புதுச்சேரி என்றதுமே பளிச்சென்று நினைவுக்கு வருகிறது, ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம். இந்த அமைதிப் பூங்காவில் ஆன்மிக நெஞ்சங்கள் தியானத்தில் ஈடுபட்டு, மன அமைதி காண்கிறார்கள்.
ஸ்ரீஅரவிந்தர் யார்?
1872, ஆகஸ்ட் 15ம் தேதி கல்கத்தாவில் அவதரித்தார் அரவிந்தர். டாக்டர் கிருஷ்ண தனகோஷ் – ஸ்வர்ணலதா தம்பதியின் மூன்றாவது பிள்ளை. இவருடைய இயற்பெயர் அரவிந்த் அக்ராய்ட் கோஷ்.
அரவிந்தரின் ஆரம்பப் பள்ளிப் படிப்பு அவருடைய இல்லத்தில்தான் துவங்கியது. ஆங்கிலேய மோகம் கொண்டு, ஆத்திகத்தையும், இந்து மத சம்பிரதாயங்களையும் வெறுத்த தந்தையார், தன் மகனுக்கும் ஆங்கில மொழி மூலமாகவே அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கச் செய்தார். தாய்மொழியான வங்காளத்தை அரவிந்தர் பயிலவில்லை.
அதுமட்டுமன்றி, அவருடைய ஏழாவது வயதிலேயே கல்வி கற்க தன் மூத்த இரண்டு மகன்களுடன் அரவிந்தரை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார் தந்தையார். இங்கிலாந்து படிப்பு அரவிந்தருக்கு இந்திய ஆன்மிகக் கருத்துகளை எடுத்துச் சொல்லவில்லை. ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை.
ஆனால் இங்கிலாந்தில் படித்த காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்ததை அறிந்து கொதித்தவர் அரவிந்தர். அச்சமயத்தில் அங்கே இந்தியர்களுக்கு ஆதரவாக ‘தாமரையும், குத்து வாளும்‘ என்ற பெயரில் ஒரு ரகசியப் புரட்சி இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்துடன் தொடர்பு கொண்டார் அரவிந்தர். இந்தியா அடிமைப்பட்டு அல்லலுறுவதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே மிகவும் பெருமை மிக்க ஐ.ஸி.எஸ், படித்து முடித்தாலும், அவர் தேர்வில் பங்கேற்கவில்லை. அவ்வாறு தேர்ச்சி பெற்றுவிட்டால், தாமும் ஆங்கிலேயருக்கு அடிமைப் பணியாளனாக, தாய்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு எதிராக செயல்பட வேண்டியிருக்கும் என்று கருதியவர் அவர்.
ஆகவே இந்தியாவுக்குத் திரும்பிய அவர், விடுதலை வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தேசிய உணர்வு கொண்ட புரட்சி இளைஞர்கள் அவரைத் தங்கள் வழிகாட்டியாகப் பின்பற்றி வந்தனர். ஒருசமயம், குண்டு வீச்சு சம்பவத்தில் கோச் வண்டியில் பயணம் செய்த ஆங்கிலேயர் திருமதி பிரிங்கில் கென்னடியும் அவர் மகனும் இறந்துவிட, ஆங்கிலேய அரசு, இளைஞர்களின் எழுச்சிக் கனலாகத் திகழ்ந்த அரவிந்தர் மீது சந்தேகப்பட்டது.
அரவிந்தர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் தன்னுடைய கட்டுரைகள், சொற்பொழிவுகள் மூலமாக இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஆயிரக்கணக்கான அபிமானிகளைப் பெற்றிருந்தார் அரவிந்தர். அவர்கள் அனைவருமே அவருடைய விடுதலைக்காகப் பிரார்த்தித்துக் கொண்டார்கள். அதற்குப் பலன் கிட்டியது. அரவிந்தர் நிரபராதி என்று தீர்ப்பாகி, விடுவிக்கப்பட்டார்.
ஆனால் வழக்கு நடந்த ஓராண்டு காலத்தில் அலிப்பூர் சிறையில் தான் ‘ஆசிரம வாசம்‘ செய்ததாகச் சொல்கிறார் அரவிந்தர். சிறையிலிருந்து விடுதலையான பிறகு இந்து மத நன்னூல்கள் பலவற்றையும் அவர் படித்தார். தன்னை இந்துமதக் கோட்பாடுகள் நெகிழ வைத்ததையும், தனக்குள்ளிருந்து இறைவன் அடிக்கடி பேசுவதையும் அவரால் பரிபூரணமாக உனர முடிந்தது.
‘கர்மயோகி‘ என்ற தலைப்பில் ஆங்கில வார இதழ் ஒன்றைப் பிரசுரித்தார். தேசியம், மதம், இலக்கியம், அறிவியல் துறைகளில் உழைப்பதே கர்மயோகியின் தலையாய கடமை என்று அறிவித்தார்.
ஆங்கிலேய அரசு அவரைக் கண்காணிக்க ஆரம்பித்தது. இதையறிந்த அரவிந்தர் தன் நண்பர்கள் உதவியுடன் பிரெஞ்சு ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த பாண்டிச்சேரிக்கு வந்தார். இங்குதான் பிரெஞ்சுக்காரரான பால் ரிச்சர்டு மற்றும் அவரது மனைவியார் மிர்ரா இருவரும் அரவிந்தரை சந்தித்தார்கள். மிர்ரா, அரவிந்தரை தன் ஞான குருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழியிலேயே ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டார். இவரே, பின்னாளில் ஸ்ரீஅன்னை என்று அரவிந்தரால் அறிவிக்கப்பட்டு அனைவராலும் வணங்கப் பெற்றார்.
இதற்கிடையில் ஆங்கிலேய அரசு அவரை எப்படியாவது கைது செய்துவிடத் துடித்தது. அவருக்குப் பலவகைகளில் ஆசை காட்டியது. ஆனால் தன் ஆன்மிக சிந்தனை மற்றும் சேவைக்கு பாண்டிச்சேரியே உரிய இடம் என்று அவர் தீர்மானித்தார். தான் அங்கே தங்கியிருப்பதை பகிரங்கமாக அனைவருக்கும் பத்திரிகை வாயிலாகத் தெரிவித்தார். ‘மறைந்து வாழவில்லை‘ என்பதைத் தெளிவுபடுத்தினார்.
இருபத்தெட்டு வயது நிரம்பியிருந்த பிராயத்தில் பதினான்கு வயதான மிருணாளினியை அரவிந்தர் மணந்து கொண்டார். ஆனால் அவரது அரசியல் ஈடுபாடு, தொடர்ந்த சிறைவாசம், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிக்க பாண்டிச்சேரி வாசம் என்று அடுத்தடுத்து அவருடைய பிரிவால் தனித்து விடப்பட்டார் மிருணாளினி. ஆனால் மனைவிக்குப் பல கடிதங்கள் எழுதி அவரையும் ஆன்மிக நெறிக்கு உட்படுத்தினார் அரவிந்தர்.
1926, நவம்பர் 24ம் தேதி அரவிந்தர் ஆசிரமம் துவங்கப்பட்டது. இதை நிர்வகிக்கும் பொறுப்பை ஸ்ரீஅன்னை என்ற மிர்ரா ஏற்றுக் கொண்டார். ஆசிரமம் துவங்கி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீஅரவிந்தர் 1950, டிசம்பர் 5ம் தேதி முக்தி பெற்றார். அவருடைய சமாதி, ஆசிரம வளாகத்திற்குள்ளேயே ஆன்மிக அன்பர்களின் தரிசனத்துக்காகவும், தியானம் பயில்வதற்காகவும் அமைக்கப்பட்டு, இன்றளவும் அழகுறப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அரவிந்தரின் இன்னொரு உருவமாக, ஆன்மிக ஒளியாக, திகழ்ந்த அன்னையின் மறைவுக்கு (17.11.1973) பிறகு அவரது திருவுடலும், ஸ்ரீஅரவிந்தர் சமாதியோடு சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது.
ஸ்ரீஅரவிந்தர் நினைவகத்தில் வணங்கித் துதிப்பவர்கள் அவரது அருளோடு ஸ்ரீஅன்னையின் அருளுக்கும் பாத்திரமாகிறார்கள்.