மனித உடலில் 70 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற சத்துக்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நீர் சத்தும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சருமத்தின் பளபளப்பிற்கும், உடல் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்புக்கும் , உடல் எடையை குறைக்கவும் ஜப்பானியர்கள் நீர் சிகிச்சை முறையைத்தான் பின்பற்றுகின்றனர்.
காலையில் எழுந்தவுடன் தினமும் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். அந்தத் தண்ணீர் அதிக குளிர்ச்சியாகவும் இல்லாமல் சூடாகவும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். ஏனெனில், குளிர்ந்த நீர் உடலில் கொழுப்புகளாக படிவதுடன், செரிமான செயல்பாட்டில் சிக்கலை உண்டாக்கக் கூடும்.
காலை 5 முதல் 7 மணி வரை பெருங்குடல் சீரான செயல்பாட்டில் இருக்கும் என்பதால் , அந்த நேரம்தான் நீர் சிகிச்சைக்கு ஏற்ற நேரமாகும். தண்ணீர் குடித்து பிறகு 45 நிமிடங்களுக்கு எந்த வகையான உணவும் சாப்பிடக்கூடாது. மேலும், தண்ணீர் குடித்த பின்னரே பல் துலக்க வேண்டும். இதனால் உடலின் உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, உடல் உஷ்ணமும் குறையும்.
பின்னர் காலை உணவை மென்று சாப்பிட வேண்டும். இரண்டு மணி நேர இடைவெளிக்குப் பின்னர் பழச்சாறு அருந்தலாம். சுத்தமான நீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் இவ்வாறு குடிப்பதால் பசியின்மை உண்டாகும். அதனால் அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்வது குறையும். தண்ணீர் இவ்வாறு அருந்துவதால் உடலில் உள்ள கலோரிகள் குறைந்து, எடை குறைவதற்கான சிறந்த வழியாகவும் அமையும். தினமும் நீர் சிகிச்சையை செய்து வந்தால் கொஞ்ச நாட்களிலேயே உடலுக்கு பல நல்ல பலன்கள் உண்டாகும்.
நீர் சிகிச்சையின் இதர நன்மைகள்: இதை தொடர்ச்சியாக பத்து நாட்கள் மேற்கொள்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையில் தண்ணீர் குடிப்பது மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
இரத்த ஓட்டம் சீராக ஆவதால், ஆரோக்கியமான கூந்தல் மற்றும் பளபளப்பான சரும தோற்றம் கிடைக்கும். தலைவலி, சிறுநீரகக் கல் போன்ற பிரச்னைகளுக்கு நீர் சிகிச்சை நல்ல பலன் அளிப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள் மற்றும் புற்றுநோய் பாதித்தவர்கள், நாள்பட்ட நோய்கள், அதற்கு மருந்துகள் எடுப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நீர் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.