லாந்து

ஊரிலிருந்து ரொம்ப தூரம் தள்ளித்தான் சண்முகத்தின் நிலம்.  அந்த ரெண்டு ஏக்கர் நிலத்தை மனைவியுடன் சேர்ந்து அவர் சோலையாக்கி,  ஊரையே திகைக்க வைத்திருந்தார்!

சில நாட்களில் காலையின் பழைய சோற்றை வீட்டிலேயே சாப்பிட்டு விடுவார்கள்! பல நாட்களில் அதையும் ஒரு கூடையில் வைத்து தலைச் சுமையாக வயலுக்குக் கொண்டுவந்து வைத்துவிட்டு,  வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். 

சுறாக் கருவாட்டுக் குழம்பு முதல் நாளென்றால்,  அடுத்த நாள் அதன் சுண்டக் குழம்பைச் சுடவைத்து பேஸ்ட் பதத்தில் பழைய சாதத்துடன் சாப்பிடுவதில் அவருக்கு அலாதி சுகம்!

வள்ளிக்கு அவரின் குண நலன்கள் அத்தனையும் அத்துபடி! அவருக்குப் பிடித்த குழம்புகள் முதல் நாள் வைத்தால்,  அன்றைக்கு அரிசியையும் கொஞ்சம் அதிகமாகவே போட்டு,  பழையதுக்குப் பஞ்சமில்லாமல் செய்து விடுவார்.  ஏனெனில் சுண்டக் குழம்பின் சுவையில் அவர் அதிகமாகச் சாப்பிடுவார் என்பது வள்ளிக்குத் தெரியாததா என்ன?

நிலத்தைச் சுற்றிலும் தென்னை மரங்கள்.  வடகிழக்கு ஓரமாக சிறிய களம்.  அதன் ஓரத்தில் அரசும்,  வேம்பும்.  பக்கத்திலேயே கிணறு. ஊரார் கிணறுகள் வற்றியபோதும்  அவர்கள் கிணறு மட்டும் ஒருபோதும் வற்றியதே இல்லை. அவர்கள் வற்றவிடவில்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

சண்முகம் அந்தக் காலத்து எஸ். எஸ். எல். சி. , தான் என்றாலும் பொது அறிவிலும், தன் கல்வித் தகுதியைத் தானாகவே பெருக்கிக்கொள்வதிலும் அவருக்கு இயற்கையான ஆர்வம். நியாயமும்,  தர்மமும் தன் செயல்களில் எப்பொழுதும் இருக்கவேண்டும் என்ற பிடிவாதம், சிறு வயதிலேயே அவருடன் வந்து ஒட்டிக்கொண்டது. அது அவரைப் பிடித்துக்கொண்டதா அல்லது அதை அவர் உடும்புப் பிடியாக்கிக்கொண்டாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால், ஊரில் பகையில்லாமல் வாழ்வதற்கு, இந்தப் பிறவி முழுவதற்கும் அந்த உடும்புப் பிடிதான் கை கொடுத்தது. சண்முகத்தைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவரே என்று வாழ்ந்ததால் ஊரார் அனைவரும் அவரை நல்லவராகக் கொண்டாடினர்!

சின்ன வயதிலேயே கணவனைப் பறிகொடுத்து விட்டுத் தன் ஒற்றை மகளே உலகமென்று வாழ்ந்த பாட்டி, சண்முகம் பிறந்தபோது அந்த மகளையும் பறி கொடுத்ததுதான் சோகத்திலும் சோகம்!’ தாயை விழுங்கிய தறுதலை போகுது பாரு!’ என்று அவன் சிறுவயதில் அவன் உறவினர்களே அவன் காதுபடப் பேசும் அவலத்தை அவனும் சுமக்க வேண்டியதாயிற்று! சில வருடங்களிலேயே தந்தையும் இறந்துவிட பாட்டியும் அவனும் வாழ்க்கையைத் தொடர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.

தாயில்லாத குறை தெரியாமல்தான் பாட்டி அவனை வளர்த்தாள்.

பாட்டியின் கைப்பக்குவத்தில்,  அவள் சமைத்த உணவுகள் அமிர்தமாய் அவனுக்குத் தோன்றும்.  அதிலும் கருவாட்டுக் குழம்பு பாட்டி வைத்தால்… நோ சான்ஸ்… பாட்டியை யாராலும் அடித்துக்கொள்ளவே முடியாது. அதன் காரணமாகவே அவன் கருவாட்டுக் குழம்பு பைத்தியமானான்!

தற்குத் தகுந்தாற்போல அவன் மனைவி வள்ளியும் வந்தமைந்தாள். அவர்கள் காதல் தோன்றியதே அந்தக் கருவாட்டினால்தான். வள்ளியின் தாயும் சிறு வயதிலேயே கணவனைப் பறி கொடுத்துவிட்டு, ஒற்றைப் பெண் வள்ளியுடன் வாழ்ந்து வந்தாள்! ஊர், ஊராய்ச் சென்று கருவாடு விற்பதுதான் அவள் தொழில். அந்தச் சொற்ப வருமானத்தில்தான் அவர்கள் இருவரின் வாழ்க்கை!

‘பாம்பின் கால் பாம்பறியும்’என்பதைப்போல, தன் பாட்டியின் வாழ்க்கையை அவள் வாழ்க்கையும் ஒத்திருந்ததால் அவர்களுக்குள் இயற்கையாகவே ஓர் ஒட்டுதல் வந்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் நழுவ விடாதீர்கள்!
ஒவியம்; தமிழ்

சில சமயங்களில் வள்ளியையும் அவள் கூடவே அழைத்து வருவாள். அப்படி ஒரு நாள் அழைத்து வந்தபோது, மாலை சரியான மழை பிடித்துக்கொள்ள முன்னிருட்டில் மகளுடன் தனியாகச் செல்ல வேண்டாமென்று அவர்களைத் தடுத்த பாட்டி, அங்கேயே தங்கச் சொல்லி விட்டாள். அதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்பட்டு விட, அடிக்கடி தாயும், மகளும் அங்கு தங்க ஆரம்பித்தார்கள்.

சண்முகமும் வள்ளியும் பருவ வயதில் இருந்ததால் இருவரின் பார்வைகளும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதை அவர்கள் உணர்ந்தாலும், தவிர்க்க முடியவில்லை. தவிர்க்கவும் விரும்பவில்லை என்பதே நிதர்சனம்!

அன்றைக்கும் அப்படி வள்ளியும் அவள் தாயும் பாட்டியிடம் விடை பெற்றுக் கொண்டிருந்தபோதுதான், பாட்டி எதிர்பாராத விதமாகச் சரிந்து விழுந்துவிட,

அவர்கள் பெரிதாகச் சத்தமிட, வைக்கோல் போரில் மாட்டைக் கட்டிக் கொண்டிருந்த சண்முகம் அப்படியே விட்டு விட்டு ஓடி வர, நொடியில் பாட்டி உலகிலிருந்து விடை பெற்றுக்கொண்டாள். சண்முகத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனுடைய உலகமே அவன் பாட்டிதான்! அவள் போய் விட்டாள் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை அவனால்! அவன் புலம்பலைக் கேட்டு வள்ளியும் அவள் தாயும் விக்கித்துப் போயினர்.

உறவினர், ஊரார் கூடி பாட்டியின் ஈமச்சடங்குகளைச் செய்து முடிக்க, அவனைத் தனியாக விட்டுச் செல்ல வள்ளிக்கும் அவள் தாய்க்கும் மனம் வரவில்லை.

எதையும் வெளிப்படையாகப் பேசும் அவள் தாய் சண்முகத்திடம் நேரடியாகவே கேட்டு விட்டாள்.  ”தம்பி ஒங்களுக்கும் பெரிசா உறவுன்னு சொல்லிக்கிட நெருக்கமா யாருமில்ல… எங்களுக்கும் அதே நிலைதான். கல்யாண வயசில இருக்கற வள்ளியை இங்க அப்படியே வெச்சுக்கிட்டுத் தங்கறதும் முறையில்ல. ஒங்களுக்குப் பிடிச்சிருந்தா சொல்லுங்க. வள்ளியை ஒங்களுக்குக் கட்டி வெச்சிடறேன். பாட்டியோட காரியமெல்லாம் முடிஞ்சதும், நம்ம அங்காளம்மன் கோயில்ல வெச்சி அவ கழுத்துல தாலியைக் கட்டிடுங்க! ” என்க, அப்படியே நடந்தது அவர்கள் திருமணம்!

னமொத்த தம்பதியாகி இருவரும் சேர்ந்து அந்த நிலத்தைப் பண்படுத்த ஆரம்பித்தார்கள்.

 நடுவில் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தாள் வள்ளி! இருவரையும் எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்து ஆளாக்கி நகரங்களுக்கு அனுப்பினார்கள். நகர வாழ்க்கைக்கு அடிமையாகிப் போன அவர்களுக்கு,  அங்கேயே திருமணத்தையும் முடித்துக் குடும்பங்களாக்கி விட்டார்கள்.

ஆண்டிற்கொரு முறை ஊருக்கு வந்துகொண்டிருந்த அவர்கள், இரண்டொரு வருடங்களாக வரவில்லை. அப்புறம் திடீரென ஒரு முறை வந்து நின்றார்கள். சரியான தொடர்பும் இன்றி அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக்கொள்ள, அதுவே நலமென்று சண்முகமும் ஒதுங்கிக்கொண்டார். ஆனால் வள்ளியால் அப்படி அவரைப் போல் இருக்க முடியவில்லை.

தங்கள் மகன், மருமகள்களைக் காணாமலும், பேரன், பேத்திகளைக் கொஞ்ச முடியாமலும் அவள் தனக்குள்ளாகவே குமைய ஆரம்பித்தாள்! அந்த வேதனையைத் தன் கணவனுடன் கூடப் பகிர்ந்துகொள்ள முடியாத துர்ப்பாக்கியசாலி ஆகி விட்டாள்!  மன வேதனை உடலைச் சோர்வாக்கி அதனை மெல்லக் கரைக்க வாரம்பித்தது.  அதுவே அவள் ஆரோக்கியத்திற்குக் குந்தகமாகி அவளை நோயாளி ஆக்கி விட்டது. மெல்ல, மெல்ல நலிவடைந்த அவள் நடைப் பிணமானாள்!

அன்று வெள்ளிக் கிழமை! காலையிலேயே டவுனுக்குச் சென்ற சண்முகம், வெள்ளிச் சந்தையில் பிடித்தமான கருவாடுகளையும் வாங்கிக்கொண்டு மாலையில்தான் வீடு திரும்பினார். களைத்துப் போய் வந்த கணவருக்கு நீரைக் கொடுத்த அவள், அவர் காலடியிலேயே மயங்கி விழ, எல்லாம் முடிந்து போயிற்று!

சண்முகம் தனி மரமானார்! நாளுக்கு நாள் வள்ளியின் நினைவு அவரை வாட்டி எடுத்தது. இருவரும் வாழ்ந்த வீட்டில், வயதான காலத்தில் தனிமையாக வாழ்வது கொடுமைதானே! வள்ளியுடன் சேர்ந்து வைத்த மரங்கள், வளர்ந்து விருட்சங்களாகி விட்டன. அவை, அவளின் நினைவுகளைப் பசுமையாக்கி அவரை மேலும் நோகடித்தன.

ன்று! எதார்த்தமாக எதையோ தேடியபோது, வெள்ளிச் சந்தையில் வாங்கி வந்த சுறாக் கருவாடு,  பையில் சுருட்டப்பட்டபடி ஓரமாகக் கிடந்தது. சமையலில் அவர் கில்லாடிதான் என்றாலும், இப்போதெல்லாம் அவருக்கு அதில் நாட்டமே செல்வதில்லை!

இரவில் வள்ளி தோன்றி, ’தனியா ஏங்க சங்கடப் படறீங்க… வந்திடுங்களேன் என்கிட்ட…’ என்று அடிக்கடி கூப்பிடுவதுபோல உணர்ந்தார்.

காலையிலிருந்தே பித்துப் பிடித்தவர்போல வீட்டில் அமர்ந்திருந்த அவர், ஒரு முடிவுக்கு வந்தவராய் தன் நிலத்தை நோக்கி நடந்தார்.

 நிலத்தை அடைந்ததும், அங்கு வைத்திருந்த ஒரு கயிற்றை எடுத்துப் போய் அவரும் வள்ளியும் வைத்து வளர்த்த அரசு மற்றும் வேம்பு மரங்களுக்கு அருகில் நின்றார்.

‘அரச மரம் ஆணைப்போல… கம்பீரமானது… நிமிர்ந்து வளர்வது… வேம்புதாங்க இப்ப பெண்…’ என்று அவை வளர்ந்து வரும்போது தண்ணீரை ஊற்றியபடி வள்ளி சொன்னது அவருக்கு அப்பொழுதும் கேட்டது.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தைக்கு பல் சொத்தை பிரச்சினையா? தவிர்க்க சுலபமான 10 வழிகள் இதோ...
ஒவியம்; தமிழ்

‘அப்ப வேம்புதான் வள்ளி…’என்று மனதுக்குள் சொல்லியபடி, சற்றே உயர்ந்திருந்த வேம்பின் கிளையில் கயிற்றைப் போட்டு,  சுருக்கையும் போட்டு, அது சரியாகச் செயல்படுகிறதா என்றும் சோதித்துப் பார்த்து, ’இரு வள்ளி! நாம சேர்ந்து வெட்டின கிணற்றுத் தண்ணியைக் கடைசியாக் கொஞ்சம் குடிச்சிட்டு வந்திடறேன்! ’என்றபடி கிணற்றை நெருங்கினார்.

அரசமரத்திலிருந்து பழுத்துக் காய்ந்த சருகு ஒன்று கிணற்றில் விழுந்தது.

 “ம்!  நாமளும் இந்தச் சருகு மாதிரி யாருக்கும் பயன்படாமல் போகிறோமே!’ என்று எண்ணிய அவர், ’ம்! சருகாவது உரமாகும்! நாம!“ என்று நினைத்தபடியே, வாளியைக் கீழேயிருந்து எடுத்தார். விழுந்த அரச இலைக்குப் பக்கத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த எறும்பொன்று அந்த இலையில் ஏற… அதனைக் கூர்ந்து பார்த்த சண்முகம், பழுத்து விழுந்த சருகாலேயே பரிதவிக்கும் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியுமென்றால்… ஆறறிவு படைத்த நம்மால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியுமே!

சருகால் முடியும் ஒன்று சண்முகத்தால் முடியாதா என்ன?அவருள்ளே ஒரு பிரளயம் தோன்றி அடங்கியது!

சுருக்குப் போட்ட கயிற்றை அறுத்து மூலையில் எறிந்தார்!

அடுத்த நாள்!

சாலையோர அவர் நிலத்தின் முகப்பில் ‘சண்முகம் அனாதை இல்லம்’ என்ற  பெயர்ப்பலகை கம்பீரமாகத் தொங்கியது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com