அடுத்த வீட்டு மருமகள் லதா வெளியே சென்றதை கவனித்த ஜெயம், அந்த வீட்டிற்கு சென்றாள் வம்படிக்க.
அவள் செல்வதை பார்த்துக் கொண்டு இருந்தாள், அவளுக்கு அடங்கிய அவள் மருமகள் நளினி.
அங்கு சென்ற ஜெயம் பொதுவான விஷயங்களை பற்றி பேசி விட்டு மெதுவாக கேட்டாள், "என்ன பங்கஜம், உன் வீட்டில், நேற்று உன் குரல் அதிகமாக கேட்டதே. ஏதாவது பிரச்சனையா..?"
அனுபவசாலியான பங்கஜம், ஜெயம் எதற்கு வந்திருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டாள்.
அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், பதில் கூறினாள்.
"எனக்கும், என் மருமகள் லதாவிற்கும் தான் சண்டை..!", என்றாள். அப்பொழுது தான் வீடு திரும்பிய லதா, தன் பெயர் அடிப்படுவதை கேட்டு சப்தம் போடாமல் வாசலில் நின்று, அவர்கள் மேலும் பேசுவதை கேட்க தயாரானாள்.
வெளியே தன் அருமை மருமகள் இருப்பதை அறியாத பங்கஜம், "பின்னே என்ன? லதா, அவள் சொல்வதை தான் நான் கேட்க வேண்டும் என்று அதிகாரம் செய்கிறாள். என்னிடம் நடக்குமா, நான் முடியவே முடியாது என்று கோபமாக கத்தி விட்டேன்!"
திட்டுக்கிட்டாள் லதா. அதற்கு மேல் வெளியே நிற்க பொறுமை இல்லாமல், காலிங் பெல்லை அமுக்கினாள்.
பெல் சப்தம் கேட்டு, ஜெயம் எழுந்து கதவை திறக்க, "என்ன அத்தை, என் தலை உருளுது," என்று கேட்டுக் கொண்டே லதா நுழைய, அடுத்த வீட்டு மாமியார் ஜெயத்தின் முகம் வெளிறியது.
"அப்ப நான் வருகிறேன்..!" என்று ஜெயம் கிளம்ப, கொஞ்சம் இரு ஜெயம், "நேற்று சண்டை பற்றி முழுவதும் கேட்டு விட்டு போ," என்ற பங்கஜம், "லதா, நீயும் கேள்!" என்று உடன் கூறினாள்.
"லதா, மாதிரி ஒரு அருமையான மருமகள் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும், ஜெயம்!" என்றாள்.
இதை எதிர் பார்க்காத ஜெயத்திற்கு தூக்கி வாரிப் போட்டது. 'என்ன இவள் மருமகளை பார்த்ததும் சேம் சைடு கோல் போடுகிறாள். என்னவாயிற்று இவளுக்கு. இந்த காலத்தில் யாரையும் நம்ப முடிவதில்லை' என்ற எண்ணம் எல்லாம் மனதில் ஓடியது ஜெயத்திற்கு.
"என்ன ஜெயம், நான் இப்படி பேசுகிறேன் என்று குழப்பமாக இருக்குதா?" என்றாள் பங்கஜம். தொடர்ந்து, "நான் தான் கூறினேன் லதா சரியான பிடிவாதக்காரி என்று. ஏன் தெரியுமா? நான் சரியான நேரத்தில், சரியாக சாப்பிடுவதில்லை. மற்றும் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில்லை என்று கோபம் கொள்கிறாள், சண்டை போடுகிறாள் பிடிவாதமாக. நான் கோபத்தோடு கத்தினாலும் பொருட்படுத்தாது எனக்கு பொறுமையோடு கொடுக்கிறாள். மேலும் என்னை ஒரு வேலை செய்ய விடாமல் தானே பார்த்து பார்த்து செய்து விடுகிறாள்! டெய்லி, ஒரு அரை மணி நேரமாவது என்னுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருப்பாள். பிரமாதமாக சமைப்பாள். அவள் கெட்டிக்காரி. என் பெஸ்ட் பிரெண்ட்!" என்று புகழ்ந்து தள்ளி விட்டாள்.
நெகிழ்ந்து போய், கண்களில் ஆனந்த கண்ணீருடன் வந்து தன்னை கட்டிக் கொண்ட பாசம் மிகுந்த மருமகள் லதாவை ஆர தழுவி அன்பு முத்தம் தந்தாள்.
மேலும் கூறினாள் பங்கஜம். "உங்கள் இருவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம், நான் கூறியது. இதற்கு மூல காரணம் என் அன்பு மாமியார். அந்த காலத்து மனுஷியாக இருந்தாலும், அவரைப் போல் ஒருவரை காண்பது அரிது. அவர் தான், எப்படி பிறரை நடத்துவது என்று விலாவாரியாக, அன்போடு கற்றுக் கொடுத்தவர். அதை நான் பின் பற்றுகிறேன். என்னை விட சூப்பராக செய்கிறாள் என் மருமகள் லதா!" என்று அவளை பெருமிதத்தோடு பார்த்தாள், பங்கஜம்.
லதா பூரித்துப் போய் விட்டாள்.
பிறகு ஜெயம் கிளம்ப எழுந்த போது, "ஜெயம், நான் உன் அக்கா மாதிரி. உனக்கும் வெகு ஜோரான மருமகள் நளினி இருக்கிறாள் என்று எனக்கு தெரியும். நீயும் அவளை உன் பெண் மாதிரியே பார்த்துக் கொள்கிறாய் என்று அன்று நளினி கூறியதைக் கேட்டு நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன், தெரியுமா..!", என்று புகழ்ந்து பேசி வழி அனுப்பி வைத்தாள்.
அடுத்த வீட்டிற்கு விசிட் அடித்து திரும்பியதிலிருந்து, தன் மாமியார் ஜெயம் மிகவும் கனிவுடன் தன்னை நடத்தியதைக் கண்டு திகைத்தாள், மருமகள் நளினி.
ஜெயா சென்றதும், லதாவிடம், "நளினிக்கு நல்லது நடந்தால் நமக்கு மகிழ்ச்சி தானே!", என்று கூறினாள் பங்கஜம்.
இருவரும் மதிய உணவு எடுத்துக் கொண்டனர். சோபாவில் அருகே அருகே அமர்ந்துக் கொண்டு டிவி சீரியலில் மாமியார், மருமகள் போட்டுக் கொண்டிருந்த சண்டை காட்சி பார்த்து, இருவரும் சிரித்தனர் ஒருவரை ஒருவர் பார்த்து.