சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!

shopping in supermarket
shopping in supermarketImage credit - pngtree.com

-பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்

சிவகுமாரும் சித்ராவும் ஆட்டோவில் கணேஷ் சூப்பர் மார்க்கெட் அருகில் வந்து இறங்கினார்கள். ‘’சித்ரா நாம மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போயிட்டு அப்பறம்மா மார்க்கெட் போகலாம்’’ என்றான் சிவகுமார்.

‘’அதெல்லாம் வேண்டாம் சிவா! நாம முதலே சூப்பர் மார்க்கெட் போயிட்டு  அப்பறம்மா கோயிலுக்குப் போகலாம். இப்ப நாம கோயிலுக்குப் போனால்  நேரமாயிடும். பிறகு சூப்பர் மார்க்கெட்டில் ஒண்ணும் வாங்க முடியாது சிவா‘’ என்றாள்.

சிவகுமாரால் சித்ராவிடம் அதற்குமேல் ஒன்றும் பேசமுடியவில்லை. அவள் விரும்பியபடியே இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார்கள். சித்ரா வேடிக்கை பார்த்துக்கொண்டே இரண்டாம் தளத்தில் உள்ள சுடிதார் பிரிவுக்குச் சென்றாள். அவள் ஒவ்வொன்றாகப் பார்த்து நேரமாவதுகூடத் தெரியாமல் ஒருமணி நேரத்திற்குமேல் தனக்குப் பிடித்தமான விலை உயர்ந்த நீல நிற சுடிதார் ஒன்றும் பிரௌன் நிற சுடிதார் ஒன்றும் எடுத்துக்கொண்டாள். அவள் இரண்டு சுடிதாரையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாள், இருந்தாலும் அவற்றை சிவகுமாரிடம் காட்டி இந்த ரெண்டு சுடிதாரையும் எடுத்துக்கவா‘’ என்று கேட்டாள்.

‘’சித்ரா இது ரொம்ப காஸ்டிலியா இருக்கு. ஒண்ணு வேணும்ன்னா இப்ப எடுத்துக்கோயேன்’’ என்றான் சிவகுமார்.

‘’என்ன சிவா நான் ஆசையா கேட்டதையெல்லாம் நீ எனக்கு வாங்கித் தர்றேன்னு சொன்னே. இப்ப இப்படி சொல்றயே‘’ என்றாள்.

சிவகுமார் அதற்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்து மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று சித்ரா நினைத்துக்கொண்டு அவள் எடுத்த இரண்டு சுடிதாரையும் அவனிடம் கொடுத்தாள்.

‘’சித்ரா பர்ச்சஸ் முடிஞ்சதுல்லே போகலாமா?’’ என்று கேட்டான் சிவகுமார்.

‘’ஏன் சிவா அவசரப்படுத்துறே பஸ்ட் :.ப்ளோர் வா போகலாம்’’ என்று அவனை அழைத்துக்கொண்டு முதல் தளம் வந்தாள். அவள் கண்ணில் பட்ட அழகு சாதனப் பொருட்களை அள்ளிக்கொண்டு வந்தாள். ‘’சிவா இந்த ஹேன்ட்பாக் நல்ல இருக்குலே’’ என்று கேட்டுக்கொண்டே விலை உயர்ந்த ஹேன்ட்பாக் ஒன்றையும்  எடுத்துக்கொண்டாள்.

பக்கத்தில் உள்ள கோல்டு கவரிங் பிரிவுக்குச் சென்றாள். ‘’ ’சிவா ஆசையா எனக்குப் பொருத்தமான ஒரு டாலர் செயின் வாங்கிக்கொடு’’ என்று கேட்டாள்.

‘’சித்ரா இப்ப எதுக்கு கவரிங் எல்லாம் டைம் ஆயிடுச்சு. இன்னொரு நாளைக்கு வந்து பார்க்கலாம்’’ என்று சிவகுமார் கூறினான்.

இதையும் படியுங்கள்:
மெட்டி, குங்குமம், வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா..!
shopping in supermarket

‘’சிவா நீ வாங்கித் தரேலேன்னா நான் இனிமேல் உன்கூட ஷாப்பிங் நீ கூப்பிட்டாக்கூட வரமாட்டேன்’’ என்று அவன் காதலி சித்ரா செல்லமாக கோபப்பட்டுக்கொண்டாள்.

‘’சரி சரி வா’’ என்று அவள் விரும்பியபடி கஜலக்ஷ்மி டாலர் உள்ள செயினை வாங்கினான். அதன் விலை ஆயிரத்துக்கு மேல் இருக்கும்.

சிவகுமார் பில்லைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். அதனை சித்ரா முன்பாக அவன் காட்டிக்கொள்ளவில்லை. சித்ரா, சிவகுமார் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்கள். இருவரும் முதலில் நண்பர் களாகத்தான் பழகினார்கள். நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறி சினிமா, பீச் என்று சுற்றினார்கள். சித்ரா எது வாங்க வேண்டுமென்றாலும் சிவகுமாரையும் உடன் அழைத்துச் செல்வாள். அது சிவகுமாருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இருவரும் சூப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியே வந்தார்கள்.    

சித்ரா ‘’சிவா எனக்கு ரொம்பப் பசிக்குது. கிங் மெட்ரோ ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுட்டு போகலாம்’’ என்று கூறினாள். அவன் மறுப்பேதும் கூறாமல் ஹோட்டலுக்குள் சென்று சாப்பிட்டதற்கு முன்னூறு செலுத்திவிட்டு வந்தான்.

ஓராண்டுக்குப் பிறகு. சிவகுமாரும் சித்ராவும் அதே கணேஷ் சூப்பர் மார்கெட் அருகில் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். சித்ரா ‘’என்னங்க நாம் முதல்லே கோயிலுக்குப் போகலாம்’’ என்றாள்.

‘’சித்ரா இன்னிக்கி வெள்ளிக்கிழமை. கோயிலில் கூட்டமாக இருக்கும். பிறகு நாம் சூப்பர் மார்க்கெட் போக நேரம் இருக்காது’’ என்றான் சிவகுமார்.

‘’பரவாயில்லேங்க. இன்னொரு நாளைக்குக்கூட நாம சூப்பர் மார்க்கெட் போய்க்கொள்ளலாம்.முதல்லே கோயிலுக்குப் போகலாம்‘’ என்றாள்.

மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிவகுமார் ‘’சித்ரா கூட்டம் அதிகமா இருக்கு... நாம கட்டணத் தரிசனத்துக்குப் போகலாம்’’ என்று கூறினான்.

‘’வேண்டாம்ங்க நேரமானாலும் பரவாயில்லே. நாம ஃப்ரீ தரிசனத்திலே போகலாம்ங்க’’ என்று அமைதியாகக் கூறினாள்.

கோயிலில் தரிசனம் முடிய  இரவு ஒன்பது மணியாகி விட்டது. சிவகுமார் ’’சித்ரா  டைம்மாயிட்டது. சூப்பர் மார்க்கெட் நாளைக்கு ஈவினிங் வந்து பர்ச்சஸ் பண்ணலாம்’’ என்று கூறினான்.

‘’வேண்டாம்ங்க. இன்னிக்கே பர்ச்சஸ் பண்ணிடுவோம். நாளைக்கு வந்தால் ஆட்டோவுக்கு வேற நாம பணம் கொடுக்கணும்‘’ என்றாள்.

‘என்ன சித்ராவுக்கு என்ன ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் கணக்குப் பார்க்கிறாள். சிக்கனம் பார்க்கிறாள்’ என்று சிவகுமார் மனதுக்குள் சித்ராவை எண்ணி வியந்தான்.

இதையும் படியுங்கள்:
பெண்கள் வளையல் அணிவது அழகுக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும்தான்!
shopping in supermarket

‘’கணேஷ் சூப்பர் மார்க்கெட் நுழைந்தவுடன் சித்ரா பலசரக்கு பிரிவுக்குள் சென்றாள். அவள் வேண்டிய பொருட்களை எடுத்தாள். அவ்வாறு எடுக்கும்போது பொருட்களின் விலையை ஒவ்வொன்றாகப் பார்த்து, விலை குறைவானதைப் பார்த்து எடுத்தாள்.

சிவகுமார் ஏதாவது பொருள் எடுத்துக் கொடுத்தாலும். ‘’நீங்க நான் எடுத்துக் கொடுத்ததை மட்டும் ட்ரெயில் போடுங்கள். விலை பார்த்து எது எடுக்கணும்னு எது எடுக்கக்கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாது’’ என்று கூறினாள்.

சித்ராவுக்கு என்ன ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் சிக்கனம் பார்க்கிறாள் என்று சிவகுமார் மீண்டும் மனதுக்குள் எண்ணி வியந்தான். அன்று இரவு சிவகுமார் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டே இருந்தான். சித்ரா நன்கு தூங்கிக்கொண்டிருந்தாள். அருகில் அவர்களது ஆறு மாத பெண் குழந்தை ரம்யா குட்டி தூங்கிக்கொண்டிருந்தாள்.

சிவகுமாருக்குப் புரிந்தது. ஒரு வருடத்துக்கு முன்பு சித்ரா அவன் காதலியாக இருந்தாள். இப்போது அவள் ரம்யாவுக்கு பொறுப்புள்ள தாய்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com