சொல்ல மறந்த கதை!

Lifestyle Story!
Short Story
Published on

சந்திற்கு, வயதாக ஆக ஒன்றும் முடியவில்லை. என்னடா இந்த வாழ்க்கை என நினைக்காத நாளில்லை. எப்படியெல்லாம் வாழ ஆசைப்பட்டேன் என நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. 

இருபது வயது வரை தாயின் பாசத்தில் இந்தியாவில் வளர்ந்து, சொர்க்கம் என்றால் அது அமெரிக்காதான் என்ற மாயையை மனதில் நிறுத்தி, மேற்படிப்பு, வேலை என எதுவாக இருந்தாலும் அங்கேயேதான் என முடிவெடுத்து இதோ இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விட்டன. மேற்படிப்பிற்கு அமெரிக்கா வந்த முதல் தினம், வாழும்வரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என சபதமெடுத்து, பின் கல்லூரியிலேயே ஒரு இந்திய பெண்ணை விரும்பி, பெற்றோர் சம்மதத்துடன் அவளை மணம் முடித்து... என எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது. உத்யோகம், திருமண வாழ்க்கை, மேற்கத்திய கலாச்சாரம்... ஆரம்பத்தில் எல்லாம் இனிக்கவே செய்தன... அம்மாவின் நினைவுகள் கொஞ்சம் விலகிச்சென்றன. 

மனைவி அவள் தாயுடன் சேர்ந்தே இவனுடன் வாழ ஆரம்பித்தாள். முதலில் ஒன்றும் பெரிதாகத் தோன்றாவிட்டாலும், போக போக இவனின் இந்திய ஆண் மனம், மனைவி அவள் தாயை கவனித்துக் கொள்வதும், அவளுக்கு செலவழிப்பதும் அவ்வளவாக ஏற்கவில்லை. அவளும் மெத்தப் படித்தவள்தான். சம உரிமை பேசிய நேரங்களில், இவனும் ஆதிக்கம் செலுத்தினான். விளைவு சில வருடங்களிலேயே விவாகரத்து.

ஆனால் இருவரின் கையில் அழகான பெண் குழந்தை. இவனுக்கு குழந்தையின் மேல் பிரியம் அதிகம். வழக்கில் விவாகரத்து கிடைத்தாலும், குழந்தை இவனிடம் வாரத்தில் ஐந்து நாட்களும், தாயிடம் இரண்டு நாட்களும் வளர வேண்டும் எனத் தீர்ப்பானது. இவனுக்கு அதில் மகிழ்ச்சிதான். அக்கறையாக வளர்த்தான்.  மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்டாள். அவளுக்கு இந்த முறை ஆண்குழந்தை பிறந்திருந்தது. இவனின் மகள் அதன் தாயிடம் வார இறுதியில் சென்று வந்து திரும்பும் பொழுதுகளில், தன் தம்பியைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பாள்.  

இதையும் படியுங்கள்:
கோலத்தின் பாரம்பரியமும், ஆரோக்கிய சிறப்பும்!
Lifestyle Story!

முதலில் குழந்தையை வளர்ப்பது சுலபமாக தோன்றினாலும், பெண் குழந்தை வளர வளர, இவனின் அலுவலக சுமையும் அதிகரிக்க, வீட்டில் ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அவனின் அம்மாவுக்கு உடல்நிலைக் காரணமாக அவனுடன் அமெரிக்கவாசம் சரிபடவில்லை. அவன் தந்தையோ, குழந்தையை வளர்க்கும் பொறுப்பில் இருந்து விலகிக்கொள் என அறிவுரைக் கூறினார். 

"டேய்..நீ இருப்பது மேற்கத்திய நாடு. வேறு கலாச்சாரம். அங்கு நீ எவ்வளவு கஷ்டப்பட்டு குழந்தையை வளர்த்தாலும், பதினெட்டு வயதில் அது உன்னை விட்டு பறந்துடும். அதற்காக ஏன் இவ்ளோ நீ அலட்டிக்கற. அந்தக் குழந்த அதோட அம்மாகிட்டயே விட்டுடு. பேசாம நீ இந்தியா வந்துடு" என ஏதேதோ பேசினார்.

இவனுக்கு அது ஏற்புடையதாக இல்லை. தன் பெண் குழந்தையை தானே வளர்ப்பேன் என சபதமெடுத்தான். சில நேரங்களில் அது மிகவும் சிரமமாக இருந்தது அவனுக்கு. தாயின் வற்புறத்தலில், மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். அவளுக்கும் ஏதோ ஒரு பிரச்னையால் முன்பே விவாகரத்து ஆகியிருந்தது. அவள் நல்ல பணக்காரி. அவள் இவனை எதற்காக திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாள் எனத் தெரியவில்லை. இவன் குழந்தையிடம் அவ்வளவு பாசமாக நடந்து கொள்ளவில்லை. கொடுமைக்காரி இல்லை எனினும், 'இந்தக் குழந்தை எப்படியும் ஒரு நாள் பிரிந்து சென்றுவிடப் போகிறது; பாசமோ, மெனக்கெடல்களோத் தேவையில்லை' என்பது அவள் எண்ணம்.

அவளுக்கு கணவனைப் பற்றிய எதிர்பார்ப்புகள் வேறு. இவன் தேவையோ, குழந்தையையும் வீட்டையும் பார்த்துக் கொள்ள ஒரு பெண். முடிவு இருவருக்கும் இந்தத் திருமண பந்தம் ஏமாற்றமே. பிரியவில்லை எனினும், ஊருக்காக ஒரு உறவு.... அவ்வளவுதான். அவளிடம் பணம் எக்கச்சக்கம். வெளியில் சென்றோமா, பொருட்கள் வாங்கினோமா, என ஒரு வாழ்க்கை. விளைவு, ஒரு சமையற்காரியை வைத்து வீட்டு வேலைகள் நடந்தன. அவளைச் சொல்லியும் குற்றமில்லை என நினைத்துக் கொண்டான். 

பெண் குழந்தை வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இவன் ஓடிக்கொண்டே இருக்கிறான்.

இந்த வாழ்க்கை ஏன் இப்படி ஆனது? முதல் மனைவியுடன் சில சமரசங்கள் செய்து கொண்டிருந்தால்... ஒரு வேளை இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கவேண்டாம் எனத் தோன்றும் இவனுக்கு. காலம் கடந்து யோசிப்பதில் எந்த மாற்றங்களும் நிகழப் போவதில்லை என சிந்தனையையும் தூரவைத்துவிடுவான்... சொர்க்கம் என நினைத்து வந்த இடம், இப்போது நரகமாகிக் கொண்டிருக்கிறது அவனுக்கு. 

இதையும் படியுங்கள்:
உடல் எடையை குறைக்க உதவும் நீர் தெரபி!
Lifestyle Story!

சிறுவயதில் அவனின் தந்தை அவனிடம் விளையாட்டாகக் கூறுவார், "டேய் ..உனக்கு எப்போதும் பொண்ணுங்களால பிரச்னை" என்று. அவன் கூட ஏதோ தான் மிகவும் ஸ்மார்ட் ஆக இருக்கிறோம்... நிறைய பெண்கள் தன் பின்னால் வந்து தொந்தரவு செய்வார்கள் என்பதைத்தான் அப்பா இப்படி சொல்கிறார் என்று நினைப்பான். ஆனால் வாழ்க்கைச் சக்கரம் சுழல சுழலத் தான்... அவனுக்கு பிரச்னைகள் என்ன என்பது ஒவ்வொன்றாக புரிந்து கொள்ள முடிந்தது; இல்லை இல்லை... முடிகிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com