சிறுகதை - மௌன சாமியார்!

short story...
short story...

வீடு ரெண்டுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆளாளுக்கொரு அபிப்ராயம், கோபம், தாபம், எரிச்சல் என்று. பெரிய விவாதம்தான். எல்லோருடைய குரலும் உச்சஸ்தாயியில் கேட்டது. போன வாரம் கௌசல்யாவின் அண்ணன் புருஷோத்தமன் ஊரிலிருந்து அலுவல வேலையாக சென்னைக்கு வந்திருந்தார்.

அவர் தன் தங்கையிடம், "என்ன கௌசி! கலாவுக்கு 25 வயசாவுதே! வரன் பார்க்க ஆரம்பிக்க வேணாமா?" என்று கேட்கப்போக, கலாவின் கல்யாணத்தைப் பற்றி வீட்டில் பேச்சு ஆரம்பித்தது. நல்ல வரனாகக் கிடைத்தால் அவளுக்குப் பண்ணிவிட்டால் பிறகு அவள் அண்ணன் ரவிக்கும் பெண் பார்க்க ஆரம்பிக்கலாம் என்று கௌசல்யாவும் அவள் அண்ணனும் பேச, கௌசல்யாவின் கணவர் தாமோதரனும் புன்சிரிப்போடு அதை ஆமோதித்துக்கொண்டிருந்தார்.

"அவள் ஜாதகம் என்கிட்ட ஒரு காப்பி கொடு. நானும் மதுரையில ஏதாவது நல்ல வரன் இருந்தால் சொல்றேன்!" என்று விடைபெற்று சென்றார் புருஷோத்தமன்.

ன்று ஞாயிறு விடுமுறை நாள். வீட்டில் எல்லோரும் மெதுவாக எழுந்திருந்து அவரவர்கள் காரியத்தைப் பார்க்க ஆரம்பித்தார்கள். கௌசல்யா ஒவ்வொருவருக்காக காப்பி கலந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.  

காப்பிக் குடித்துக்கொண்டிருந்த கலா தயங்கித் தயங்கி தான் யாரையோ காதலிப்பதாகக் கூற வீட்டில் பூகம்பம் வெடித்தது. கோப வெள்ளம் சுனாமி அலைபோல எழுந்து பொங்க ஆரம்பித்தது. கௌசல்யாவும், ரவியும் கோபத்தில் கத்திக்கொண்டிருக்க, கலாவின் தம்பி சேகர் அப்போது தான் எழுந்து பல் தேய்த்துக்கொண்டிருந்தவன் ஒன்றும் புரியாமல் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தான்.

அவர்களை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்த கலாவின் அப்பா, தான் உட்கார்ந்திருக்கும் ஈஸி சேரை விட்டு எழுந்திருக்காமல், அவர்களுடைய விவாதத்திலும் கலந்துகொள்ளாமல் அப்படியே கையில் செய்தித்தாளுடன் உட்கார்ந்திருந்தார்.

"வீட்டில இவ்வளவு ரகளை நடக்குது. எப்படி உட்கார்ந்திருக்காரு பாரு, உங்க அப்பா! சரியான மௌன சாமியார்!" என்றாள் கௌசல்யா ஆத்திரத்துடன்.

"பேசாம கவுண்டமணி படத்தில வருமே அதுபோல பக்கத்தில் தட்டுல வேணா மிக்ஸர் வைத்துவிடலாமா அம்மா?" என்றான் ரவி கேலியாகவும் கோபமாகவும்.

பின்னே? வீடு ரகளையில் ரெண்டு பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்றுமே நடக்காததுபோல ஒருவர் அதே இடத்திலேயே அமர்ந்துகொண்டிருந்தால், மற்றவர்களுக்கு ரத்தக் கொதிப்பு ஏறாதா?

"எத்தனை நாளா நடக்குறதடீ இந்த விஷயம்? நாங்க கல்யாணம் பண்ணலாமான்னு கேட்டால்தான் சொல்லணும்னு காத்துக்கிட்டிருந்தியா? வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு எவனோ ஒரு காலிப்பயலோட தினமும் ஊர் சுத்திக்கிட்டிருந்தியா?" ரவி தலைகால் புரியாத கோபத்தில் எகிறினான்.

லாவுக்கு தன் எதிர்பார்ப்பிற்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்று தெரிந்ததும் எங்கே தன் காதல் நிறைவேறாமல் போய்விடுமோ என்னும் பயத்தில் ஒரு பக்க அழுகை, ஒரு பக்கம் ஆத்திரம்! அவளும் கோபத்தில் வாய்க்கு வந்தபடி தன் அண்ணனை எதிர்த்துப் பேச ஆரம்பித்தாள்.

காதல் கல்யாணமெல்லாம் தங்கள் குடும்பத்தில் பழக்கமேயில்லை என்று வாதித்தார்கள். கலா கோபமாக இவர்கள் அபிப்ராயங்களை மறுத்து பேசி, தான் நேசிக்கும் சுரேஷ் எவ்வளவு நல்லவன் என்றும், இவர்கள் தனக்கு ஜாதகப்பொருத்தம் பார்த்து பார்க்கும் வரனைவிட இவன்தான் சரியான துணைவனாக இருப்பான் என்றும் தன் பக்க நியாயத்தை எடுத்து வாதாடிக்கொண்டிருந்தாள்.

அப்போது சேகர் ரவியிடம், "அண்ணா! நீயும் அம்மாவும் கோபப்படுவது நியாயந்தான். ஆனா, வாழப்போறதென்னவோ கலாதான். அதனால அவ பக்க நியாயத்தையும் நாம கொஞ்சம் கேக்கத்தான் வேணும்னு நெனைக்கிறேன்!" என்றான்.

இதையும் படியுங்கள்:
அனைத்திற்கும் நீங்கள்தான் காரணம்; நீங்கள் மட்டுமே காரணம்!
short story...

கடைசியாக எல்லோரும் ஒரு நிதானத்திற்கு வர, சற்று நேரம் மௌனம் நிலவியது அந்த இடத்தில். கலா காதலிப்பதாக சொல்லும் சுரேஷை வீட்டுக்கு வரவழைத்து அவனிடம் பேசிப் பார்த்து, அவனைப் பற்றி, அவன் குடும்பத்தைப் பற்றி எல்லாம் தீர விசாரித்து பிறகு ஒரு முடிவு எடுக்கலாம் என்று சேகர் சொன்ன ஐடியா ஏற்கப்பட்டு, அப்படியே தீர்மானம் ஆனது. அதுவரை கலா அலுவலகத்திற்குப் போய்விட்டு நேரே வீட்டுக்கு வரவேண்டும் என்றும் தேவையில்லாமல் சுரேஷை பார்க்கப் போகக்கூடாது என்றும் கண்டிஷன்கள் போடப்பட்டன. ஒருவழியாக விவாதம் ஒரு முடிவுக்கு வர, எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போனார்கள்.

இப்பேர்ப்பட்ட அனல் பறக்கும் விவாதத்தின்போது தன் கணவர் ஒன்றும் பேசாமல் மௌனம் சாதித்தது கௌசல்யாவுக்கு கட்டுக்கடங்காத கோபம்! அவள் கையில் காப்பி தம்ளருடன் கணவர் அருகே வந்தாள்.

"ஏங்க? இத்தன நேரமா நாங்க எல்லோரும் மண்டையை ஒடச்சிக்கிட்டு கத்திக்கிட்டு இருக்கோம்? நீங்க அப்படியே உக்கார்ந்திருக்கீங்களே? ஒங்க பொண்ணு கல்யாணத்தில உங்களுக்கு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா?" என்றாள் கோபமாக.

அவர் சாந்தமாக அவளை ஏறிட்டார்.

"குடும்பத்தில் இந்த மாதிரி விவாதங்களின்போது ஆளாளுக்கு ஒரு அபிப்ராயத்துடன் எல்லோரும் கோபமாக பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் பேசாமல் மௌனம் சாதிப்பதும் நல்லதுதானே? நானும் இதில் தலையிட்டுப் பேசி என் அபிப்ராயத்தைச் சொல்லி குழப்பாமல் இருந்ததால்தானே நீங்கள் இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கிறீர்கள்? இல்லையா?" என்றார்.

‘பல சமயங்களில் மெளனம்’ நல்ல முடிவுகளை எடுக்க பெரிதும் உதவும் என்ற அவருடைய நியாயமான வார்த்தைகளுக்கு கௌசல்யாவால் பதிலளிக்க முடியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com